சிறுகதை - ஒரே ஒரு பூ!

ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா

-கிருஷ்ணா

ன் இப்படிச் செய்தார்?

ஆயிரமாவது முறையாக என்னுள் கேள்வி அலைகள்.

ராகவன் கண்விழித்தால்தான் தெரியும். கட்டிலில் படுத்திருக்கும் கணவனைப் பார்த்தேன். கண்களில் அனிச்சையாய் நீர் சுரந்தது.

நேற்று இரவு எட்டு மணிக்கு வந்த போன் செய்தி மின்னலுடன் கூடிய இடியாய் என்னைத் தாக்கியதை நினைத்தால் உடம்பு இன்னும் நடுங்குகிறது.

தொலைபேசி இலாகாவில் டெலிபோன் ஆபரேட்டராய் வேலை செய்கிறேன் . நேற்று மதியம் இரண்டிலிருந்து இரவு பத்து மணி வரை டூட்டி.

செய்தி அறிந்ததும், ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தவள்தான். இன்னும் வெளியேறவில்லை.

"மேடம், உங்க கணவர் பால்கனியிலிருந்து கீழே விழுந்துட்டார். தலையிலே நல்ல அடி போலிருக்கு. கீதா நர்சிங்ஹோமில் சேர்த்திருக்கோம்."

கீழ்வீட்டு இளைஞன் போனில் கூப்பிட்டுச் சொன்னான். அடுக்கு மாடிக் குடியிருப்பு. அதில் முதல் மாடியில் எங்கள் இருப்பிடம்.

"பால்கனியிலிருந்து விழுந்து விட்டாரா? எப்படி?"

எனக்குள் முதலில் எழுந்த கேள்வி, விசாரிக்க வந்த அனைவர் மனதிலும் கூட உண்டாகியிருப்பதை அவர்களின் பேச்சு உணர்த்தியது.

பால்கனி கைப்பிடிச்சுவருக்கு மேலே, ஒரு முழ உயரத்துக்கு இரும்பு க்ரில் வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கடி உயரமிருக்கும், சுவரும் க்ரில்லும் சேர்ந்தால்.

தானாகவே விழுந்தால்தான் உண்டு, வேண்டுமென்றே! இல்லை யாராவது தூக்கிக் கீழே போட்டால்தான் விழ வாய்ப்புண்டு.

ராகவன் நிச்சயம் தானாகவே ஏறி, எம்பி குதித்திருக்கிறான்.

தற்கொலை?!

அனைவர் மனதிலும் ஊசலாடும் கேள்வி. இவளிடம் நேரடியாய் சொல்லப் பயந்து குசுகுசுவெனப் பேசிக் கொண்டார்கள்.

இதையும் படியுங்கள்:
தெரிஞ்சும் செய்யலனா எப்படி?
ஓவியம்; வேதா

மாமியார் மட்டும் தைரியமாய்க் கேட்டு விட்டாள்.

''ஏன்டீம்மா, உனக்கும் அவனுக்கும் நடுவில் ஏதாவது மனஸ்தாபமா?"

வார்த்தைகளின் உள்ளே கொக்கி போட்ட கேள்வி புரிந்தது.

உன்னுடைய ஏதோ ஒரு செயலோ, சொல்லோ பிடிக்காமல்தான் என் பிள்ளை தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறான்.

அந்த வருத்தத்திலும் கோபம் வந்தது. என்னை சடாரென்று எப்படிக் கழற்றி,  குற்றவாளியாக்கி விட்டார்கள் என்ற துக்கம் பீறிட்டது.

வீட்டுக்கு வீடு வாசற்படி. கணவன், மனைவி என்றான பிறகு, உறவு எப்படி இயல்போ, அதுபோல பிணக்கும் இயல்புதானே?

நேற்று காலையில்கூட பிணக்கு இருந்ததுதான். அல்ப காரணம்.

"எப்பப் பார்த்தாலும் சாம்பாரா? வத்தக் குழம்பு சாப்பிடணும்னு நாக்கு துடிக்குது."

''நான் வைச்ச வத்தக் குழம்புன்னாத்தான் நொட்டை சொல்லுவீங்களே!'

''உண்மையைத்தான் சொல்றேன். எங்கம்மா வைக்கணும். இன்னிக்கு முழுதும் சாப்பிடலாம்."

"ஆமா! உங்கம்மாவுக்கு சமையலில் ஒழுங்காய் வருவதே அது மட்டும்தானே!"

பிறகு உன் வீடு, என் வீடு என்று வாக்குவாதம் வளர்ந்து உர்ரென்று ஆபீஸ் கிளம்பினார்.

