சிறுகதை - பிளஸ் 1

சிறுகதை - பிளஸ் 1

-முகுந்தன்

“அம்பாசமுத்திரம் சித்தப்பா மத்தியானம் வந்திருந்தார்," என்றபடியே முரளியிடம் காப்பி தம்ளரை நீட்டினாள் சுகந்தி.

கழுத்தை இறுக்கிய 'டை'யின் முடிச்சைத் தளர்த்திக்கொண்டே, "கரப்பு அரிச்ச மாதிரி தலையும் அவுட்டுச் சிரிப்புமாக இருப்பாரே- அவர்தானே? என்ன விஷயமாம்?" என்று கேட்டான்.

கணவனின் கேலியைப் பொருட்படுத்தவில்லை சுகந்தி. "அவங்க ஊருக்குப் பக்கத்திலே ஒரு அம்மன் கோயிலாம். ஆறு எலுமிச்சம்பழம் வாங்கிட்டுப் போய் அங்கே விளக்கேற்றினால் நிச்சயமாகக் குழந்தை பிறக்குமாம்..."

"சொல்லிட்டாரில்லே...? ராத்திரியே புறப்படுவோமா?"

"கேலி பண்ணாதீங்க... நமக்குக் கல்யாணமாகி மூணு வருஷமாகிறது..."

"இன்னும் ரெண்டு வருஷம் ஆனால்தான் என்ன...? நமக்குக் கட்டாயம் குழந்தை பாக்கியம் உண்டு! கவலைப்படாதே..."

"நீங்க சொல்லிடுவீங்க... கல்யாணம், விசேஷம்னு போற இடத்திலே எல்லாரும் என்னைத்தானே ஒரு மாதிரியாய் பார்க்கிறாங்க, பேசறாங்க..." சொல்லும்போதே கண்களில் நீர் முட்டியது.

அவளது திருப்திக்காக, கோயிலுக்குப் போவதென்று தீர்மானித்தான்.

கோயிலுக்கு அருகிலேயே கூடை கூடையாக எலுமிச்சம் பழங்கள். சுறுசுறுப்பான வியாபாரம்.

"என்னது! ஒரு பழம் ரெண்டு ரூபாயா? பகல் கொள்ளையாக இருக்குதே!" என்று கடைக்காரனிடம் சண்டைக்குப் போனான் முரளி.

''த பாருங்க... இஷ்டமிருந்தால் கை வையுங்க... அநாவசியப் பேச்செல்லாம் வேணாம்...''

"என்னங்க நீங்க! இவ்வளவு பணம் செலவழிச்சுக்கிட்டு வந்திருக்கோம். கேவலம் இதுக்குப் போய்க் கணக்குப் பார்க்கறீங்களே!" என்று சுகந்தி கடிந்துகொள்ளவும் முரளி அமைதியானான்.

இதையும் படியுங்கள்:
பொன்னான 15 புத்தர் மொழிகள்...! வாழ்க்கைக்கான நல்வழி பாடங்கள்!
சிறுகதை - பிளஸ் 1

கோயிலில் விளக்கேற்றும்போதுதான் கவனித்தாள் சுகந்தி. ஏழு பழங்கள் இருந்தன.

''ஒண்ணு அதிகப்படியாக இருக்கே. ஏது?"

முரளி சிரித்தான். "கடைக்காரன் அசந்த சமயம் பார்த்து நான்தான் அபேஸ் பண்ணினேன்... பரவாயில்லை, இதையும் சேர்த்து விளக்கேற்று!"

முரளியின் பிடிவாத சுபாவம் அறிந்தவளாதலால் ஏழு பழங்களிலும் விளக்கேற்றி அம்மனைக் கும்பிட்டாள் சுகந்தி.

ர்ஸிங்ஹோம்.

பதைபதைக்கும் மனசுடன் காத்திருந்தான் முரளி. 'கூடுதலாக ஒரு பழத்தைத் திருடி விளக்கேற்றச் சொன்னோமே... இரட்டையாகப் பிறந்து விடுமோ?'

அறைக்குள்ளிருந்து புயலாக வந்தாள் டாக்டரம்மா.

"கங்கிராட்ஸ்! பையன் பிறந்திருக்கான்... அதிர்ஷ்டசாலியாக இருப்பான்!... காரணம் பிளஸ் ஒன்!'' -  வலது கைக் கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டுப் போனாள். குழம்பினான்.

இருபது நிமிடங்களுக்குப் பிறகே குழந்தையைப் பார்க்க முடிந்தது.

டாக்டர் சொன்னது உண்மைதான். குழந்தையின் வலது கையில் 'வி' போல இரண்டு கட்டை விரல்கள்!

பின்குறிப்பு:-

கல்கி 30 அக்டோபர் 1994இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியி ருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com