சிறுகதை – தடுமாற்றம்!

ஓவியம்; மருது
ஓவியம்; மருது

-திருவையாறு பாலு

மொத்தம் மூன்று 'போட்டோ'க்கள் இருந்தன. இரண்டு கறுப்பு வெள்ளையிலும், ஒன்று கலரிலும். முதல் ‘போட்டோ'வில் அந்தப் பெண் உயரமாய் லேசாய் மிரட்சியுடன் நின்றிருந்தது. கை வைக்க ஒரு மேடை போட்டு அதில் இடது கையை மடித்து வைத்திருந்தது. பின்பக்கம் உயரமாய் ஆளுயர நிலைக் கண்ணாடி. தலையின் நெற்றிச் சுட்டியுடன் இணைத்து பின்பக்கமாய் நெடுக தாழம்பூ வைத்து, ஜடை பின்னி, அது பின்புற முழங்கால் வரை தொங்கிக்கொண்டிருந்தது. கண் மை  ‘பளிச்'சென இருந்தது.

“இது பெரிசானப்ப எடுத்ததாம்...” என்றாள் அக்கா.

இரண்டாவது போட்டோ க்ளோஸப். தோளோடு தலை மட்டும் பிளாஷ் போட்டு எடுத்திருக்கிறார்கள். பவுடரோடு லிப்ஸ்டிக்கெல்லாம் போட்டு அசிங்கமாய் இருந்தது. செயற்கையாய்ச் சிரிப்பு... ஃபோட்டோகிராஃபரின் ‘ஸ்மைல் ப்ளீஸ்...' உடனே அடுத்த போட்டோவுக்கு போனான். கலர்.

“அவங்க வீட்டு மாடியில எடுத்தது..."

தொட்டி ரோஜாச் செடி அருகே அதிகாலையில். மஞ்சள் பட்டுப் புடைவையில் வாடாமல்லி கலர் முன்றானை. ஜரிகையெல்லாம் வைத்து, கல்யாணப் பெண் போல. முகம் மட்டும் அலங்காரமில்லாமல் ‘சிம்பிளாக' இருந்தது.

“புடிச்சிருக்கா...” என்றாள் அக்கா. தோள் வழியாக. ஒரு நொடியில் வாழ்க்கையை நிச்சயிக்கும் நேரம். ‘இந்தப் பெண்ணா... இந்தப் பெண்ணா என்னோடு கடைசி வரை....' முகத்தை உற்றுப் பார்த்தான்.

“பேரென்னவாம்...” என்றான், முனகலாய்.

"அப்ப புடிச்சிருக்கு...”

"பேர்தான் கேட்டேன்..." என்று முறைத்தான்.

“சுசித்ரா...” என்றாள். “பேர் நல்லாத்தான் இருக்கு...” என்று சொல்லிவிட்டுப் போனவள் திரும்பி, “நல்லா பாரு. முடிவு பண்ணிக்கோ...” என்று போய்விட்டாள். ஃபோட்டோவை மீண்டும் பார்த்தபோது பிடித்த மாதிரியும் இருந்தது. பிடிக்காத மாதிரியும் இருந்தது. பின் யோசிக்கும்போது ஒன்றும் தோன்றவில்லை. மனசு ரொம்ப நிச்சலனமாய் இருந்தது. எதுவுமே தோன்றாமல் கொஞ்ச நேரம் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்து விட்டு சாப்பிடப் போனான்.

“என்ன பார்த்தாச்சா?” என்றாள் அக்கா, கிண்டலாக.

“ம்..." என்று பெருமூச்சு விட்டான்.

“என்ன முடிவு பண்ணியிருக்க...”

“நீ என்ன சொல்றே...?”

"நானா கல்யாணம் பண்ணிக்கப் போறேன்...?"

“அப்ப வேணாம்.”

“என்ன விளையாடறியா...?" என்றாள் முகம் மாறி.

