சிறுகதை - சுசீலாவின் காதல்!

ஓவியம்; ம.செ.
ஓவியம்; ம.செ.
Published on

-உதாதிபன்

செருப்பு சப்தம் கேட்டது. அப்பா வந்துவிட்டார். காலிலிருந்து விடுவிக்க முயன்று முடியாமல், மீண்டும் மீண்டும் முயற்சி செய்து.... சிந்தனை நிலையில் இல்லை என்பது செருப்பை உதறும் விதத்திலேயே தெரிந்தது.

"சுசீ... !"

கோபம்தான்.

தங்கை கசீலா ஓடிவந்தாள்.

"யாரவன்?"

"அப்பா...!"

"அதான் ஹோட்டல்லயிருந்து எவனோடவோ ஜோடியா வெளியே வந்தியே... மதியம் எதேச்சையாக அந்தப் பக்கம் வர்ற வேலையிருந்தது. கண்ணால பார்த்துத் தொலைச்சேன், யாரு..?"

"என்கூட வேலை செய்யறவர்.'' சுசீலாவின் முகமும், குரலும் நடுங்கியது. அப்பா அவளை இமைக்காமல் பார்த்தார்.

"எத்தனை நாளா?"

"ரெண்டு மூணு வருஷமா இருக்கார்."

"உன்னோட திருட்டுத்தனம் எத்தனை நாளா நடக்குதுன்னு கேட்டேன்.''

"நாலஞ்சு மாசமாத்தாம்பா பழக்கம்."

"காதலா?" அப்பாவால் சுற்றி வளைத்துப் பேச முடியாது."

"…………………"

"கேட்கறேனே....''

சுசீலா ஒப்புதலாய்த் தலையசைத்தாள். அம்மா சமையலறையிலிருந்து முகம் காட்டினாள். நிலமை புரிந்து, அங்கேயே கலவரத்துடன் நின்றாள்.

"பேர் என்ன?"

''ரவீந்தர்.''

"நம்ம ஜாதியா?"

"தெரியாதுப்பா. கேக்கல!" சுசீலா சற்று தைரியம் அடைந்திருந்தாள். அப்பா மேற்கொண்டு சில வினாடிகள் மௌனம் சாதிக்க, அவளே தொடர்ந்தாள்.

"நாங்க ரெண்டுபேரும் ஜாதி, மதத்தைப் பத்திக் கவலைப்படல. ஒருத்தரோட மனசை இன்னொருத்தர்..."

"ஸ்... பேசாத. இந்த பாரு. அவன் நம்ம ஜாதியாவே இருந்தாலும் சரி. நான் ஒத்துக்கமாட்டேன். இன்னையோட விட்டுடு. மீறி, திரும்பவும் அவனோட பழகினா வீட்டோட நிறுத்திடுவேன். உன் ஆயிரத்து இரு நூறுரூபா சம்பளத்தை நம்பி இந்தக் குடும்பம் இல்ல. என்னோட சம்பாத்தியமே போதும். புரிஞ்சுதா...?"

அப்பா போய்விட்டார்.

கடைசி இரண்டு வரிகள் என்னையும் தாக்கியதுபோல உணர்ந்தேன். பி.காம் முடித்து மூன்று வருடம் ஓடிவிட்டது. இன்னமும் வேலைக் கதவு திறக்கவில்லை.

சுசீலா என்னைச் சமீபித்து அருகே அமர்ந்தாள்.

என்னிடம் உதவி கேட்கப் போகிறாளா? தண்டச் சோறாய் நிற்கும் எனது பேச்சு எடுபடுமா?

பேசுவதற்கு வார்த்தைகளைத் தேடுவதற்குள், அம்மா வந்து, "ஏண்டி... உங்கப்பாவோட குணம்தான் தெரியுமே. தெரிஞ்சும் ஏன் இந்த மாதிரியெல்லாம் பண்ற?" என்றாள்.

''காதல் நாமா தேடிக்கறது இல்லம்மா. தானா வர்றது. ''

"வக்கணையாப் பேசு. நீயாச்சு. அவராச்சு... நடுவில நான் எதுக்கு?"

அம்மாவும் நகர்ந்துவிட்டாள்.

"என்னால் ரவியோட நேசத்தை உதற முடியாதண்ணா.''

"ஆனா அப்பாதான்..."

"அவரைப் பற்றி எனக்குத் தெரியும். சமாளிக்கறேன் பாரு" என்றாள் சுசீலா.

றுநாள் மாலை.

காலிங்பெல் ஒலிக்க, போய்த் திறந்தேன். வெளியே நின்றிருந்த இளைஞன் புன்னகை செய்தான்.

"ஹலோ...என் பேர் ரவீந்தர். நீங்கதான் சுசீலாவோட அண்ணனா?" என்றான் கைகுலுக்கி.

"எஸ். உள்ள வாங்க!" என்றேன்.

இவன் எதற்கு நேரடியாக, அதுவும் இன்றைக்கே வந்திருக்கிறான். நேற்றடித்த புயலின் பாதிப்பே இன்னமும் மறையவில்லையே!

சுசீலா வெளிப்பட்டாள்.

"ஹாய்... கரெக்டா வந்துட்டீங்களே. உட்காருங்க. அண்ணா நான்தான் இவரை வரச் சொன்னேன்.

“ஏன்?”

