சிறுகதை – பரிசு!

short story...
short story...

-இரா. முருகன்

"சீக்கிரமா வா... நிறைய இடம் போக வேண்டி இருக்கு..."

காரில் இருந்தபடியே குரானா இரைந்தான். டிரைவர். நீலக் கோட்டும், சிவப்புத் தலைப் பாகையுமாக ஆறடி உயரத்தில் சர்தார்ஜி.

காஷ்மிலான் ஸ்வெட்டரை முழங்கைக்குக் கீழே இழுத்து விட்டபடி காரில் ஏறினேன். பகல் சூரியன் தட்டுப்படாத டிசம்பர் முப்பத் தொண்ணு. தில்லி ஏகமாகக் குளிர்ந்து கிடந்தது.

குரானாவையும் என்னையும் சேர்த்துப் பார்க்கிற யாரும், அவன் அதிகாரி, நான் ஊழியன் என்று நினைக்கலாம்... நினைத்து விட்டுப் போகட்டும். அவரவர் ஆகிருதி அப்படி. நான் ஐந்தரை அடிக் கருப்பன். நல்ல கம்பளி உடுப்பு வாங்கிச் சம்பாத்தியத்தைச் செலவழித்து ஆயுசு முழுதும் தில்லியில் இருக்கப் போவதில்லை. இரண்டு குளிர் காலம் இதே ஸ்வெட்டரோடு ஓட்டியாகி விட்டது. இதுவும் முடிந்து போனால், அடுத்த வருடம் ஊரைப் பார்க்கக் கிளம்பி விடலாம்...

"என்ன பேசாம வரே? அதிகாரி எல்லாம் டிரைவர்கிட்டே பேச்சு வச்சுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்களா?"

குரானா வாயைப் பிடுங்குகிறான். எதையாவது நான் உளறி, எக்குத்தப்பாக அவன் புரிந்துகொண்டால் வேறு வினையே வேண்டாம்.

சர்தார்ஜிக்கு சுபாவமாகவே கோபம் மூக்குக்கு மேலே.

காலையிலிருந்தே பொழுது சரியில்லை. இருந்திருந்தால், ஊருக்கு முன்னால் ஆபீஸுக்கு வந்து, ஜெனரல் மானேஜர் கண்ணில் பட்டுத் தொலைத்திருக்க மாட்டேன்.

"பி.ஆர்.ஓ, சின்ஹா திடீர்னு மட்டம் போட்டுட்டான். வருஷத்துலே கடைசி நாள்... முக்கியமான வாடிக்கையாளர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு கொண்டு கொடுக்கணும்... நீ குரானாவோட இப்பவே காரிலே கிளம்பு... அவனுக்கு எல்லா இடமும் தெரியும்... பிடி லிஸ்டை..."

லிஸ்டில் இன்னும் நாலு பக்கம் பாக்கி உண்டு.

பின் சீட்டில் திரும்பிப் பார்த்தேன். வண்ணக் காகிதம் சுற்றிய அட்டைப் பெட்டிகள். மஞ்சள் செலபோன் காகிதம் சுற்றிய கூடைகளில் ஆப்பிளும், ஆரஞ்சும்... டிக்கியில் காலண்டர், டைரி என்று நிறைத்திருக்கிறது.

ஒவ்வொருவராகப் படி ஏறிப் போய்ப் பார்த்துக் கொடுத்து, கம்பெனியின் வாழ்த்துகளைச் சொல்லி...

கிரேட்டர் கைலாஷில் முதல் செக்டாரில் மிசஸ் பூனம் கன்னா பங்களாவில் ஆரம்பித்தபொழுது பத்து மணி. எம்.டிக்கு வேண்டப்பட்ட குடும்பம்.

பத்து நிமிடம் வாசலில் நின்று மணியடித்து உள்ளே போனால், கன்றுக்குட்டி சைஸ் நாயைக் கட்டிப் போடாமல் அது துரத்தி வந்து...

கால்சராய் ஓரம் கிழிபட்டு, கட்டைவிரல் மேஜையில் இடித்து விண்விண்னென்று தெறிக்க, புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நீட்டிய பரிசை, அசிரத்தையாகக் கையைக் காட்டி மேஜையில் விட்டு விட்டுப் போகச் சொன்ன பூனைக்கண்ணி பூனம்கன்னா.

''ரிலாக்ஸ்...ரிலாக்ஸ்..." என்று நாயை அதிர்ச்சியடையாமல் சமாதானப்படுத்துவதில் அவள் மும்முரமாக இருக்க, வெளியே வந்தபோது காரில் உட்கார்ந்தபடி குரானா சிரிக்கிறான்..."என்ன... முழுசா வந்தியா?"