இதற்குப் போய் யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா?

"என்னடி பதில் பேச மாட்டேங்கறே? என் புள்ளையை முழுங்கிட்டு உம்முனு நிக்கறமாதிரி நிக்கறே?" என்று சூடாய் வந்த மாமியாரை நோக்கினேன்.

பெற்ற வயிறு! துக்கத்தில் எதைப் பேசுகிறோம் என்று புரியாமல் துடிக்கிறது.

க்கத்து கிராமத்தில் இவர்கள் வசிக்கிறார்கள். டவுன் வசதி கருதி நானும், இவரும் இங்கு தனிக்குடித்தனம் வந்து விட்டோம்.

இவருக்குப் பிள்ளை என்றால், எனக்குக் கணவன். என் உள்ளம் எப்படிக் கனத்துப் போயிருக்கிறது என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

ஆறுதல் சொல்லவில்லை என்றாலும் குற்றம் சாட்டாமலாவது இருக்கலாமே!

செய்தி அறிந்து பார்க்க வந்த இவரின் நண்பர்களும் உறவினர்களும் கண்களில் என் மேல் குற்றத்தை சுமத்தியபடியே பேசுகிறார்களே?

நான் சாய்ந்து அழத் தோளில்லாமல் தவித்தேன். என் பெற்றோர் பம்பாயில். இங்கு வர இரண்டு நாளாகும்.

அதுவரை, இவர்களின் பார்வைகள் எப்படியெல்லாம் என்னை மூச்சுத் திணற வைக்கப் போகிறதோ, கடவுளே!

ஆம், அவர் மட்டும்தான் இப்போது என் துணை! கடவுளே, காப்பாற்று.

டாக்டர் பயமில்லை என்று சொல்லிவிட்டார். முதல் மாடி என்பதால் தப்பித்தாயிற்று. அடி,நினைத்தது போல பலமில்லை. விழுந்த இடமும் புல்வெளித்தரை.

அநேகமாய் இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்விழித்து விடுவாராம். சீக்கிரம் கண் விழித்தால் தேவலை. காரணம் தெரிந்துவிடும்.

'நீதான் காரணம்' என்று சுட்டு விரலை நீட்டி விடுவாரோ?

இருக்காது! எங்களுக்குள் ஏற்படும் சண்டைகள் நீர்க்குமிழி ஆயுளே உடையவை. ஆதர்ச தம்பதிகள் இல்லாவிட்டாலும் அன்பான சதிபதிகள்.

வேறு என்ன பிரச்னை இருக்கும் அவருக்கு? வேறு பெண் தொடர்புகள்.... அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்... சேச்சே... அத்தனை துணிச்சல் கிடையாது இவருக்கு.

கொஞ்சம் பயந்த சுபாவம்தான். முன்பு தாய்க்கு, இப்போது தாரத்துக்கு ஓரளவு கட்டுப்படுபவர்.

இதையும் படியுங்கள்:
சுற்றுலா செல்லப் போகிறீர்களா? இதைப் படித்துவிட்டுப் புறப்படுங்கள்!
ஓவியம்; வேதா

ஆபீசில் ஏதாவது பிரச்னையோ? பணம் கையாடல், லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்வது, பிரமோஷன் கிடைக்காத வருத்தம்...

மாமனார் யாரிடமோ விசாரித்துக்கொண்டிருந்தார். இவரின் ஆபீஸ் நண்பர் தான் என்பதை குரல் சொன்னது. பெயர் கூட ராமமூர்த்தியோ... ராமகிருஷ்ணனோ...

"இந்த வருஷம் இவனுக்கு ப்ரமோஷன் கிடைக்கணும் சார். ரெண்டு பேருக்குள்ள கடுமையான போட்டி. நேத்துகூட ரூமர். ராகவனுக்குக் கிடைக்காதோ அப்படீன்னு பேச்சு. ஒருவேளை..."

இருக்காது! ஒரு பதவி உயர்வு மறுப்பிற்காக உயிரை விடுவார்களோ யாராவது?  இரண்டு நாளோ, ஒரு வாரமோ வருத்தப்படலாம். அதுதான் மனித இயல்பு.

ஒருவேளை ஏமாற்றம் இவர் மனதை மிகவும் பாதித்திருக்குமோ? அத்தனை கோழையா இவர்?

கடவுளே, சீக்கிரம் கண் விழிக்கட்டும் இவர்!

தோ அசைவு தெரிகிறது இவரிடம். கண் கூட, திறப்பதற்குப் பிரயாசைப்படுகிறது.

இதோ, கண் இமை விரிந்து... அப்பா! நெஞ்சு விம்ம, தாலியை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டேன்.