'அப்பாவோட பேசத்தான்."

'"அவர்தான் ஏற்கெனவே..." வார்த்தைகளை முடிப்பதற்குள் அப்பா. ரவீந்தர் எழுந்து நமஸ்கரித்தான். அறிமுகப்படுத்திக் கொண்டு, ''உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் சார்" என்றான்.

"எதுக்கு?" அப்பாவின் குரலில் கோபமும், எரிச்சலும் புலப்பட்டன.

"நேத்து நடந்ததையெல்லாம் சுசீலா எங்கிட்ட சொன்னா. சாரி, சொன்னாங்க. அவங்க எனக்குன்னு முடிவாகிறவரைக்கும் உரிமையோட பேசறது முறையில்ல..."

''உட்காருங்க."

"இருக்கட்டும் சார். யாசகம் கேட்டு வந்திருக்கேன். உட்காரக் கூடாது."

வார்த்தை அஸ்திரத்தை மிகச் சாதுர்யமாகவே பிரயோகிக்கிறான் என்பது அப்பாவின் முகபாவத்தில் தெரிந்த மாறுதல் உணர்த்தியது.

இதையும் படியுங்கள்:
கத்தரிக்காயை ஒதுக்கினால் இழப்பு உங்களுக்குத்தான்!
ஓவியம்; ம.செ.

"நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன் சார். எங்க காதலை உங்ககிட்ட மறைச்சது தப்புத்தான். மன்னிச்சிக்குங்க. பொதுவாகவே எல்லோர் வீட்டிலேயும் காதல்னாவே ஏதோ செய்யக்கூடாத குற்றமா நினைக்கறாங்க. ஆனா நீங்க அந்த மாதிரியில்லை, முற்போக்கான சிந்தனை யுடையவர்னு சுசீலா சொன்னாங்க. நான்தான் பயந்துக்கிட்டு, இப்போதைக்குச் சொல்ல வேண்டாம்னு அவங்களை சொல்லிவிடாம தடுத்துட்டேன். பட் நீங்களே கண்டுபிடிச்சிட்டீங்க. நிச்சயமா உங்களை ஏமாத்தறது எங்களோட நோக்கமில்லை. ஏதோ ஒருவித பயம். மரியாதையில மறைச்சிட்டோம். மற்றபடி எங்களோட விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது உங்க பொறுப்புத்தான் சார். இந்த நிமிஷமே பிரிஞ்சிடுங்கன்னு சொன்னீங்கன்னா அதுக்கும் சம்மதம்."

மைகாட்! நான் அசந்துவிட்டேன். சாமர்த்தியமான பேச்சு. அப்பா சுத்தமாய்த் தணிந்துவிட்டார்.

''ஆமாம்பா. உங்களோட வார்த்தையை மீறி நாங்க நடக்க மாட்டோம். இது சத்தியம்!" என்றாள் சுசீலாவும் தன் பங்குக்கு.

"முதல்ல உட்காருங்க. சுசீ.. போய் காப்பி கொண்டு வா..." என்றார். பிறகு ரவீந்தரிடம் திரும்பி, "நேத்து ஏதோ ஆத்திரத்துல பேசிட்டேன். எனக்கு மட்டும் சுசீயோட சந்தோஷத்தில அக்கறையில்லையா? சின்ன வயசு, அனுபவம் பத்தாது. உணர்ச்சி வேகத்தில ஏமாந்திடப் போறாளேன்னுதான் கண்டிச்சேன்."

"என்னைப் பார்த்தா ஏமாத்தறவன் மாதிரியா சார் தெரியுது?" புன்னகை மாறாமலேயே கேட்டான்.

அப்பா அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார்.

"சேச்சே...! உங்க அப்பா, அம்மா எங்கே இருக்காங்க?"

''சொந்த ஊர் கடவாசல்ல சார். சீர்காழிக்குப் பக்கம்."

"அவங்களை வரச் சொல்லுங்க. பேசி முடிச்சிடலாம்."

நடப்பவற்றை நான் கனவா, நனவா என்று புரியாத நிலையில் கவனித்துக்கொண்டிருந்தேன்.

சுசீலா உற்சாகம் பொங்க என்னைத் தேடி வந்தாள்.

"சொன்னபடியே சமாளிச்சிட்டியே!" என்றேன்.

"ம். அப்பாவுக்கு நான் காதலிக்கிறதில கோபமில்லை. அவருக்கு இம்பார்டன்ஸ் கொடுக்காம, என் விருப்பத்துக்கு நடந்துக்கிட்டதுலதான் கோபம். அதனாலதான் அவரை வரச் சொன்னேன். அவர் பேசற விதமாப் பேசினதும் அப்பா தணிஞ்சிட்டார். புரியுதா?"

எனக்குப் புரிந்தது.      

தாம் புறக்கணிக்கப்பட்டு விட்டோம் என்ற காரணத்தினால் நேற்று தவறாகத் தெரிந்த சுசீலாவின் காதல், இன்றைக்குத் தம்மிடமே முடிவுக்கு விடப்பட்ட காரணத்தினால், சரியாகத் தோன்றிவிட்டது அப்பாவுக்கு. அவருடைய பலவீனம் தெரிந்து சுசீலா சாதித்துக்கொண்டு விட்டாள்!

பின்குறிப்பு:-

கல்கி 08  மே  1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com