“அக்கா! இங்க பாரு... கல்யாணம்னு சொன்னவுடனே நான் ஏதோ மோகத்துலயோ, வெக்கத்துலயோ பேசறதா நினைச்சிக்காதே. நிஜமா எனக்குப் பயமாயிருக்கு...”

“பயமா...? அடப்பாவி...!”

''பின்ன ஒரு போட்டோவைக் கொடுத்து உன் வாழ்க்கையைத் தீர்மானிச்சுக்கன்னா...''

“வேறென்ன வேணும்...?”

“நிறைய யோசிக்கணும். நிறைய பேசணும்…”

“யார்கிட்ட?"

“உன்கிட்ட... அந்தப் பொண்ணுகிட்ட..."

“பேசு...பேசுவோம்...”

விவேகானந்தனுக்கு நிறைய பேசப் பிடிக்கும். அக்காவிடம் நிறைய பேசியிருக்கிறான். வேறு ஆளில்லாத குறையோ என்னவோ, பேசித் தீர்த்திருக்கிறான். அப்பா அம்மாவெல்லாம் அழுக்கு கலர் சட்டமிட்ட மங்கலான கண்ணாடியில் இரண்டு கறுப்பு வெள்ளை உருவங்கள். அவ்வளவுதான். வேறெதுவும் தெரியாது. மற்றபடி எல்லாம் அக்காதான். இதுநாள்வரை. இனிதான் தீர்மானிக்க வேண்டும்.

தூங்கப் போகும்போது அக்கா கூப்பிட்டாள்.

"பேசணும்னியே..."

"சொல்லு..."

"இங்க பாரு... பொண்ணு பி.எஸ்ஸி., படிச்சிருக்கா. நல்ல சிவப்பு. உன்னைவிட ரெண்டங்குலம் உயரம் குறைச்சல். ஓயர் கூடை பின்னுவா. தையல் தெரியும். 'கலகல'ன்னு பழகற சுபாவம். கடை கண்ணிக்குப் போக நல்ல பழக்க வழக்கம். உனக்குச் சரியானவ..."

"அதுமட்டும் போதுமா... எனக்கு ஒத்துப் போகணுமே..."

“எப்படி... புரியல?"

"என்னோட 'டேஸ்டுக்கு' ஒத்து வருவாளா?”

"நல்லாவே சமைப்பாளாமே..."

"‘டேஸ்டு’ன்னா காரக் குழம்பு, சுட்ட அப்பளம்னு சொல்லலை... மனசு ரீதியா... எனக்கு நிறைய பேசணும். ஒளிவுமறை வில்லாம... ராத்திரி ஒரு மணி வரைக்கும் படிக்கணும். ஆடம்பரம், பந்தா இல்லாம எப்போதும் ‘சிம்பிளா' இருக்கணும். மழை பார்க்கப் பிடிக்கும். மழைத் தண்ணியில வெறுங்காலால நடக்கப் பிடிக்கும். ரொம்ப மெதுவா ‘மேண்டலின் மியூசிக்' பிடிக்கும். இன்னும்...”

''இதே மாதிரிதானா இன்னும்...''

"அப்படி இல்ல..."

"அப்ப வர்றவ உனக்குத் தகுந்த மாதிரி சுத்தமா மாறிக்கணும். அவ்வளவுதான்..."

"அப்படியும் சொல்ல முடியாது. அவ விருப்பப்படியும் இருக்கலாம்...''

"நீ மாறுவியா...?"

"யாரும் மாற வேண்டாம்... முகம் சுளிக்காம... கொஞ்சம் ஒத்துழைப்பு..."

"சின்ன விஷயத்துக்கெல்லாம் ரொம்ப தடுமார்ற. வாழ்க்கைங்கிறதே 'அட்ஜஸ்ட்மெண்ட்'தான். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்தல்தான்... உன் உடம்புக்குத்தான் வயசு இருபத்தெட்டாச்சே தவிர, மனசுக்கு இல்ல... இன்னும் கான்வென்ட் பையனாத்தான் இருக்கே...''

