சிறுகதை - மண் புதிது!

ஓவியம்: வேதா
ஓவியம்: வேதா

-மதுமிதா

லுவலக வாசலிலேயே அவள் நின்றுகொண்டிருந்தாள். இவன் ஸ்கூட்டரை அவளருகில் நிறுத்தினான். அவள் முகம் பூவாய்ச் சிரித்தது.

"கரெக்டா வந்துட்டீங்களே... எங்க லேட்டா ஆக்கிடுவீங்களோன்னு பயந்துட்டேருந்தேன்பா...!"

சரயூ சொல்லிக்கொண்டே பின்பக்கம் அமர்ந்தாள்.

"என்ன... ஒரு காப்பி சாப்பிட்டுப் போகலாமா...?" சூர்யா கேட்டான்.

''ஸாரிப்பா... நாலரைக்கு மீட்டிங் ஆரம்பிச்சிடுவாங்க...!'

கொஞ்சம் தயங்கினாள்.

சூர்யா திரும்பாமலே சொன்னான்.

"வேண்டாம் சரயூ.... சும்மா கேட்டேன்...!"

"இல்ல... பத்ரி கபேல நிறுத்துங்க...!"

நிறுத்தினான்.

காப்பியை உறிஞ்சிக்கொண்டே கேட்டான்.

"எப்பவும் உங்க இலக்கிய மீட்டிங் ஆறு மணிக்கு மேலதான் நடக்கும்... இன்னைக்கு என்ன நாலரைக்கே...!"

"அது வந்து... இன்னைக்குப் பேசப் போறவரு... ரொம்ப பிஸியானவர்... பெங்களூர்க்காரர்... இங்க பேசிட்டு நைட்டே ட்ரெயின்ல திரும்பறார்... அதான்...!"

"அப்படியா... நம்ப ரவி வருவானா?"

"வர்றேன்னு சொல்லிருக்கார்...!"

"சரி... நான் எட்டு மணி போல வந்து உன்னை அழைச்சிட்டுப் போறேன்...!"

''வேண்டாம்பா... நானே பஸ் பிடிச்சு வந்துர்றேன்...!"

"நான் வர்றதுன்னா வர்றேன் சரயூ... உங்க வீட்ல உன் அண்ணா உன்னைக் கொண்டுவந்து விட்டுட்டு அழைச்சிட்டுப் போவான்னு சொல்வே...!"

"அவனுக்கும் லிட்ரேச்சர் இன்ட்ரஸ்ட் உண்டு... ஆனா நீங்க அப்படி இல்லையே...!"

"ஏன் வருத்தமாயிருக்கா சரயூ?"

"ச்சே... அதெல்லாம் கிடையாதுப்பா... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்... ஆர்க்கிடெக்சர்ல நீங்க பெரிய ஆள்... உங்களோட புதுமையான சிந்தனை... இதெல்லாம் எனக்கு இல்லையே...!"

சூர்யா வாய் விட்டுச் சிரித்தான்.

இதையும் படியுங்கள்:
சுருளிமலை சுருளி ஆண்டவர் பற்றி தெரியுமா?
ஓவியம்: வேதா

வி யாரோ ஒரு தாடிக்காரனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

இவர்களைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே வந்தான்.

"ஹாய் சூர்யா... வாங்க மேடம்...!"

“வந்துட்டாரா ரவி?"

சரயூ அவசரமாய்க் கேட்டாள்.

"லாட்ஜ்ல இருக்கார்... இன்னும் இங்க ...!"

"அப்பாடி. நான் லேட்டுன்னு நினைச்சேன்...! "

"நா வரட்டா...!" சூர்யா கேட்டான்.

''எங்க, வீட்டுக்குத்தானே...?"

"ஆமாம்... கொஞ்சம் டிசைன்ஸ் போடணும்...!''

"சரி... நான் பஸ்லேயோ அல்லது ஆட்டோவுலயோ வந்துடறேன்...!''

"நீயும் இருந்துட்டுப் போயேன் சூர்யா... நல்லாப் பேசுவார்...!"

ரவி கேட்டான்.

"இதெல்லாம் அறிவு ஜீவிங்க சமாச்சாரம்.... என்ன விட்டுடுப்பா...!''

கேலியாய்க் கைகூப்பினான். சரயூ வாய் பொத்திச் சிரித்தாள்.

"அதான் என் சார்பில சரயூ இருக்காளே... வரட்டுமா...?"

சரயூ கை அசைத்தாள்.

மனசு சந்தோஷமாயிருந்தது. ஸ்கூட்டரை திருப்பினான். வீட்டில் அம்மா தனியாக இருப்பாள். ஸ்கூட்டரின் வேகம் கூடியது.

ம்மா முன்பக்கத் தோட்டத்தில் குனிந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தாள் .

