சிறுகதை – ஒத்திகை!

ஓவியம்: சிவா
ஓவியம்: சிவா

-பா. ராகவன்

தொலைபேசி கூப்பிட்டது. தமிழரசன் எழுந்துபோய் எடுத்து, வெற்றிலையைத் துப்ப மாட்டாமல், "யாழ்ழா அழு?" என்றார்.

அது அந்தரங்கத் தொலைபேசி. நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரிந்த எண். வேறு தொலைபேசி எனில் முதலில் 'தமிழ் வாழ்க' என்றுதான் தொடங்கியிருப்பார். அமைச்சரான பிற்பாடு பழகிக்கொண்ட சங்கதி.

"ஐயா, கன்னியப்பன் பேசறனுங்க. ஒரு முக்ய சமாசாரம். ஐயா தயாராயிருக்கணும். வீட்டுல சோதனை போட வாராங்கன்றது அநேகமா உறுதி ஆயிடுச்சிங்க."

"குறிப்பா சொல்லுய்யா. அமலாக்க ஆளுங்களா, சிபிஐயா இல்லை...."

"சிபிஐதானுங்க. விடிஞ்சதும் வந்துருவாங்கய்யா."

''வந்துட்டுப் போவட்டும். நீ வச்சிரு."

மிழரசன், மனைவியைக் கூப்பிட்டார்.

''பரமேசுவரி! காலைல பால் கொஞ்சம் கூடுதலா தேவைப்படும். சொல்லி வெச்சிரு!''

''விருந்தாளிங்க யாரும்?''

"சிபிஐன்னா புரியுமா? காக்கி போடாத போலீஸ்காரங்க."

''ஐயோ!''

"என்ன ஐயோ? புருசன் செயிலுக்குப் போயிருவான்னு பயப்படறியா? பைத்தியம்! நாப்பது வருசத்து அரசியல்வாதிடீ நான்! நான் பாக்காத போலீசா! நான் பாக்காத ரெயிடா! நான் பாக்காத... சரிவிடு."

"பயமா இருக்குங்க. தினசரி, பத்திரிகைகள்ல வர்ற செய்திகளைப் பார்த்தே பயந்தேன்.. சம்பாதிச்சது போதாதா? விட்ருங்களேன்னு தலை தலையா அடிச்சிக்கிட்டேன்... கோர்ட்டு, கேஸுன்னு போனா மானம், மரியாதை..."

விசும்ப ஆரம்பித்தாள்.

"பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்டி. தவிர கொள்ளை அடிக்கறது கௌரவப் பிரச்னை ஆயிட்டுது இப்ப. நேத்து வந்தவனெல்லாம் இருவது கோடி, முப்பது கோடிங்கறான். என் சர்வீஸுக்கு, இந்நேரத்துக்கு அந்தமான தீவுகள்ல ஒண்ணு விலைக்குக் கிடைக்குமான்னு கேட்டிருக்கணும்...பச்!"

"எப்படியோ போங்க. என்னவும் பண்ணுங்க. நான் திருப்பதிக்கு வேண்டிக்கறேன். உங்களைக் கூட்டி வந்து மொட்டை போடறதா."

"தலைக்கு வந்தது தலை முடியோட போயிருச்சின்னாவா? அப்படித்தானே?"

அட்டகாசமாகச் சிரித்தார். படுக்கப் போனார்.

நாற்பது வருடங்கள். எத்தனை கட்சி மாற்றம்! எத்தனை ஊர்வலம்! எத்தனை செருப்படி! கொஞ்ச நஞ்ச சம்பாத்தியமா!

'சி.பி.ஐ. ரொம்ப தாமதம்' என்று நினைத்துக்கொண்டார்.

'அந்த திருப்பதி ரூட் லாரி பர்மிட் சமாசாரத்திலேயே சிக்கியிருக்க வேண்டியது.'

இப்போது கேஸ், அது இது என்று கொஞ்சநாள் செய்திகளில் இருக்கலாம். பதவி போகும்? அது பரவாயில்லை. தேர்தல் வருகிறது. அரசியல் ஃபார்முலா மாறிவிடும். அப்புறம் பழையபடி...

இதையும் படியுங்கள்:
அன்பை அதிகமாக்கும் 3 தருணங்கள்!
ஓவியம்: சிவா

அதெல்லாம் அடுத்தக்கட்டம். முதலில் நாளைய சமாசாரம். சி.பி.ஐ.காரர்கள் நிச்சயம் கைது செய்வார்கள். கைதானதும் நெஞ்சுவலி... அதெப்படி... மார்பைப் பிடித்துக்கொண்டு... தடாலென்று விழுவதா... மெல்லச் சரிந்து... கால் தடுமாறி.. வியர்த்துக்கொட்ட வேண்டும்... அதற்கு ஏதாவது செய்துவிட வேண்டும்... ஏதாவது இன்ஜெக்ஷன்..

திட்டம் ஒர்க் அவுட் ஆகிவிட்டால் தலைப்புச் செய்திகளில் தமிழரசன்... யாராவது செய்தி கேட்டு தீக்குளித்தால் நிரம்ப விசேஷம்... கன்னியப்பனிடம் ஏற்பாடு செய்யச் சொல்ல... சே, என்ன இது!

ஏஸியில் போய் வியர்க்கிறது! ரொம்ப வேகமாக யோசிக்கிறேன். அதான் படபடப்பாக... தலை சுற்றுவதுபோல்...

நாக்கு ஏன் வரள்கிறது? ஒரு... ஒரு கிளாஸ் தண்... பரமேசுவரி... பர... பரமே... நெஞ்... வலிக்...

பின்குறிப்பு:-

கல்கி 19  நவம்பர் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com