"இதிலகூட என் விருப்பப்படி இல்லேன்னா எப்படி...?"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ என்னென்ன பேசணுமோ எல்லாம் அந்தப் பொண்ணுகிட்டயே நாளைக்குப் பேசு. நாளைக்கு நாம போறோம் பொண்ணு பாக்க. இப்பப் போய்ப் படு. ரொம்ப யோசிக்காதே... பைத்தியமாயிடுவே.." என்றாள் எரிச்சலாய்.

இதையும் படியுங்கள்:
பெண்களை 5 வகைகளில் அழகாக்கும் விளக்கெண்ணெய்!
ஓவியம்; மருது

றுநாள் விவேகானந்தன் ஆபீஸுக்கு அரை நாள் லீவு போட்டுவிட்டு அக்காவோடு பெண் பார்க்கப் போனான்.

"எப்படியாவது பொண்ணுகூட பேசறதுக்கு அனுமதி வாங்கித் தரேன். நல்லாப் பேசு. நிறைய பேசு... என்ன?"

"பார்க்கலாம்" என்றான் மெதுவாய். "அக்கா! உனக்கே தெரியும். எனக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகம். பொண்ணு என்னைவிட எல்லாத்திலயும் அழகு, படிப்பு, 'பர்சனாலிடி'. நீ சொன்ன மாதிரி ரெண்டங்குலம் குறைச்சலா இருந்தா நல்லது. அது மாதிரி பாத்துக்கோ...''

"இதென்ன புதுக்கதை?"

''ஆமாம்... பின்னால நான் பெரிய ஆளா... நீ பெரிய ஆளா'ன்னு பிரச்னை வரக் கூடாது..."

"அப்ப எங்கியாவது கிராமத்தில கண்டாங்கிப் புடைவை புடிக்க வேண்டியதுதான்..."

"அப்படியும் இல்ல.. கொஞ்சம் மாடர்னா இருந்தா தப்பில்லே... நாலு இடம்... ஆஃபீஸ் ஃபங்ஷன் அது இதுன்னு... பாத்துச் சிரிக்கிற மாதிரி இருக்கக்கூடாது.."

"ரொம்ப குழம்பிட்டேடா..."

பெண் வீட்டுக்குப் போனபோது வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டு, இரண்டு பெரிசுகள் ரொம்ப சம்பிரதாயமாய்க் கும்பிட்டது. ஒருவர் பெண்ணின் அப்பாவாம். வந்த இடத்துக்குச் சம்பந்தமில்லாமல் எதை எதையோ பேசிவிட்டு கடைசியில் "ஆங்... பெண்ணைக் கூப்பிடுங்கப்பா..."

அந்தப் பெண் வந்தது. 'ஃபோட்டோ'வில் பார்த்ததைவிட கன்னம் கொஞ்சம் செழிப்பாய் இருந்தது.

பொத்தாம் பொதுவாய் எல்லாரையும் கும்பிட்டுவிட்டு இவனைப் பார்த்து 'ஹலோ' என்றது. எதிர்பாராதவனாய் 'ஹலோ' என்றான் திரும்ப. அக்காவைப் பார்க்க, அவள் காதோரம் 'பி.எஸ்ஸி' என்றாள்.

காப்பி, டிபனெல்லாம் சாப்பிட்ட பிறகு அக்கா பெண்ணின் அப்பாவின் காதில் மெதுவாய் கிசுகிசுக்க, அவர் சப்தமாய், "பேஷா... தாராளமா... இதென்ன புதுசா இப்பவெல்லாம்..." என்றபோது, விவேகானந்தன் கையில் சிவப்பாய் - இரண்டு சொட்டு தெறித்தது. வெற்றிலை எச்சில்.

ந்த 'ரூம்' ஏதோ 'கோடௌன்' போல இருந்தது. சுசித்ரா நாற்காலியை இழுத்துப்போட்டு, “உட்காருங்க..." என்றாள்.

