சிறுகதை: ‘ஸ்டிரைக்’

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் (12.06.2024)
Child labor
Child labor
Published on
kalki vinayagar
kalki vinayagar

"நவீன், இப்ப சாப்பிடப்போறீயா இல்லையா?" கையில் தட்டை வைத்துக்கொண்டு பிரியா அங்குமிங்கும் அல்லாடினாள். நவீன் ‘உம்’மென்ற முகத்துடன் கால்களில் முகத்தை புதைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

"என்ன நவீன், நீ இப்படி பண்ற? அப்பாவை பற்றி உனக்கு தெரியும்தானே? நீ என்னதான் பிடிவாதம் பிடித்தாலும் அவர் நினைக்கிறதுதான் நடக்கும். நீயும் சின்ன வயசுல இருந்து பாத்துட்டு இருக்க இல்ல” என்றபடி தலையை தொட, தலையை நகர்த்திக் கொண்ட நவீன் பார்த்த பார்வையின் தீட்சண்யம் தாங்காமல் பிரியாவிற்கு ஏதோ செய்தது.

தனது கணவன் சங்கரை எப்படித் திருத்துவது? அவனுக்கு யார் எடுத்துச் சொல்வது? எத்தனையோ முறை தான் சொல்லி மறந்த அதே விஷயத்தை இப்போது நவீன் சொல்கிறான். ஆனால் அவன் சொல்லவில்லை, செயலில் காட்டுகிறான். இதோ பத்து நாட்களாக வீட்டில் போராட்டமே. நேற்று வரை உணவு உண்டவன், இன்று உணவு உண்ணாமல் உண்ணாவிரதத்தை கடைபிடிக்கிறான். இந்த பத்து வயது சிறுவனுக்கு இருக்கும் இரக்கம் தனது கணவன் சங்கருக்கு கொஞ்சம் கூட இல்லையே?

பிரியாவும் நன்கு படித்தவள்தான். ஆனால், சொந்தம் என்ற ஒரு காரணத்தினால் சங்கருக்கு வாழ்க்கைப்பட்டு வந்தாள். சங்கர் குடும்பம் அந்தஸ்தில் உயர்ந்த குடும்பம். வெள்ளி பட்டறை வைத்து வெள்ளி நகைகளை பெரிய பெரிய கடைகளுக்கு ஆர்டர் எடுத்து உருவாக்கித் தருவது இவர்கள் தொழில். இதில் சங்கருக்கு நல்ல அனுபவம் மட்டுமல்ல, நல்ல பெயரும் கூட. ஆனால், அவனிடம் இருக்கும் ஒரே ஒரு குறை என்று பார்த்தால் தனது வெள்ளி பட்டறையில் வறுமை என்று சொல்லி வரும் சிறுவர்களை பணிக்கு அமர்த்துவதுதான்.

பிரியா திருமணமாகி வந்தபோது இதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தனக்கு குழந்தை இல்லை என்னும் ஏக்கத்தில் ஆறு வருடங்கள் காத்திருந்தபோது இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்த தருணத்தில் ஒரு பெரியவர் சொன்ன உண்மை பிரியாவின் கவனத்திற்கு வந்தது. "அம்மா, உனது கணவர் உங்கள் தொழிற்சாலையில் யாருக்கும் தெரியாமல் நிறைய சிறுவர்களை வேலைக்கு வைத்திருக்கிறார். இது மிகப் பெரிய தவறு. அரசாங்கத்துக்கு தெரிந்தால் பிரச்னைதான். அதோடு, இந்தப் பாவம்தான் உங்களைத் தொடர்கிறது என்று நினைக்கிறேன்" அவர் போகிற போக்கில் சொல்லிச் சென்ற ஒரு விஷயம் அப்பொழுது அவளுக்கு உரைக்கவில்லை.

