சிறுகதை - ரமணனா இப்படி!

Short Story in Tamil
ஓவியம்: கரோ
Published on

-கிருஷ்ணா

"ரமணன் வீட்டைக் காலி செய்துகொண்டு போய் விட்டார்."

அலுவலக வேலையாகப் பத்து நாள் பம்பாய் வரை சென்று திரும்பியதும் மனைவி சொன்ன முதல் செய்தி இது.

"என்னவாம்?"

"தெரியலே. நீங்க ஊருக்குப் போனதுக்கு அடுத்த நாள், அவர் பையன் கொண்டு வந்து வீட்டுச் சாவியைக் கொடுத்துட்டுப் போனான்.''

"காரணம் கேட்டியா?"

''அவன் வந்த சமயம் நானும் வீட்டுல இல்லே. நம்ம பானுதான் இருந்திருக்கா. சின்னப் பொண்ணுதானே அவ. அதனால் கேட்கலே."

எனக்குள் கோபம் தலைநீட்டியது.

வீடு! நான் ஆசையாய்க் கட்டியது. கிரஹப்பிரவேசம் ஆன கையோடு குடிபுகுந்தவர் ரமணன். எனக்குப் பூர்வீக சொத்தாய் இப்போது வசிக்கும் வீடு நகரின் மையத்தில் இருக்கவே, என் உழைப்பில் கட்டிய அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். ரமணன் குடிபுகுந்து ஒன்றரை மாதம்தான் ஆகிறது.

''இந்தப் பத்து நாளிலே ரமணன் இங்கே வரவே இல்லையா?"
"இல்லைங்க. அதான் ஆச்சர்யமாய் இருக்கு" என்றாள் என் மனைவி காயத்ரி.

இந்த ஊருக்குப் புதிதாக மாற்றலில் வந்தவர் அதுவும் ரமணன். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாய் வடக்கே குப்பை கொட்டிவிட்டு, தன் கடைசி வருட சர்வீசில் மாற்றலாகி வந்திருக்கிறார். அவருடன் வேலை பார்க்கும் என் நண்பன் சிபாரிசு செய்ததால் குடியமர்த்தினேன்.

''ஏன் திடீர்னு காலி பண்ணிட்டார்னு தெரியலையே?" என்றேன் யோசனையாய்.

''நம்ம வீடு இருக்கறது ஊரை விட்டுக் கொஞ்சம் தள்ளி. டவுனுக்குள்ளே நல்ல வீடாய்க் கிடைச்சிருக்கும்."

''அதுக்காக இப்படி திடீர்னு..."

"வாடகையும் அவங்க கட்டுக்குள்ளே வந்திருக்கும். ஊருக்குப் புதுசா வந்த போது, ஏதாவது ஒரு வீடு கிடைச்சாப் போதும்னு குடி வந்தாங்க. இப்ப பழகியிருப்பாங்களே."

அவள் சொல்வதும் உண்மைதான். ஆனால் அதற்காக இப்படியா? ஒரு மரியாதைக்காகக்கூட வந்து பார்க்கவில்லையே? மகனிடம் வீட்டுச்சாவியை கொடுத்து அனுப்பிவிட்டு, இப்படி பாராமுகமாய் இருப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி?

என் மனச்சங்கடம் புரிந்தவளாய் என்னை நோக்கினாள் காயத்ரி.

"எனக்கும் சங்கடமாய்த்தான் இருந்ததுங்க முதல்ல. கலிகாலம். மனுஷங்க அப்படித்தான் நடந்துக்குவாங்கன்னு தேத்திக்கிட்டேன். உங்க மேலேயும் தப்பிருக்கு."

"என்ன சொல்றே?"

"பத்து மாசம் அட்வான்ஸ் வாங்கறது ஊர், உலக வழக்கம். நீங்கதான் ஒரு மாத அட்வான்ஸே போதும்னு உங்க தாராள குணத்தைக் காட்டினீங்க" என்றாள் குத்தலாய்.

உண்மைதான்! வாடகை வீட்டில் இருப்பவர்களின் கஷ்டம் கேள்விப்பட்டதால் எடுத்த முடிவு அது.

"எதுக்கும் ஒரு தடவை வீட்டைப் போய் பார்த்துட்டு வந்துடுங்க. மனுஷன் எதையாவது எடுத்துக்கிட்டோ, இல்லை, உடைச்சுட்டோ போயிருக்கப் போறாரு" என்றாள் காயத்ரி.

''நீ போய்ப் பார்க்கலையா?”

