சிறுகதை - கரும்புப்பால்!

ஓவியம்: ஜமால்
ஓவியம்: ஜமால்

திகாலை வெயில் போலவே இல்லை. 12 மணி உச்சி வெயில்போல விடியற்காலையிலேயே சூரிய பகவான் வெகுண்ட பார்வையை பூமியின்மீது வீசினார். தண்ணீர் குடிக்க...  குடிக்க தீராத தாகம். உஷ்ணமான பருவமாக ஐப்பசி வெயில் ஐயத்தை அளித்தது. 

கமலினி அதிகாலையில் எழுந்து வேகவேகமாய் அடுப்பு வேலையைப்  பார்க்க மும்முரமானாள். தினமும் எந்திர உலகில் பயணம் செய்யும் கமலினிக்கு  எல்லாம் அவசரத்தாபம். பாலை காய்ச்சிய  அடுப்பில் சாதம், குழம்பு என்று அத்தனையும் உணவு உண்ணும் மேசைக்கு ஏறியது.  

 “ஏய் ரத்னா எழுந்திரிடா... ஆட்டோ வந்திடும். சீக்கிரம் எந்திரி என்று குழந்தையை உலுக்கினாள். தூக்கத்தில் அரைக்கண் பார்வையால் ஏறிட்ட குழந்தை “ம்மா.....  இன்னும் டூ  மினிட்ஸ் மா” என்றது மழலைக் குரலில்....

குழந்தையை வேகமாக கிளப்பி பள்ளிக்கு அனுப்பியவள் தானும் வேலைக்குச் சென்றாள்.  வெயிலின் தாக்கத்தால் அயர்ந்து ஒரு மரத்தடியில் ஒதுங்கினாள். அங்கு ஒரே கூட்டம். என்னவென்று எட்டிப் பார்த்தாள். ‘கரும்புப்பால் ரூ.10’ என்ற பலகையைக் கண்ட மனிதர்கள் அங்கு நின்று  சாறு அருந்த காத்திருந்தனர்.  கரும்புச்சாறு கடை ஐஸ்கட்டி உடைக்கும் பெண்ணை சன்னமாக திட்டி தீர்த்துக்கொண்டிருந்தான் அவன்.  அக்கடையின் உரிமையாளன் போலும்.   இந்த பைபாஸ்லையே அந்த ஒரு கடைதான் உள்ளதால், கூட்டம் எப்போதும்  அலைமோதும். (அதனால், வேலையாட்களும் பழமண்டியும் சேர்த்து அவ்விடத்தில் உள்ளது.) ஐஸ்கட்டி உடைக்கும் பெண் ஒரு பெரிய வாளியில் இருந்த ஐஸ்மலையை தூக்கி மூடுபெட்டியில் நங்கென்று போட்டாள். நெருப்புபட்ட கைபோல்  செக்கச்செவேர்னு  சிவந்த கையுடன் சிறு துண்டுகளாக வெட்டி ஒவ்வொரு குவளைக்குள்ளும் போட்டாள்.

குழவி பிராயத்தில் ஆசிரியரிடம் அடி வாங்கின தருணம்போல, தாங்க முடியாமல் இரண்டு கைகளையும் உதறினாள். என்னவா இருக்கும்?  இந்த பெண்ணிற்கு என்று அவள் அருகில் சென்றாள் கமலினி.  

“ஏம்மா உங்களுக்கு ஏன் கண்கள் கலங்கி, கை உதறுகிறது?”

அவளோ கைகளின் கதகதப்பை அதிகப்படுத்த அருகில் கிடந்த சூடு கல்லில் கையினை தேய்த்தவாறு பதில் கூறினாள். “எனக்கு மூன்று நாளாக உடல்நிலை சரியில்லையம்மா.  நான் இங்கு வரவில்லை என்றால் என்னிடத்தில் வேறொருவர்! அதனால், வேறுவழியின்றி வந்து வலியை வாழ்க்கையாக்கி பழகிவிட்டேன்” என்று கூறியபடி அவளிடம் கரும்புப்பாலை நீட்டினாள்.  

குளிரில் துடித்த அவளின் கைகளுக்கு கருங்கல்லின் சூடு இதமாக இருந்தது.  கல்லிற்கு காணிக்கையாக இரண்டு சொட்டு கண்ணீரை விட்டு வேலையை பார்க்கத் துவங்கினாள். ஐஸ்கட்டி உடைக்கும் அப்பெண்ணின் நிலையை கண்ட கமலினியின் மனதிற்குள், கரும்புப் பாலின் குளிர்ச்சி செல்லாமல், மாறாக, நெருப்பு துண்டை விழுங்குவதுபோன்ற உணர்வு இத்தனை நாள் தன் மனதை ஆட்படுத்திய காழ்ப்புணர்ச்சி என்ற நெருப்பு கரும்புப் பாலில் அடித்து நொறுக்கப்பட்டது. சற்று நேரம் அலுவலகம் சென்று பணியை தொடராமல் நனவிலி மனதில் செல்லத் துவங்கினாள்.

இதையும் படியுங்கள்:
மதிய உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதில் இத்தனை நன்மைகளா?
ஓவியம்: ஜமால்

தன் மனம் தன்னுடன் பேசுவதை உணர்ந்தாள் கமலினி. “எனக்கு கீழ் வேலை பார்ப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக ஜெயந்தியை நான் எவ்வளவு துன்பப்படுத்தி விட்டேன். இன்று கரும்புச்சாறு கடையில் உள்ள பணிப் பெண் வருந்துவதுபோல அன்று கொட்டும் மழையில் அவள் நனைய நனைய, அவளை ஜுரத்தில் வேலை செய்ய வைத்து எனது காழ்ப்புணர்ச்சியை காட்டி அறியாமையில் இருந்ததை எண்ணி வெட்கமாக உள்ளது” என்று மனதினுள் வருந்திட்டாள்.

பெண்ணுக்கு எவ்விடத்திலும் பெண்ணே முதல் எதிரியாக இருக்கும் இழிநிலையை எண்ணி மனம் வருந்தி ஒற்றைக் கரும்புச்சாறு, தன் காழ்ப்புணர்ச்சியை கரைத்தது எண்ணி நெகிழ்ச்சியுற்றாள் கமலினி.     

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com