சிறுகதை – பெண்!

ஓவியம்; கரோ
ஓவியம்; கரோ

-உதாதிபன்

ஸ்வர்ணா!

தாழம்பூ நிறத்தில், கோயில் சிற்பம் போன்ற உடல்வாகு. நெற்றியில் புரளும் முடிக்கற்றை. பேசும் கண்கள். குழி விழும் கன்னம், ஈர்க்கும் உதடுகள்... கொள்ளை கொள்ளும் அழகு... அவளின் அழகுதானே என்னை இத்தனை தூரம் வீழ்த்தியிருக்கிறது... அதனால்தானே அமைதியான நீரோடையில் இருந்த எனது உள்ளம் ஆர்ப்பரிக்கும் கடலாகிவிட்டது... இதுதான் விதியா?

சென்ற வருடம் யூனிவர்ஸிடியில் முதலாவதாகத் தேறியதற்குக் கிடைத்த கோல்டு மெடல் எதிரேயிருந்த சுவரில் ஊஞ்சலாடி மின்னியது. அதைக் கழுத்தில் அணிவித்து பிரின்ஸ்பால் பாராட்டிய வார்த்தைகள் இப்பொழுதும் காதில் ஒலித்தன.

ஆம் வெரிப்ரௌட் ஆப் யூ சந்துரு...

அன்று பெருமைப்பட்ட அதே பிரின்ஸ்பால் சில தினங்களுக்கு முன் அழைத்து, 'என்னாயிற்று சந்துரு?  சமீபத்திய உனது போக்கு திருப்திகரமாய் இல்லை...' என்றார் கனிவும், கண்டிப்புமாய்.

அவருக்கு மட்டுமல்ல, எனக்கே என் மேல் திருப்தியில்லை. என்ன செய்ய? சிந்தித்தேன்.

ஸ்வர்ணாவை மறக்க வேண்டும்.. அதுதான் உசிதம். அவளை மறந்து படிக்க வேண்டும். படித்து முன்னேறி...

'ஸாரி மிஸ்டர் சந்துரு. நான் உங்களைக் காதலிக்கலை!'

சற்று முன் எனக்குள்ளே தோன்றின விவேகம், உறுதியெல்லாம் நீர்க்குமிழியாய் உடைய திரும்பவும் அவளின் நினைவில் அமிழ்ந்தேன். நெஞ்சு கனத்தது. நான் இனி ஆக்கபூர்வமான மனிதனாக உருப்பெற்று வாழ வேண்டுமானால் ஸ்வர்ணா தேவை. அவளின் நேசம் தேவை என்பது நிதர்சனமாய்ப் புரிந்தது.

மீண்டுமொருமுறை அவளிடம் சென்று என் தவிப்பைச் சொல்லப் போகிறேன். வேறு வழி தோன்றவில்லை.

தேதோ சிந்தனையிலேயே மாலையானது. எழுந்து குளித்து, அழகாக உடுத்திக்கொண்டு புறப்பட்டேன்.

கல்லூரி முடிந்து என் இனிய தேவதை தனது தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள். சமீபமாய் வர, இதயம் படபடக்க, "ஸ்வர்ணா!" என்றேன்.

அவள் திரும்பினாள். "ஒரு நிமிஷம்!''

எனது அழைப்பை சற்று நேரத் தயக்கத்துக்குப் பின் ஏற்று, பிரிந்து வந்தாள்.

"உங்களோட தனியா பேசணும்" என்றேன்.

வேப்பமரத்தின் நிழலை அடைந்தோம். நான் சொல்லப் போவதை அவள் கணித்திருப்பாள்.

"நீங்க அன்னைக்கு மறுத்துட்டதில் இருந்து என் நிம்மதியே பறிபோயிடுச்சு. ஒழுங்கா சாப்பிட முடியலை. படிக்க முடியலை..."

"அதுக்கு நானென்ன பண்றது? அப்ப சொன்ன பதில் பதில்தான் இப்பவும். நான் உங்களைக் காதலிக்கலே... தர்மசங்கடமான நிலையை உருவாக்காதீங்க மிஸ்டர் சந்துரு. வற்புறுத்திக் காதலை உருவாக்க முடியாது. புரிஞ்சிக்குங்க ப்ளீஸ்... இனி இந்த மாதிரி பேச்சை எடுக்காதீங்க... நான் வர்றேன்!"

