குட்டிக்கதை - அவரை நினைக்காத நாள் இல்லை!

Daughter in law this about his father in law
Daughter in law this about his father in law

-மதுவந்தி

தனது வேலைகளை முடித்துவிட்டு போனில் ஷார்ட்ஸ் பார்த்துக்கொண்டிருந்த லக்ஷ்மி, ஒரு பிரபல கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஷார்ட்ஸில் தன்னை மறந்து லயித்துப் போனாள். அது மாமனாரும் மருமகளுக்குமான உறவைப் பற்றிய நிகழ்ச்சி. முப்பது நொடி தான் என்றாலும் அவளால் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் தவித்துப் போனாள். அவளது கண்களிலிருந்து தாரை தாரையாக வந்த கண்ணீரையும் பொருட்படுத்தாமல் சுவரில் மாட்டியிருந்த அவளின் மாமனார் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மானசீகமா அவரிடம் "நீங்கள் இருந்திருக்கலாமே அப்பா, என்ன அவசரம் உங்களுக்கு?" என அவருடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.

ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் அவளது மாமனார் திடீரென காலமானார். அவரின் திடீர் மறைவிலிருந்து வெளியே அவளால் இன்று வரை வரமுடியவில்லை; காரணம் அவளுக்குள் இன்னும் இருக்கும் ஒரே ஒரு வருத்தம் அல்லது குற்ற உணர்வு தான். ஆம்புலன்ஸை வரவைக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த நேரம் அவளுக்கும் அவள் கணவருக்கும் வரவில்லை. ஏன் அது தோன்றவில்லை, ஏன் அதை மறந்தோம் என இருவருக்கும் இன்று வரை பதில் இல்லை.

இருவருக்கும் உள்ள ஒரு பெரிய வருத்தம், தங்களின் குழந்தையை அவர் பார்க்காமல் போனது தான். குழந்தைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும் அவருக்கு, அதுவும் பெண் குழந்தை என்றால் கொள்ளை பிரியம். வீட்டிற்கு வந்த முதல் பெண் லக்ஷ்மி என்பதால் அவளின் மேல் மாமனாருக்கு கூடுதல் பாசம். அவளை ஒரு சின்ன வேலை கூடச் செய்ய விடமாட்டார். அவள் இருக்கும் இடத்திற்குச் சுடச் சுட சாப்பாடு வரும். அந்த அளவிற்கு அவளைத் தாங்கினார். அவள் சொல்லுவது தான் சமையல்.

தன் மகனுக்குச் செய்ததை விட அவளுக்குச் செய்தது அதிகம், அந்த கர்வம் அவளுக்கு எப்பவும் உண்டு. அவள் ஒரு குறை சொல்லக்கூடாது தன் கணவனைப்பற்றி உடனே மகனுக்கு போன் செய்து திட்டுவார். இருவரும் சேர்ந்துகொண்டு அவளின் கணவனைத் திட்டுவார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு யார் அவரின் வாரிசு எனச் சந்தேகம் வரும். அப்படி இருக்கும் அவர்கள் பழகுவது.

இதையும் படியுங்கள்:
சிறு சறுக்கல்களுக்கும் துவண்டு போகும் பெண்ணா நீங்கள்?
Daughter in law this about his father in law

ஆரம்பத்தில் தன் கணவன் அவளின் மாமனாருக்கு போன் செய் என்று சொல்லும்பொழுது அவளுக்கு கோபம் வரும், ஆனால் அதுவே போகப் போக அவளுக்கு ஒரு பிடித்தமான ஒன்றானது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது அவரிடம் பேசிவிட வேண்டும். அவளிடம் பேசாமல் அவராலும் இருக்கமுடியாது. மணி எட்டு அடிக்கும் முன்னர் அவளின் அழைப்பு வரவில்லை எனில் அவரின் அழைப்பு வந்து விடும்.

அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் அவருக்குச் சமாதானமாக இருக்காது. அவளின் தேவைகளை ஒரு தாய் செய்வதையும் தாண்டி செய்து தருவார். அவர் ஊருக்கு போகும் தினங்கள் இவளுக்கு திண்டாட்டம் தான்.

இப்படி அவளைத் தாங்கியவர் திடீரென மறையவும் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்துப்போனாள். அவளின் கணவனோ இன்னும் உடைந்து போனான். அவரின் கடைசி ஆசை என அவர் பேசிய அனைத்து சொந்தமும் கூறியது ஒரு பேரனோ பேத்தியோ பார்க்க ஆசைப்பட்டார் என்பது தான். உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என வெறி கொண்டவள் மாதிரி மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்க ஆரம்பித்தாள். ஒரு மாதிரி ஆக ஆரம்பித்தவளை, சண்டை போட்டாலும் பரவாயில்லை என அவளது கணவன் தான் தடுத்து நிறுத்தினான்.

எப்படியோ அவர் ஆசைப்பட்டது போலவே அடுத்த ஒரு வருடத்திற்குள் ஒரு அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள். பண்டிகையானாலும் சரி மற்ற நாட்கள் ஆனாலும் சரி ஒவ்வொரு நிமிஷமும் அவரை பற்றிய ஏதோ ஒரு நினைவு அவர்களுக்கு வரும். இப்படி அவரை நினைக்காத நாள் இல்லை அவர்களின் வாழ்க்கையில்.

ஒருவர் இருக்கும்வரை நாம் எவ்வளவு தான் கொண்டாடினாலும் அவர் போனபிறகு தான் பளிச்சென தெரிகிறது அவரின் அருமை, பெருமை எல்லாம். "நீங்கள் இருந்திருக்கலாமே அப்பா, என்ன அவசரம் உங்களுக்கு?"

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com