

விடியற்காலையிலேயே இரு சண்டைக்கோழிகள் போடும் சத்தம் போல் பெரும் கூச்சலாக இருந்தது. தேவன் செல்லில் நேரத்தைப் பார்த்தான். மணி ஏழுதான். ஞாயிறு என்றால் அவர்களுக்கு விடிவதே காலை பத்து மணிக்குத்தான். அந்த அளவுக்குப் பெரும் சம்பளம் வாங்கும் பொறுப்பான மென்பொறியாளர் வேலை. மனைவியும் நல்ல நிறுவனத்தில் ஒரு இன்டர்னல் ஆடிட்டராகப் பணிபுரிகிறாள்.
மனைவி பால்கனிக்குச் சென்று பெரும் குரலில் சண்டை பிடித்ததும், பதிலுக்கு எதிர்முனையில் இருந்து இன்னொருவர் பதில் கொடுப்பதும் தெரிந்தது.
அவன் மனைவி உள்ளே வந்தாள். அவள் முகம் அவ்வளவு சூடேறிப்போயிருந்தது. வந்தவள் தேவனிடம் எதுவும் பேசவில்லை. மெத்தையில் படுத்தவள், தானே உரக்கக் கோபத்துடன் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.
" அதான் மாதம் மூவாயிரம் கொடுக்கிறோமே... அது பத்தாதாம்! விலைவாசி அந்த அளவுக்கு ஏறிப் போயிடுச்சாம். இப்ப ஐயாயிரமா உசத்தணுமாம். அதுவும் இந்த மாசமே வேணுமாம். என்ன திமிரான பேச்சு! நானும் சுடச் சுடப் பேசினேன்" என்றபோது தேவனும் அவள் பக்கம் திரும்பினான்.
"என்ன தேவி...? ஏன் இந்தத் கோபம்?"
"ஏங்க, நாம இரண்டாயிரத்துலேருந்து மூவாயிரமா எப்பங்க உசத்தினோம்?"
"ஓ... அதைச் சொல்றியா? அது உசத்தி நான்கு மாசம்தான் ஆகுது" என்றான் தேவன்.
"அது போதாதாம். இப்போ அத உசத்தி ஐயாயிரமா வேணுமாம். நான் என்ன ஒண்ணும் தெரியாதவளா? நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரிதான் கேட்டேன். அதுக்கு என்ன பதில் தெரியுமா? 'நான்கு மாசத்துக்கு முன்பு உள்ள பருப்பு, அரிசி, எண்ணெய் விலையையும், இப்ப உள்ள விலையையும் நான் கம்பேர் செஞ்சு பார்த்தேன்.மொத்தம் ஆறாயிரம் வருது. ஆனால், குறைச்சுதான் ஐயாயிரம் கேட்கிறோம். அவசியம் கொடுக்கணும்'னு சொல்றாங்க."
"நீ என்ன சொன்னே?"
"விலைவாசிக்கான பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்தது. அரசாங்கத்திடம் விலைவாசி உயர்வுக்கான பணத்தை வாங்கிக்கொள்ளும்படி கூறி வைத்துவிட்டேன்!"
"வெரி குட்... சரியான நெத்தியடி!" என்றவனின் சுகமான அணைப்பில் படுத்தபோது ஒரு மெசேஜ் வந்தது.
"அட என்னங்க... இன்னிக்குக் காலையிலிருந்தே நேரமே சரியில்லை!"
"ஏன் தேவி, என்னாச்சு?"
"நம்ம அபார்ட்மெண்ட் வாட்ச்மேனை, இதே பில்டர் கட்டற இன்னொரு கட்டடத்துக்கு மாத்திட்டாங்களாம். அதனால வேற ஒருத்தரைப் பில்டரே அப்பாயிண்ட் செய்துட்டாராம். அவருக்குத் துப்பாக்கியோடு லைசென்ஸும் இருக்காம். அவருக்குச் சம்பளம் கூடக் கொடுக்கணுமாம். அவர் இங்கேயே வாட்ச்மேன் குடியிருப்பில் தங்கி இரவிலேயும் பார்த்துப்பாராம். அதனால மாச பராமரிப்பு செலவை நான்காயிரத்திலிருந்து ஆறாயிரமா உசத்திட்டாங்களாம்."