இவன் ஸ்கூட்டர் சப்தம் கேட்டதும் நிமிர்ந்தாள். கையை உதறிக்கொண்டு வந்தாள்.

கேட்டை விலக்கித் திறந்தாள்.

இவன் ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான். அம்மா மௌனமாய்ப் பின்தொடர்ந்தாள்.

"சரயூ... வரலையா?"

அம்மா கேட்டாள்.

"காலைலேயே சொன்னாளே... ஏதோ இலக்கியக் கூட்டம்னு...!''

"எப்படி போனா...?"

"நான்தான் கொண்டு விட்டுட்டு வர்றேன்...!"

"திரும்பி வர்றப்ப எப்படி வருவா? நீ போகணுமா.. ?"

"இல்லே. பஸ்ல வந்துடுவா...!"

''தனியாவா... ராத்திரி லேட்டா ஆய்ட்டா என்ன பண்றது?"

"நம்ப ரவி இருக்கான்... அவன் அழைச்சிட்டு வருவான்...!"

"ஆமாம்... அவன் ஒரு வேலை இல்லாத பய...!"

அம்மா முணுமுணுத்தாள்.

இவன் முகம் கழுவ பின்பக்கம் போனான்.

முகம் துடைத்துக்கொண்டு வரும்போது அம்மா காப்பி ஆற்றிக் கொண்டிருந்தாள்.

தலை சீவினான். மெல்ல பவுடர் ஒற்றினான். அம்மா மௌனமாய் காப்பி தம்ளரை நீட்டினாள். இவன் வாங்கிக்கொண்டு அம்மா முகத்தைப் பார்த்தான்.

இதையும் படியுங்கள்:
குன்றில் கோயில் கொண்ட பிறைசூடி பெருமான்!
ஓவியம்: வேதா

என்னவோ சொல்ல விரும்புகிறாள்.

"என்னம்மா...?"

அம்மா தயக்கமாய்ச் சொன்னாள்.

"இதெல்லாம் நல்லாவாயிருக்கு சூர்யா?"

''எதும்மா?''

"இப்படி அடிக்கடி இலக்கியக் கூட்டம்னு போய்ட்டு ராத்திரி வர்றது...?"

இவன் மௌனமாயிருந்தான்.

அம்மா ஏதோ சிக்கல் பண்ணுகிறாள்.

"மாசம் ஒரு கூட்டம்தானே நடக்குது...? போய்ட்டு வரட்டுமே... அவங்க ஊர்ல வாரம் ஒரு கூட்டம் நடக்குமாம்... இவளுக்கு இதுல ரொம்ப விருப்பம்...!”

"கல்யாணமாகி நாலு மாசம் ஆகலை. அதுக்குள்ளயே இப்படி...''

அம்மா வாக்கியத்தைப் பூர்த்தி பண்ணாமல் போனாள்.

இவன் சோபாவில் அமர்ந்தான். புத்தகத்தைப் புரட்டினான். மனசு பதியவில்லை.

அம்மாவிடம் பேச வேண்டும் போலிருந்தது. எழுந்து வெளியே வந்தான். அம்மா வாசலில் ஒரு சைக்கிள்காரனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

சைக்கிள்காரன் ஒரு மூட்டையைத் தூக்கி வந்து தோட்டத்தில் அம்மா காட்டிய இடத்தில் போட்டுவிட்டுப் போனான். இவனுக்கு ஆச்சர்யமாயிருந்தது.

"என்னம்மா மூட்டை இது?"

''செம்மண்ணுடா...!"

"எதுக்கும்மா...?"

"குன்னூர்லேருந்து புதுசா ஒரு ரோஜா செடி வாங்கிட்டு வந்தேனே... அதுக்குத்தான்... அது நம்ப மண்ணுல பிடிக்காதுப்பா... செம்மண்லதான் வளருமாம்... அதான் இவனை அள்ளிட்டு வரச் சொன்னேன்...!"

'' ஏம்மா... சாதாரண ஒரு ரோஜாச் செடிக்கே அதனோட பழைய சூழ்நிலையை உருவாக்கறதுக்காக எங்கேருந்தோ மண் கொண்டு வர்றே... சரயூக்கு அதைச் செய்யக்கூடாதுங்கிற... என்ன நியாயம் இது? சரயூக்கு நம்ப வீடும் புது மண்தானே... அவ இங்க வேர் ஊன்றி வளர நாம் பழைய சூழ்நிலையை உருவாக்கறது தப்பாம்மா...?"

அம்மா செம்மண்ணையே வெறித்துக்கொண்டிருந்தாள்.

தெளிந்து விடுவாள்.

பின்குறிப்பு:-

கல்கி 12  செப்டெம்பர் 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com