அவள் அகன்றாள்.

நடைபிணமாய் ஹாஸ்டலை நோக்கித் திரும்பினேன். 'காதல் தோல்வியின் ரணத்தில் வெந்து துடிப்பதைவிட தூக்க மாத்திரையோ, ரயில் தண்டவாளமோ மேல் அல்லவா?'

இந்த எண்ணம் உறுதிப்படுவதற்குள் சிரமப்பட்டுக் கலைத்தேன்.

'படிப்பை நிறுத்திவிட்டுக் கல்லூரியிலிருந்து போய்விடலாமா? எதிர்காலம்...? அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இங்கிருந்தாலும் என்னால் இனி கவனம் சிதறாமல் படித்துப் பட்டம் பெற முடியாது. ஸ்வர்ணாவின் நினைவு வதைத்துக்கொண்டேயிருக்கும். விலகினாலாவது அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கலாம்.

இதையும் படியுங்கள்:
விசாகப்பட்டினத்தைச் சுற்றிப் பார்ப்போமா?
ஓவியம்; கரோ

எனது அறையை வந்தடைந்ததும் காகிதம் எடுத்து எழுதினேன். 'மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு.... என்னால் படிப்பைத் தொடர முடியாத காரணத்தினால் இத்துடன்...'

அதற்குள் கல்லூரியிலிருந்து ரூம் மேட் மனோகர் வந்தான்.

“என்னடா எழுதறே?"

சொன்னேன். உடனே அவன் ஆத்திரமானான். காகிதத்தைப் பிடுங்கி கிழித்தெறிந்து விட்டுப் போய்விட்டான்..

''வாட் நான்சென்ஸ்! 'டிஸ்கன்டினியூ ' பண்ணிட்டுப் போற அளவுக்கு என்னாயிடுச்சி உங்களுக்கு?"

ஸ்வர்ணா... பாஸ்கட் பால் கோர்ட்டுக்கருகே வேப்பமர நிழலுக்கு வரச் சொன்னது இப்படி அதட்டத்தானா...? மனோ வந்து சொன்னபோது நான் என்னவெல்லாமோ நினைத்துக்கொண்டு கிளம்பி வந்திருந்தேன்...

''அனுபவிக்கிறவனுக்குத்தான் காதல் தோல்வியோட நரக வேதனை தெரியும் ஸ்வர்ணா..."

''பைத்தியக்காரத்தனமா பேசாதீங்க சந்துரு. இந்த ஸ்வர்ணா இல்லாட்டி வேற புவனா இல்ல சுகுணா... அப்படியிருக்கறப்ப இவ்வளவு பெரிய சோகம், விரக்தி எதுக்கு? இதனால நான் காதலைக் கொச்சைப்படுத்தறேன்னு அர்த்தமில்லை. வாழ்க்கையையே பாதிக்கிற நிலை வந்ததுக்கப்புறம் அதை விட்டொழிக்கிறதுதான் புத்திசாலித்தனம்னு சொல்ல வர்றேன். தன்மானத்தைச் சாகடிச்சிட்டு இப்படி ஒரு முடிவுக்கு வரலாமா...?"

''உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றேன் லேசான அவமான உணர்வோடு.

''மனோதான் வந்து சொன்னார். படிப்பை நிறுத்திட்டுப் போறேன்னு சொல்றீங்களே! உங்களையே நம்பியிருக்கிற குடும்பத்தோட நிலைமை என்னாகும்? உங்க பலவீனத்தால உங்க குடும்பமும் கண்ணீர் சிந்தணுமா? தற்காலிகக் கவலைகளைவிட எதிர்காலத்தைப் பத்தின சிந்தனை முக்கியம். அதனால சஞ்சலங்களைத் தூக்கிப் போட்டுட்டு புக்ஸை கையில எடுங்க சந்துரு... இந்த வருஷமும் நீங்க தங்கப் பதக்கம் வாங்கணும்..."

ஸ்வர்ணா பேசி முடித்துவிட்டுப் போய் விட்டாள். அவள் வார்த்தைகள் மட்டும் அங்கேயே சுற்றி வந்தன.'

கண்மூடி வலி தாங்கினேன். சஞ்சலங்கள் மறைய மனம் ஒருமுகமானது.

பின்குறிப்பு:-

கல்கி 18  ஜூலை 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com