டிபன்ஸ் காலனியில் மேஜர் டிரஹான் பங்களா. பச்சைப் பசேல் தோட்டத்தைக் கடந்து உள்ளே நடக்க "அங்கியே நில்லு... கம்பள விரிப்பை இப்பத்தான் சுத்தம் பண்ணியிருக்கு..." ஹூக்கா புகையோடு இடிக்குரலில் ரிடையர்ட் மேஜர்

பஞ்சாபி வேலைக்காரி என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு போனதை எல்லாம் அரை வினாடி பார்த்து, "இந்த மாதிரி ஆயிரம் கச்சடா வந்திருக்கு..."என்று நடந்து போகிறவரின் முதுகுக்குப் பின்னால், வாசலிலேயோ நின்று வாழ்த்துப் பாட வேண்டிய கஷ்டம். கம்பெனி வேலை... நாய் வேஷம் போட்டாகிவிட்டது...

லாஜ்பத் நகரில் மிஸ்டர் மிட்டல் வீடு ஏதோ மினிஸ்ட்ரியில் சீப்செகரடரியாக இருந்து ஓய்வு பெற்று, இப்போது பல நிறுவனங்களுக்கு நிதி ஆலோசகர்.

"எத்தனை பேருக்குப் பரிசு போகிறது... எவ்வளவு செலவானது... கம்பெனியில் இந்த வருஷம் என்ன லாபம் எதிர்பார்க்கப்படுகிறது? புவனேஷ்வர் யூனிட்டில் என்ன தகராறு...?" கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்து எடுத்தவர், மரியாதைக்குக் கூட உட்காரச் சொல்லவில்லை.

"அதிகாரி என்கிறாய்... ட்ரிம்மாக வர வேண்டாமா... பால்காரன் மாதிரி இப்படிப் பச்சை ஸ்வெட்டரும், பாலீஷ் போடாத ஷூவுமாக நிற்கிறாயே" என்று கிண்டல் வேறு.

பேசாமல் குரானாவையே உள்ளே அனுப்பியிருக்கலாம்.

அவன் ஜமீன்தார்போல காரை விட்டு இறங்கவே இல்லை.

"இப்படிச் சுத்தணும்னு தெரிஞ்சுதான் காலையிலேயே ஒரு பிடி பிடிச்சுட்டு வந்துட்டேன்... "

குரானா ஏப்பம் விட, காலையில் இரண்டு ரொட்டியோடு காய்கிற என் வயிறு இரைகிறது.

லோதி எஸ்டேட்டில் ராமகிருஷ்ணன் வீடு. கம்பெனியின் டைரக்டரும்கூட. “தமிழா நீ... நல்லதாப் போச்சு..."

அட்டைப் பெட்டியை நானே அலமாரியில் வைத்து, பழங்களை, ஃபிரிட்ஜில் அடுக்கி, காலண்டரைப் பிரித்துச் சுவரில் மாட்டி... சுடச்சுட தேநீர் குடித்தபடி வேலையை மேற்பார்வையிடுகிற மிசஸ் ராமகிருஷ்ணன்.

இதையும் படியுங்கள்:
5 வகையான கார்லிக் (பூண்டு) சட்னி செய்யலாமா?
short story...

ரவு கனமாகக் கவிகிறது. குளிரும்தான். சதாசிவம் மெஸ் மூடியிருக்கும். பசியும் தாகமுமாகப் புத்தாண்டு பிறக்கப் போகிறது.

"இறங்கு..." குரானா சொல்கிறான். இந்த அழுக்குச் சந்தில் எந்த வி.ஐ.பி?

கையைப் பிடித்து உள்ளே தரதரவென்று இழுத்துப் போகிறான்.  மங்கலான வெளிச்சத்தில் எழுந்து நிற்கும் சர்தாரிணி. குரானாவின் தோளைப் பிடித்து எக்கித் தொங்கும் ஐந்து வயதுப் பையன்.

"சாப் பசியா இருக்கார்... எடுத்துவை சீக்கிரமா..."

குரானா கோட்டைக் கழற்றிக் கதவில் மாட்ட அவன் சட்டைக் கிழிசல் கண்ணில் படுகிறது.

"என்ன பாக்கறே.. இப்படி உக்காரு... டிரைவர் வீட்டுலே அதிகாரி சாப்பிட்டா ஒண்ணும் குறைஞ்சு போக மாட்டார்."

சுடச்சுடத் தட்டில் விழுகிற ரொட்டியும் பருப்பும்.

"வா... உன்னைக் கொண்டு விட்டுட்டுக் காரை கேரேஜ்லே போடணும்..."

குரானா முன்னால் நடக்க, முன்குடுமி வைத்த சின்னப் பையன் எதையோ கொண்டு வந்து எனக்கு முன் நீட்டுகிறான். எதுவும் எழுதாத போன வருஷ டைரி

"பேவகூப்பையா... உனக்கு விளையாடக் கொடுத்தா..."

குரானாவைக் கையைக் காட்டி நிறுத்திவிட்டு, டைரியைப் பத்திரமாக சட்டைப்பையில் வைக்கிறேன்.

“ஹாப்பி நியூ இயர்..."

சின்னக் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு நடக்கிறேன். குளிர் இதமாக இருக்கிறது.

 பின்குறிப்பு:-

கல்கி 07  ஜனவரி 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com