"எங்கே? பானுவுக்கு ஜுரம். டாக்டரிடம் அலையவே நேரம் சரியாய் இருந்தது. அந்தக் கவலை முன்னாடி இதெல்லாம் பெரிசாப்படலே."

தாய்மையின் கவலை நியாயம்தான்.

சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைப் பார்க்கக் கிளம்பினேன்.

புறநகர்ப் பகுதியில் இருக்கிறது. இன்னும் ஒழுங்கான தார்ச் சாலை வரவில்லை. மின்சார வாரியத்தில் வேலை பார்ப்பவர்கள் பத்துப் பேர் இங்கு வீடு கட்டியிருப்பதால் தெரு விளக்குகள் வந்துவிட்டன.

புதுக் கருக்கு அழியாமல் கம்பீரமாய் வரவேற்றது என் வீடு. ஆசையாய்ப் பார்த்தேன்.

வீட்டின் வெளிப்புறம் பச்சை நிற வர்ணம் பூசப்பட்டிருந்தது. நடுவே 'ஜானகி இல்லம்' என்று பெரிய எழுத்தில் என் அம்மா பெயர். பத்தடி தூரத்திற்கு சிமெண்ட் தளம் முகப்பில். பிறகு கிரில் கேட். பூட்டைத் திறந்தேன். பெயிண்ட் வாசனைகூட இன்னும் போகவில்லை. அதற்குள் காலி பண்ணி விட்டார்களே!

நல்லவேளை வீட்டை சுத்தமாய்த்தான் வைத்திருந்திருக்கிறார்கள். குழந்தைகளின் சுவர் ஓவியமோ, சமையலறையில் கரி ஓவியமோ, பெட்ரூமில் சாந்துத் தீற்றலோ, கண்ட இடங்களில் 'ஆணி' ரசனையோ
இல்லாமல், இன்னும் புது வீடாகவே இருந்தது.

கொல்லைப்புறக் கதவைத் திறந்துகொண்டு போனேன். கிணறு. பக்கத்தில் துவைக்கும் கல். தண்ணீர் பைப். எல்லாம் சரியாக இருந்தன. பல்புகள் கூட சரியாய் இருந்தன.

"என்ன சார் சௌக்கியமா?" என்ற குரல் கேட்டு அக்கம் பக்கம் பார்த்தேன்.

மதில்சுவர் மேல் பக்கத்து வீட்டுக்காரர் தலை.

"ஏன் காலி பண்ணிப் போயிட்டாங்க?" என்றார்.

''உங்களுக்குத் தெரியாதா?"

''குடும்பத்தோட நாலு நாள் எல்.டி.சி. போயிருந்தேன். வந்து பார்த்தால் உங்க வீடு பூட்டியிருக்கு. அதோட அவங்க வந்தும் கொஞ்ச நாள்தானே இருந்தாங்க.அதனால அதிகப் பழக்கம் இல்லாமப் போச்சு" என்றார்.

 

வீட்டைப் பூட்டிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். டவுன் பஸ் ஸ்டாண்டில் இறங்கினேன். கடைவீதி வழியே வீடு திரும்பும்போது எதிரில்...

வசமாய்ச் சிக்கினார் ரமணன். என்னைப் பார்த்து சோகையாய்ச் சிரித்தார்.

வாய் விட்டு எப்படி சிரிக்க முடியும்?

"எப்ப ஊரிலிருந்து திரும்பினீங்க?" என்றார்.

''அடேடே, என்னை ஞாபகம் இருக்கா?" என்றேன் கிண்டலாய்.

பதில் சொல்லாமல் தலைகுனிந்தார்.

"நன்றி மறக்கறது பண்பு இல்லை மிஸ்டர் ரமணன்" என்றேன் காட்டமாய்.

சங்கடமாய் நெளிந்தார்.

''இப்ப ஆடி மாசம். யாரும் குடி வரமாட்டாங்க. ஒரு மாத வாடகை எனக்கு நஷ்டம்" என்றேன் கோபமாய்.

மனுஷன் வாய்க்குள் கொழுக்கட்டை.

"இப்ப எங்கே இருக்கீங்க?"

"பார்க் அவென்யூவில் மூன்றாவது மாடியில். வீட்டு நம்பர் அறுபது."

"சௌகரியமா இருக்கோ அது?" என்றேன் கிண்டலை விடாமல்.

''உங்க வீடு தனி வீடு. சுதந்திரம் இருந்தது. இது மாடி. அதுவும் மூன்றாவது மாடி. கஷ்டம்தான்" என்றார். குரல் கரகரத்திருந்தது.

