கத்தரிக்காய் நமக்கு எளிதில் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று. கத்தரிக்காயை வைத்து பல விதமான சமையல்கள் செய்யலாம். வீட்டில் கூட சிலர் கத்தரிக்காய் செடியை வளர்ப்பதுண்டு. ஆனால், இந்த கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்று தெரியுமா?
குழந்தைகள் கத்தரிக்காயை ஒதுக்கி வைப்பார்கள். சில இளைய தலைமுறையினரும் கத்தரிக்காயை பிடிக்காமல் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். அவ்வாறு கத்தரிக்காயை நீங்கள் ஒதுக்கி வைப்பது உங்களுக்கு தான் இழப்பு. உண்மையில் கத்தரிக்காய் பல வித நன்மைகளை அள்ளித் தருகிறது. அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நம் வாழ்க்கைமுறைக்கு அவசியமான ஒன்று.
கத்தரிக்காயின் நன்மைகள்:
கத்தரிக்காயில், 'சோலாசோடின்' எனும் ரசாயனம் இருக்கிறது. இது மாரடைப்பு மற்றும் கல்லீரல் வீக்கத்தை தவிர்க்க வழங்கப்படும் மாத்திரைகளில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதனை மருத்துவத்திற்கு உதவும் காய் எனக் கூறலாம். மேலும் கத்தரிக்காயில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பொட்டாசியம், சர்க்கரை மற்றும் வைட்டமின் B6 போன்றவை அடங்கியுள்ளன. இது தவிர, மாங்கனீசு, வைட்டமின் A , C , B1, B2, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
இது பசியின்மையை நீக்குகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கிறது. மூச்சுவிடுதலில் சிரமம், மரத்துவிடுவது போன்ற பிரச்னைகளையும் குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது. கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைக்கிறது.
ஒவ்வொரு நிற கத்தரிக்காய்க்கும் தனித்தனி பண்புகள் நிறைந்துள்ளன.
பச்சை நிற கத்தரிக்காய்
பச்சை நிற கத்தரிக்காயை சாப்பிடுவதால் வாயு பிரச்னை, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை குணமாகும். எனவே, வயிற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தால், பச்சை கத்தரிக்காயை சாப்பிடலாம்.
பச்சை நிற கத்தரிக்காயில் வைட்டமின் C உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை இது வலுப்படுத்துகிறது.
வெள்ளை நிற கத்தரிக்காய்
வெள்ளை நிற கத்தரிக்காய் குறைந்த கலோரி கொண்டது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் C , K , பொட்டாசியம் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள, 'அந்தோசயினிகள்' ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலை பாதுகாக்கின்றன.
புற்றுநோய், இதயநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதோடு இதிலுள்ள நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல் பிரச்னையை தடுக்கிறது.
வெள்ளை நிற கத்தரிக்காய் உடலுக்கு அதிக சூடு தரும் என்பதால் இதை மழை காலத்தில் கூட எடுத்துக் கொள்ளலாம்.
சிலரின் உடம்பின் தன்மைக்கு இந்த கத்தரிக்காய் ஒத்துப்போகாமல் அலர்ஜியை உண்டாக்கலாம். எனவே உடம்பில் சொறி, சிரங்கு, புண் உள்ளோர், இந்த கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.
ஊதா நிற கத்தரிக்காய்
ஊதா நிற கத்தரிக்காயில் அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதிலுள்ள பாலிபினால்கள், புற்றுநோய் செல்கள் படையெடுப்பதை தடுப்பதுடன், புற்றுநோய் உயிரணுக்களின் இறப்பையும் ஊக்குவிக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கவும் இது உதவுகிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய்க்கு அதிக பங்குள்ளதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
ஆன்டி ஆக்சிடண்ட் மட்டுமல்ல, நீல நிற கத்தரிக்காயில் வலி நிவாரண குணமும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கத்தரிக்காய் காய்ச்சலை குறைப்பதாக சொல்லப்படுகிறது. இதில் வீக்கத்தைக் குறைக்கும் திறன், ஆஸ்துமா எதிர்ப்பு, கொழுப்பைக் குறைப்பது, ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, செரிமானத்துக்கு உதவுவது என பல மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளன.