சிறுகதை- வேதனையின் வடுக்கள்!

short story...
short story...
Published on

-முனைவர் அ. இலங்கேஸ்வரன்

“ஐயா! இனியொருதரம் எம்பொண்ண அவங்கூடப் போயி வாழச் சொல்லாதீங்க! இந்தப் பாவி அடிச்சே கொன்னுடுவான்”

“எம்மா! நீயென்ன… உம்பொண்ணு வாழக்கய நீயே கெடுத்துடுவ போல இருக்கே? இரு கொஞ்ச நாள் டைம் கொடுத்துப் பாப்போம்”

என மாதவியின் அம்மா செல்லம்மாளும் காவல் ஆய்வாளரும் பேசிக்கொண்டிருக்க, மாதவியின் அண்ணன் சிவம் தன் தங்கைக்காகப் பேசத் தொடங்கினான்.

“சார்! இதுவரைக்கும் இருவது மொற பேசியாச்சி. அவன் ஊருலதான் இப்டி பண்றான்னு எங்க ஊருக்குக் கூப்டு வந்தோம். அப்பவும் திருந்தல. இவன் எந்தங்கச்சிய அடிச்சதா கண்டமங்கலம், லாஸ்பேட்டு, வில்லியனூருன்னு எல்லா ஸ்டேசன்லயும் கேசு இருக்கு.” என சிவம் பேசிக்கொண்டிருக்கும்போதே,

“எல்லாம் பொய் கேசு சார்”

என முரட்டுத் தனத்தை வாய் வழியாகக் காட்டி இடைமறித்தான் செல்வம். ஆய்வாளர் லட்டியைத் தூக்கித் தரையில் அடித்து,

“வாய மூடுறா! இனி வாயத் தொறந்த சோறு துன்ன வாய் இருக்காது. உனக்கெல்லாம் பொண்ணக் கொடுத்தாங்கப் பாரு இவங்களச் சொல்லணும்! மாப்ள கெடச்சா போதும்னு விசாரிக்காமலே பொண்ணக் கொடுக்றது. அப்றோம் குடிக்கிறான், அடிக்கிறான், ஒதக்கிறான்னு எங்கக்கிட்ட வந்து நிக்கிறது.”

எனக் கூறிய ஆய்வாளரின் பணிச் சுமையின் கொடுமை அவரது குரல்வழி கடுமையாக வந்தது. மேலும்

“மூனு நாளா உங்கக் கேசுதான் ஓடிக்கிட்டு இருக்கு. இன்னக்குள்ள பேசித் தீக்கணும். என்ன முடிவு எடுக்கப்போறீங்க?” எனக் கேட்டு முடித்தார்.

“சார்! என்ன எப்பப்பாத்தாலும் சந்தேகப்பட்டு அடிச்சி ஒதச்சிக் கொல்றாரு. எனக்கு எதாவது ஆச்சின்னா என் மூனு புள்ளங்களும் அநாதையாகிடும். இவரு வீரத்தக் காட்ட நாதான் கெடச்சேனா? நான் எங்க அம்மாக் கூடவே போயிடுறேன்”

என பதிலளித்த மாதவியின் பத்தாண்டுகால வேதனையின் வடுக்கள் சொற்களில் தென்பட்டன.

“போடி போ! உங்க அம்மா கள்ளப் புருசங்கூட சேத்து விடுவா போ! பெரிய பத்தினி மாதிரி பேசுறா பாரு!” என செல்வம் பேசி முடிப்பதற்கு முன்னே இடது கன்னத்தில் பளீரென ஒரு அறை விழுந்தது.

“இப்படிப் பேசிப்பேசித்தான்டா நம்ம குடும்பத்தையே இப்டி நிக்க வச்சிக்கிற…வாயத் தொறந்த…” என இடியைப் போல் இடித்து முடித்தான் செல்வத்தின் கடைசித் தம்பி.

“டேய்! என்னடா நீ மூத்தவன்னு கூடப் பாக்காம இப்டி அடிச்சிப்புட்ட? உன்ன விட ஆறு வயசு பெரியவன்டா அவன்…” என மூத்த பிள்ளை வாங்கிய அடியின் சூட்டோடு பேசினாள் செல்வத்தின் தாய்.

“எம்மா நீ வாய மூடிக்க! எல்லாம் உன்னாலதான். இவன் சைக்கோவ மாற நீயும் ஒரு காரணம். அண்ணிய எங்கக் கூடலாம் வச்சி சந்தேகப்பட்டு ஒதச்சப்போக் கூட நீ அவனுக்குதான் சப்போட் பண்ண. இப்பப் பாரு! இது எங்க வந்து நிக்கிதுன்னு. சார்! இவன் சரிப்பட மாட்டான் சார். எங்களுக்கும் குடும்பம் குட்டின்னு இருக்கு. காலத்துக்கும் இவனுக்காக கோர்ட்டு கேசுன்ன அலைய முடியாது. இவன் நாளாபின்ன கொன்னுட்டு எங்களையும் கம்பி என்ன வச்சாலும் வப்பான். அத்து விட்ருங்க சார். அது எங்கயாவது உசுரு பொழச்சிக் கெடக்கட்டும்” என முதல் தம்பியும் தன் கருத்தைக் கூறி முடித்தான்.

இரு வீட்டாருக்குமிடையே எவ்விதச் சண்டையோ சச்சரவோ கூச்சலோ குழப்பமோ இல்லை. செல்வத்திற்காக அவன் அம்மா மற்றும் தங்கையைத் தவிர வேறுயாரும் பேசவில்லை. செல்வம் மாதவியைச் செய்த கொடுமைகள் மட்டுமே கண்ணில் தூசாக இருதரப்பினரையும் உறுத்திக்கொண்டிருந்தன. மாதவிக்காக அவளது மூத்த அண்ணனும் நடு அக்காவும் மூத்த அக்காவின் சார்பாகப் பதினைந்து வயது மகனும் நாடி தளர்ந்த செல்லம்மாளும் வந்திருந்தார்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பெஞ்சின் ஒரு ஓரமாக பெண் காவலர் ஆதரவில் நின்று கொண்டிருந்தான் ஐந்து வயது பரணி. அவன் பிறந்த முதல் நாளிலேயே ‘இவன் எனக்குப் பிறந்தவன் இல்லடி’ என செல்வம் மாதவியை மருத்துவ மனையிலேயே விட்டுவிட்டுச் சென்றான். பரணியின் மூன்றாவது வயதில் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற செல்வம் மீண்டும் மாதவியை அடித்து உதைக்க, வீட்டை விட்டு வெளியேறிவள் இப்போது நிரந்தரப் பிரிவிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். அப்பாவின் உறவினர் புடைசூழ அம்மாவின் வாசம் படாமல் வளர்க்கப்பட்டவன் பரணி. தன் அம்மாவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவனிடம் காவல் ஆய்வாளர் கேட்டார்.

இதையும் படியுங்கள்:
முன்மாதிரி மனிதராக வாழ்ந்து காட்டுங்கள். மகிழ்ச்சியும் வெற்றியும் நிச்சயம்!
short story...

“தங்கம்! உன் பேரு என்னப்பா?”

“பரணி”

“உன் அண்ணாங்க ரெண்டு பேரும் அம்மாக்கிட்டப் போறாங்களாம். நீ யாரு கூடப் போறப்பா?”

செல்வத்தையும் மாதவியையும் உற்றுப் பார்த்தவன்,

“அம்மா வேணாம் அப்பாதான் வேணும்” எனத் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். பிள்ளை தன்னிடம் வருவதற்கு விரும்பாமல் அழுவதை எண்ணி அழுதாள் மாதவி. மறுபக்கம் தன் பிள்ளையின் பதிலைக் கேட்டு இல்லாத மீசையை முறுக்கிக் கொண்டான் செல்வம்.

“ஏம்மா! வேலயும் இல்லாம ஒன்னும் இல்லாம யாரு சப்போர்ட்ல நீ மூனு புள்ளயயும் வளக்கப்போற? போ! ரெண்டு புள்ளங்களயும் வளத்துக் கர சேத்துவுடு. ஒங்கொழந்த என்னக்கி இருந்தாலும் ஒங்கிட்ட வந்துருவான்”

பெண் ஆய்வாளர் மாதவியைத் தேற்ற முயன்றார். அப்பாவின் வலது கையைப் பிடித்தபடி அம்மாவைப் பார்த்துக்கொண்டே மாடிப்படியில் இறங்கினான் பரணி. அவன் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மாதவியின் பார்வையில் இருந்து மறைந்தது. மாதவியின் கண்கள் இருளத் தொடங்கின.

அந்த நிகழ்வு நடந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்று முக்கியக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கையில் விலங்குடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுள் தாயின் அரவணைப்பை அறியாத பரணியும் ஒருவன். காவலர்களின் காவலுக்கிடையில் நீதிமன்றத் தராசை நோக்கி ஏறிக்கொண்டிருந்தான் அவன். பகற்பொழுது மேக மூட்டத்தால் இருளத் தொடங்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com