கண்களால் என்னை, என் முகத்தை ஆராய்ந்தார். சுற்றி வரப் பார்த்தார்.

"ஆஸ்பத்திரியா?"

தலையசைத்தேன் அழுகையுடன். ஏன் இப்படிச் செய்து, இத்தனை நேரம் தவிக்க வைத்துவிட்டீர்கள்?

அழ, அழ மனசின் பாரம் கண்ணின் வழியே கரைய, என் மனதில் மலர்ச்சி பரவுவதை உணர்ந்தேன்.

ஏன்,ஏன் ஏன்? என்ற கேள்வி மட்டும் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட. பாக்குத் தூளாய்...

அவர் பார்வை சுழன்று அந்த அறையில் இருந்த காலண்டரில் நிலைத்தது. டெய்லி ஷீட் காலண்டர்.

நானும் பார்த்தேன். அட, தேதி மூன்று! எங்கள் திருமண நாள். இந்தப் பதட்டத்தில் மறந்தே போய்விட்டது. இந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று போன வாரம் முதல் திட்டம் போட்டுக் காத்திருந்தோம். கடைசியில் இப்படி ஆஸ்பத்திரி அறையில்...

"சாரி டியர்" என்றார் மெதுவாய். குரல் நைந்து மெல்லியதாய் வந்தது.

"எதுக்கு?"

"அந்த ஒற்றைப் பூவை கொடுக்காததுக்கு" என்றதும் பளீரென என்னுள்ளிருந்த திரை விலகி ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன் .

போன வாரம், இரவு சாப்பாடு முடிந்து பால்கனியில் அமர்ந்திருந்தோம்.

"நம்ம கல்யாண நாளுக்கு என்ன பரிசு வேணும் உனக்கு?"

நான் யோசித்தபடி வெளியே பார்த்தேன்.

"ம்... ஒரு பூ..." என்றேன் குறும்பாய்.

"ஒண்ணு என்ன, ஆயிரம் பூ வாங்கித் தரேன்."

''ம்ஹும், ஒரே ஒரு பூ.''

"என்ன பூ?"

"அதோ, காத்துல ஆடி, ஆடிக் கூப்பிடுதே செம்பருத்தி! அது மட்டும் போதும்" என்றேன் .

கீழே எங்கள் மாடி போர்ஷனுக்கு அடியில், சற்று தள்ளி நன்கு செழித்து வளர்ந்திருந்தது செம்பருத்தி.

உபயோகப்படாத மாத்திரையோ,  இல்லை உரமோ தெரியவில்லை, நன்கு உயரமாய் வளர்ந்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
தேவ மருந்து தவசிக்கீரை!
ஓவியம்; வேதா

கீழ் வீட்டுக்காரர்கள் தங்களால் எட்டும் அளவு பூவைப் பறித்து விடுவார்கள். அவர்கள் வைத்த செடிதான் அது.

ஆனால் உச்சியில், பறிக்க முடியாத உயரத்தில், எங்கள் பால்கனிக்கு எதிரே எப்போதும் ஒரு பூ மலர்ந்து தலையசைக்கும். அடுத்த நாளே வாடி உதிரும். மீண்டும் வேறொரு கிளையில் அதே உயரத்தில் பூக்கும். பால்கனியிலிருந்து எட்டிப் பறிக்க முயன்றால் முடியாது என்னால். இடை வெளி கொஞ்சம் அதிகம்.

அதைப் பறிக்க நேற்று இரவு இவர் பால் கனி சுவர் ஏறி, அந்தப் பக்கம் இறங்கி, உடம்பை வளைத்து, கைநீட்டி, தடுமாறி, மைகாட்!

எனக்காக! நான் ஏதோ விளையாட்டாய் சொன்னதை நினைத்து... இத்தனை பிரியமா?

என் மேல் இவர் வைத்திருக்கும் அன்பை நினைத்த பெருமை, என் பைத்தியக்கார ஆசையை நிறைவேற்ற முயன்று விழுந்த இவரின் பைத்தியக்கார செயலை நினைத்த கோபம், இவரைப் பற்றி இத்தனை நேரம் தவறாய் நினைத்த வெட்கம்... அதன் மேலே ஏற்படும் ஒரு பிரவாக உணர்ச்சி, இதுவரை நான் அனுபவித்திராத கலவை உணர்வு...

சீ போ பைத்தியம்!" என்றேன் என் இதயத்தின் கனிவு முழுதையும் வெளிப்படுத்தி.

அவர் புன்னகைத்தார்.

பின்குறிப்பு:-

கல்கி 06  நவம்பர் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com