ஏழாம் வருடம் நவீன் பிறந்தான். பெரியவர் சொன்னதை பிரியா மறந்தே போய்விட்டாள். துயரம் என்று வரும்பொழுது நினைவில் இருக்கும் ஒரு விஷயம், அந்தத் துயரத்தை கடந்து விட்டால் அதுவும் கடந்து விடும் அல்லவா? அப்படித்தான். இதோ ஐந்தாம் வகுப்பு படிக்கும் நவீன் 15 நாட்களுக்கு முன்பு ஆசிரியர் கற்றுக்கொடுத்த நல்ல பண்புகளில் ஒன்றான, ‘குழந்தை தொழிலாளர் ஒழிப்பு’ முறை பற்றி பேசிய விஷயங்கள் அவன் மூளையில் பதிந்து பட்டறை சிறுவர்கள் நினைவிலாட வீட்டிலேயே போராட்டத்தை கையில் எடுத்து உள்ளான்.

இதில் ஜெயிக்கப்போவது அவனா அல்லது அவன் தந்தை சங்கரா? காலிங் பெல் ஒலித்ததும் பிரியாவின் கவனம் கலைந்தது. கையில் இருந்த நவீனின் சாப்பாட்டை ஓரமாக வைத்துவிட்டு கதவைத் திறந்தால், அங்கே நின்று இருந்தது வெள்ளிப்பட்டறையில் வேலை செய்யும் மதன் என்னும் சிறுவன். பிரியாவுக்கு பக் என்றது. ஏற்கெனவே நவீன் முரண்டு பிடித்து வருகிறான். இன்னும் இந்த சிறுவனை பார்த்து விட்டால் அவ்வளவுதான். மதன் ஏன் இங்கு வந்தான்?

கை விரல்களில் கருமை படர்ந்து இருக்க, கை விரல்களில் இருந்த நகங்கள் உடைந்து பெருநோய் பிடித்தவன் போன்ற ஒரு தோற்றத்துடன் இருந்த மதன், பிரியாவிடம் "அம்மா, ஐயா உங்ககிட்ட பட்டறை சாவி வாங்கிட்டு வர சொன்னாங்க" என்று சொல்ல, அவனையே பார்த்துக் கொண்டிருந்த நவீன் வேகமாக எழுந்தான். ஓடிப்போய் மதனை அணைத்துக் கொண்டு, "அண்ணா, நீங்க இங்கே இருங்கள். நான் போய் என் அப்பாவிடம் சாவியை தந்து விட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு சாவி இருக்கும் இடத்தை நோக்கி பாய்ந்தான்.

பிரியா எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஏதோ ஒரு நிகழ்வுக்கு இன்று விடிவுகாலம் பிறக்க போகிறது’ என்று மட்டும் அவள் மனதில் எழுந்தது. சாவியை எடுத்துக் கொண்டு சென்ற  நவீன், நேராக தந்தையிடம் சென்றான். கோபமான முகத்துடன், "அப்பா..." என்று அழைத்த மகன் நவீனை நோக்கி அதே கோபத்தில் சங்கரும், "நீ எதுக்குடா இங்க வந்த? நான்தான் அந்த மதன அனுப்பி இருந்தேனே? நீ வீட்டுக்கு போ, அவனை அனுப்பி விடு" என்றான்.

"அப்பா நீங்க இன்னும் என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் நிச்சயமாக நான் வேற முடிவுக்குதான் போக வேண்டி இருக்கும்" சங்கருக்குள் ஒரு நிமிடம் சிறு அச்சம் ஏற்பட்டது. சிறு குழந்தையான முருகப்பெருமான்தானே சிவனுக்கே பிரணவ மந்திரத்தை போதித்தான்.

"என்னடா பண்ணுவ? உன்னால என்ன பண்ண முடியும்?" என்றான் சங்கர்.