இவ்வளவு வயதான மனிதரை அப்படிப் பார்த்ததும் கொஞ்சம் என் கோபம் குறைந்தது.

"நீங்க இப்படி திடுதிப்புனு காலி பண்ணினதும் இல்லாமல், இதுநாள் வரை வராததும் எந்த நியாயத்தில் சேர்த்தின்னு தெரியலே" என்றேன் கொஞ்சம் தழைவாய்.

"அது..."

"உங்களாலே பதில் சொல்ல முடியாதுதான். ஆனால் உங்க மூலமாய் ஒரு பாடம். இனிமேல் யாருக்கும் இரக்கப்படக்கூடாது. வீட்டை வாடகைக்கு விடும்போதே ஆறு மாத முன்தொகையாவது கட்டாயம் வாங்கியே ஆகணும்" என்றேன்.

"ப்ளீஸ்... அது வந்து..." என்று தடுமாறினார்.

அவர் தடுமாற்றம் என்னைக் கொஞ்சம் இளக்கியது.

"அது சரி, உங்க அம்மா, மனைவி, குழந்தைகள் எப்படியிருக்காங்க? மூணாவது மாடின்னு சொல்றீங்க. வயசானவ உங்க அம்மா. எப்படி ஏறி இறங்க முடியும்?"

"அம்மா... அம்மா... போயிட்டா" என்று அவர் தழுதழுக்கவும் திடுக்கிட்டுப்போய் அவரை கவனித்தேன்.

முகத்தில் பத்து நாளாய் மழிக்கப்படாத தாடி அப்பிய சோகம்.

"கடவுளே! எப்போ?" என்றேன்.

''வீட்டைக் காலி பண்றதுக்கு மூணு நாள் முன்னாடி திடீர்னு அம்மா மயங்கி விழுந்துட்டா. டாக்டரிடம் கூட்டிட்டுப் போனோம். நர்சிங்ஹோமில் அட்மிட் பண்ணினோம். இரண்டு நாள் கூடத் தாங்காதுன்னு டாக்டர் சொல்லிட்டார்."

இதையும் படியுங்கள்:
சிறுகதை - பொய்க் கண்ணாடி!
Short Story in Tamil

"அடப்பாவமே!"

''உங்க வீடோ புது வீடு. நானும் இந்த ஊருக்குப் புதுசு. வீட்டுல வைச்சுத்தான் காரியங்கள் பண்ணியாகணும். முதன்முதலில், நீங்க கஷ்டப்பட்டுக் கட்டிய புது வீட்டில் துக்க காரியம் நடக்கறதுல... என் மனசு ஒத்துக்கலே. எங்க அம்மா மேலே, எங்க எல்லோருக்குமே பிரியம் அதிகம். அதனால் அவ வாழ்ந்த வீட்டுலே தொடர்ந்து வாழவும் சென்டிமென்டலா மனசு சங்கடப்படும்னு தோணினது. அதனால், வாடகை அதிகமானாலும் பரவாயில்லேன்னு, இங்கே குடிவந்துட்டோம். எங்க நேரம், அப்பத்தான் இந்த வீடு காலியாச்சு. வீட்டு சொந்தக்காரர் சென்னையிலே இருக்காராம். என் ஆபீஸ் நண்பரோட பொறுப்புல இருந்தது அது" என்றார்.

''பதின்மூன்று நாள் காரியம் முடிஞ்சதும் வரலாம்னு இருந்தேன்" என்று அவர் சொன்னதும் நான் கூனிக்குறுகிப் போனேன்.

இந்த மனிதன் தன் துக்கத்தின் நடுவேயும், பிறர் கஷ்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் செயல்பட்டிருக்கிறார்.

என் புது வீட்டில் துக்கம் நடந்தாலும் கஷ்டம்! துக்கம் நடந்ததைச் சொல்லி வெளியேறினாலும் எனக்கு பாதிப்பு ஏற்படும் என்று செயல்பட்டிருக்கிறார்.

ஆஸ்பத்திரியிலிருந்து தன் தாயின் உடலை என் புது வீட்டுக்குக் கொண்டு வராமல், விரைவாய்ச் செயல்பட்டு, வேறு வீட்டுக்குக் குடியேறி...

"என்னை மன்னிச்சிடுங்க ரமணன்" என்றேன். அவர் கைகளை அழுத்திப் பிடித்தபடி.

பின்குறிப்பு:-

கல்கி 13 பிப்ரவரி  1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com