-லக்ஷ்மன் சங்கர்
“அப்பா, குட் மார்னிங்.”
நியூஸ் பேப்பரில் ஆழ்ந்திருந்த ராமன் தலையைத் தூக்கி மகனைப் பார்த்தார்.
“குட் மார்னிங் க்ரிஷ், வொர்க்அவுட் பண்ணிட்டியா?”
“10 நிமிஷம் எக்ஸ்ட்ராவே பண்ணிட்டேன்” என்றான் அவருடைய ஒரே மகன். க்ரிஷ் சி. ஏ. ரேங்க்ஹோல்டர் – ஆல் இண்டியாவில் நாலாவது. ஒரு பிரைவேட் கம்பெனியில் இப்போது அசிஸ்டன்ட் ஜி எம் மாக இருக்கிறான். 28 வயது. எல்லாரும் தேடும், தகுதி வாய்ந்த பிரம்மச்சாரி. “அப்பா, எனக்கு 50 லாக்ஸ் லோன் வேணும் – ரெண்டு மாசத்துக்கு.”
மகனிடம் அவருக்குப் பிடித்த குணாதிசயங்களில் இப்படி நேரடியாக விஷயத்துக்கு வருவதும் ஒன்று.
“வாவ், கேர்ள் ஃப்ரெண்ட்டுக்கு கார் வாங்கித் தரப் போறியா?”
அவன் புன்சிரித்தான். “அதைவிட அட்ராக்ட்டிவ் ரீஸன் – ஸ்டாக் மார்க்கெட்ல டிரேடிங் பண்ணப் போறேன்.”
“ஏன் ரெண்டு மாசத்துக்கு மட்டும் லோன்?”
“அதுக்குள்ள 10 பெர்சென்ட் லாபம் பண்ணிடுவேன் – 5 லாக்ஸ். அந்த லாபம்தான் என்னோட வருங்கால முதலீடு. அந்தப் பணத்தை டிரேடிங் செய்ய மட்டும் யூஸ் பண்ணுவேன்.”
“ரெண்டு மாசத்துல 10 பெர்சென்ட்டா?”
“ஆமாம்ப்பா, ஆப்ஷன்ஸ் டிரேடிங்.”
அவருக்கு ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் அவ்வளவாகத் தெரியாது. நம்பகமான 10-12 கம்பெனிகளின் பங்குகளை அவ்வப்போது வாங்கிச் சேர்த்திருந்தார் – நீண்ட கால முதலீடாக.
“க்ரிஷ், மை அட்வைஸ் டு யூ – டிரேடிங் லாபகரமா இருக்காது. டெய்லி ஸ்டாக் மார்க்கெட்டை பிரெடிக்ட் பண்றது முடியாத காரியம். பெரிய தலைகள் எல்லா மார்க்கெட்டிலேயும் விளையாடுவாங்க – பொலிடிகல் லீடர்ஸ், பிசினஸ் லீடர்ஸ், பெரிய பாங்க்ஸ். இவங்கதான் ஜெயிக்கறவங்க, ஏன்னா, இவங்க பண்ற முடிவுகள் மார்க்கெட்டைப் பாதிக்கும். அது எந்தவிதத்துல பாதிக்கும்னு அவங்களுக்குத்தான் தெரியும். வீ கான்ட் பிளே வித் தெம்...”
“அப்பா, உங்களுக்கு ஸ்மிதா தீபக் தெரியுமா? டாப் 5ல இருக்கற அட்வைஸர். அவங்க குடுக்கற ரெக்கமென்டேஷன்ஸதான் நா ஃபாலோ பண்ணப் போறேன். ஆன்லைன் அட்வைஸ். மாசம் 15,000 ஃபீஸ். ரெண்டு மாசம் ஸப்ஸ்க்கரைப் பண்ணப் போறேன். அதுக்கு என்கிட்ட பணம் இருக்கு.”
“ஐ ஆம் நாட் கன்வின்ஸ்ட்.” அவர் சொன்னார் “இருந்தாலும் லோன் தரேன். மத்தியானம் நெஃப்ட் பண்றேன். ஒன் அக்கௌன்ட் டீடெயில்ஸ்ஸ வாட்ஸ்ஆப் பண்ணு.”
“தாங்க்ஸ் அப்பா.”
மத்தியானம் அவர் இரண்டு வேலைகளைச் செய்தார் – ஒன்று, மகனுடைய அக்கௌன்ட்டுக்கு நெஃப்ட். இரண்டாவது, ஸ்மிதா தீபக் இணைய தளத்தில் தன் பெயரிலும் இரண்டு மாதத்திற்கு சந்தா.
இரண்டு மாதம் போனதே தெரியவில்லை
சரியாக 61 ஆம் நாள் அவருடைய பாங்கிலிருந்து எஸ் எம் எஸ் – ரூபாய் 50 லட்சம் வருகை.
மகனுக்கு ஃபோன் செய்தார் “ ஹாய் க்ரிஷ், காட் தி ட்ரான்ஸ்பர். சொன்ன டயத்துக்கு லோனை ரிட்டர்ன் பண்ணிட்ட.”
“நெக்ஸ்ட் டைம் ஒன் க்ரோர் லோன் குடுக்க ரெடியா இருங்க” அவன் ஜோக் அடித்தான்
“க்ரிஷ், பிஸியா?”
“நோ.”
“எவ்ளோ லாபம் பண்ணிண?”
“4 லாக்ஸ்” அவன் சொன்னான் “நெனச்சதவிடக் கம்மி, பட் ஸ்டில் குட் இனஃப்.”
“நா சொன்னது சரிதான்” என்றார் அவர் “டிரேடிங் ஒரு அதிர்ஷ்ட வேட்டை, ஜஸ்ட் காம்ப்ளிங்க்.”
“எனக்குப் புரியல.”
“நானும் ஸ்மிதா தீபக் அட்வைசரிக்கு ரெண்டு மாசம் சந்தா கட்டினேன். நானும் ஒன்ன மாதிரியே 50 லாக்ஸ் இன்வெஸ்ட் பண்ணினேன்.”
அவன் பதற்றத்துடன் கேட்டான் “டிட் யு லூஸ் மணி?”
அவர் சிரித்தார் “நா 6 லட்சம் லாபம் பண்ணினேன்.”
“பின்ன ஏம்ப்பா டிரேடிங் ஜஸ்ட் காம்ப்ளிங்னு சொல்றீங்க? சரியான அட்வைஸர் கிட்ட ரெண்டு பேரும் போனோம் . அவங்களோட கரெக்ட் அட்வைஸால ரெண்டு பேரும் லாபம் பண்ணிட்டோம்”
“க்ரிஷ், ரெண்டு பேரும் ஒரே அட்வைஸர் கிட்ட ரெக்கம்மென்டேஷன்ஸ் வாங்கினோம். ஆனா ஒரு சின்ன டிஃபரன்ஸ் – அவங்க என்னென்ன ரெக்கமென்டேஷன்ஸ் பண்ணினாங்களோ, அதுக்கு நேர் எதிர்மறையா நான் டிரேட் பண்ணினேன்.”
“வாட்!” அவன் அதிர்ந்தான்.
“எஸ், ஸ்மிதா வாங்கச் சொன்னத நான் விற்றேன். அவங்க விக்கச் சொன்னத நா வாங்கினேன்.”
அவன் பேசவில்லை.
“கடசீல நா உன்னவிட அதிக லாபம் பண்ணிட்டேன்.”
சில வினாடிகள் மௌனத்திற்குப்பின், “தட் இஸ் டிரேடிங் ஃபார் யு மை சன்!” என்றார் ராமன்.