"எனக்கும் எல்லாமே தெரியும். எங்க டீச்சர் சொல்லித் தந்து இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்குப் புரியும் பாருங்க" என்றான்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காவல் உடை அணிந்த ஒரு அதிகாரி சங்கரின் பட்டறைக்கு வந்தார். ‘இதுவரைக்கும் இவரை நான் பார்த்ததில்லையே. புதிய நபராக இருக்கிறாரே’ என சங்கர் அதிர்ந்தான்.

நேராக சங்கரிடம் வந்த அந்த காவல்துறை அதிகாரி, "ஹாய் சார், ஐ அம் சந்திரன். இங்க புதுசா பொறுப்பேற்க வந்து இருக்கேன். இங்க உங்களை சந்திக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி" கை கொடுத்ததும், சங்கரின் தோள் மீது கை போட்டுக்கொண்டு சென்ற சந்திரன், "சார், தப்பா நினைச்சுக்காதீங்க. இதுவரைக்கும் நான் எத்தனையோ கேஸ் பார்த்து இருக்கேன். ஆனா, இங்க வந்ததும் முதல் கேசா நான் ஸ்டேஷன்ல பார்த்தது உங்க மகன்தான். சின்ன பையனா இருக்கானே, இவன் எதுக்கு ஸ்டேஷனுக்கு வந்து இருக்கான்னு யோசிச்சேன். அப்பத்தான் விஷயம் தெரிஞ்சது, நீங்க குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குறீங்கன்னு.

இதையும் படியுங்கள்:
குட்டிக்கதை - அவரை நினைக்காத நாள் இல்லை!
Child labor

ஒரு குழந்தைக்கு தெரியறது கூட உங்களுக்குத் தெரியலனா எப்படி சார்? இதே வேற யாராவது இருந்தா நான் கண்டிப்பா நடிவடிக்கை எடுப்பேன். ஆனா உங்களோட மகனே உங்களுக்கு எதிரா, ‘அப்பாவை எதுவும் செய்ய முடியல’ என்கிற நோக்கத்தோடு என்கிட்ட வந்து சொன்னான். ‘அப்பாவுக்கு புத்தி சொல்லுங்க அங்கிள்’ என்று அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் இப்பொழுது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் நான் இங்கு வரும்போது இந்த குழந்தை தொழிலாளர்கள் இங்கு இருக்கக் கூடாது. இது என்னுடைய வார்னிங் இல்ல. இது என்னுடைய வேண்டுகோளா வச்சுக்கோங்க. ஏன்னா எனக்கும் பத்து வயதிலும் 12 வயசுலயும் குழந்தைங்க இருக்காங்க. நம்ம குழந்தைகளை இந்த மாதிரி நம்மால நினைத்துப் பார்க்க முடியுமா? குழந்தைகளை வேலைக்கு வைக்கிறது தப்பு சார்.

என்னுடைய நேர்மைக்கு இது ஒரு சின்ன களங்கம்தான். ஆனா, அந்த களங்கத்தை உங்க மகனுக்காக நான் ஏத்துக்கிறேன். ஏன்னா, இந்த சின்ன வயசுல இவ்வளவு நல்ல பண்பாக இருக்கிற உங்க மகன், ‘தன்னுடைய அப்பாவை காவல் அதிகாரி கொண்டு போய்விட்டார்கள்’ அப்படிங்கிற அவப்பெயருக்கு ஆளாக வேண்டாம்” என்று கூற, சங்கர் விக்கித்து நின்றான்.

சந்திரன், நவீனுக்கு கை கொடுத்து விட்டு சென்றார். அங்கே சந்திரன் என்னும் காவல் அதிகாரியிடம் மட்டுமல்ல,  தனது மகனிடமும் தோற்றுப்போனான் சங்கர். அடுத்த நாளிலிருந்து நவீனின் உண்ணாவிரதம் வாபஸ் வாங்கப்பட்டு விட்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

முக்கியமாக, தன்னிடம் வேலை செய்த மாணவர்களின் கல்வி செலவை சங்கரே ஏற்றுக்கொண்டது நவீனின் ஹாட்ரிக் வெற்றி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com