"அய்யோ... இது பெரும் பணக்காரங்க வாழும் அபார்ட்மெண்ட் ஆச்சே! யாரும் எந்தக் கேள்வியும் கேட்காம ஒத்துக்கிட்டு இருப்பாங்களே. நீ என்ன செய்யப்போறே?"
"ஏங்க, நாம மட்டும் என்ன மத்தவங்களுக்கு இளைப்பமா? எல்லோரும் 'ஓகே'ன்னு ஒரு தரம் போட்டிருந்தாங்க. நான் 'ஓகே, ஓகே'ன்னு இரண்டு தரம் போட்டுட்டேங்க. செக்ரெட்டரியும் தம்ஸ்-அப் காட்டிப் பதிலும் கொடுத்துட்டாரு."
"என் தேவி, என் செல்லம், என் கண்ணு..." என்றவன், "நீ எவ்வளவு புத்திசாலி! யாருகிட்ட எப்படி நடந்துக்கணும்னு உனக்குத்தான் நல்லா தெரியும்" என்று பெருமையுடன் பேசி, அந்த அபார்ட்மெண்டில் தன் கௌரவத்தைக் கொடியாகப் பறக்கவிட்டு, அப்படியே அணைத்துக் கொண்டனர். அவர்கள் எழுந்தபோது மணி நண்பகல் பன்னிரண்டு.
உடனடியாகச் சாப்பாட்டுக்கு ஆர்டர் போட்டாள் தேவிகா. அப்படியே வாட்ச்மேனுக்கும் வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தி அனுப்பிவிட்டாள். சாப்பாடு கொண்டு வருபவனிடம் வாங்கி, அதை எடுத்து இருபதாம் நம்பர் அபார்ட்மெண்டில் கொடுக்கச் சொல்வதுதான் அந்த மெசேஜ்.
சரியாகப் பன்னிரண்டரை மணிக்குச் சாப்பாடு வந்தது. அதை எடுத்துக்கொண்டு சென்ற புதிய வாட்ச்மேன், உடனே அதை இருபதாம் அபார்ட்மெண்ட் கதவில் தொங்கவிட்டு விட்டு, காலிங் பெல்லையும் அழுத்திவிட்டுப் போனார். தேவிகா கதவைத் திறந்து பார்சலை எடுத்தாள். அப்போது ஒரு காகிதம் கீழே விழுந்தது.
"நாங்க கேட்டதுக்கு அத்தனை சத்தம். ஆனால் செக்ரெட்டரி கேட்டதும் உடனே பெருமையுடன் பராமரிப்புச் செலவு உயர்வுக்குப் பெருத்த சம்மதம். நல்லவேளை நான் மிலிட்டரியில் இருந்து ஓய்வு பெற்றதால துப்பாக்கி சுடுவது தெரியும். அதுதான் இந்த பணக்கார பெரிய அபார்ட்மெண்டுக்கு எனக்கு வேலை வாங்கித் தந்தது. நம்பினோர் கைவிடப்பட மாட்டார். ஆம், இறைவன் தூணிலும் இருப்பான், துப்பாக்கியிலும் இருப்பான். இனி உங்க உதவி வேண்டாம். எங்களை நாங்களே பராமரித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
உனக்குச் சேவை செய்தே வாழ்நாளைத் தொலைத்த அப்பனும் ஆத்தாளும்."
அவ்வளவுதான்... தேவிகா உறைந்துவிட்டாள். தேவன் உறைந்து விறைத்துப் போய்விட்டான்.