காலோரம் ஏதோ 'புசுபுசு'வென உறுத்தியது. கால் நகர்த்த 'மியாவ்' என்றது.

"வளக்கறோம் ..." என்று சொல்லி அந்தப் பூனையை அதட்ட, அது மெதுவாய் கண் சிமிட்டிக்கொண்டு நகர்ந்தது.

"சார்... பேரென்ன சொன்னீங்க... விவேக்கா?"

''விவேக்... விவேகானந்தன்...''

''நீங்க பேசறதுக்கு முன்னாடி நான் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திடறது நல்லது. என்னைப் பொறுத்தவரைக்கும் நோ ஃபார்மாலிட்டீஸ்.. மனசு விட்டு சிலது சொல்லிடறேன். 'வித் யுவர் பர்மிஷன்?''

"ம்..." என்றான் சன்னமாய்.

"ஒரு பொண்ணுங்கிறதால என் அப்பா, அம்மா, குடும்பம், கௌரவம் இதுக்கெல்லாம் கட்டுப்பட்டு நான் சிலதை இழந்திருக்கேன். என்னோட ஆசைகள், எண்ணங்கள் இதுக்கெல்லாம் ஒரு தடை எனக்காகப் போட்டு வச்சிருந்தேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நான் முழுசாவே நானா இருக்கணும்னு நினைக்கிறேன்..."

இதையும் படியுங்கள்:
இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
ஓவியம்; மருது

"புரியலை..."

"நீச்சல், கராத்தே இதிலெல்லாம் எனக்குப் பயங்கர தாகம் உண்டு. ஒரு 'ஆவரேஜ்' குடும்பப் பெண்ணா ரெண்டு குழந்தை பெத்துட்டு ஸ்கூட்டர் பின்னாடி உட்கார்ந்து சினிமா போறது மட்டும்தான் வாழ்க்கையா இருக்கறதை நான் விரும்பலை... கொஞ்சம் வித்தியாசப்படணும்னு நினைக்கிறேன்..."

விவேகானந்தன் மௌனம் காத்தான்.

அவள் இன்னும் அருகே குனிந்து,

"சார்... கத்துக்க நிறைய இருக்கு இந்த உலகத்தில. தையலும், ஒயர் கூடையும்தான் எங்க வீட்ல முடிஞ்சது. குடும்பம், குழந்தை தவிர எனக்காகச் சுதந்திரமா நேரத்தைச் செலவழிக்க முடியுமா? கடிகாரம் மாதிரி சுத்திச் சுத்தி ஒரே ஆளை மையமா வச்சு சுத்திக்கிட்டிருந்தா என்ன சுவாரஸ்யம் இருக்கு? சொல்லுங்க..."

"ஆக நீச்சலும், கராத்தேயும் மட்டும்தான் உங்க லட்சியமா?"

"அப்படி இல்ல. இன்னும் இருக்கு. கராத்தே, கம்ப்யூட்டர்னு பெரிய லிஸ்ட். இப்பப் பேச நேரமில்லை. இப்பவே பாருங்க யாரோ ஜன்னல் வழியா எட்டிப் பார்க்கிறாங்க..."

"உங்க வீட்ல உங்களுக்குக் கொடுக்க முடியாததை கணவன்கிட்ட எதிர்பார்க்கிறீங்க..."

"நிச்சயமா..." என்றாள். "தப்பா?"

"தப்புன்னு எதுவுமில்ல... நாளைக்கிக் குழந்தை குட்டின்னு ஆயிட்டா எப்படி... எதில கவனம் செலுத்துவீங்க...?"

"அது பாட்டுக்கு அது... இது பாட்டுக்கு இது..."

"ஆத்தில ஒரு கால்... சேத்தில ஒரு கால்'னு ஆயிடாதா?"

"சும்மா பழமொழி சொல்லியெல்லாம் என்னைக் குழப்பப் பார்க்காதீங்க! நான் தெளிவா இருக்கேன்..."

"சரி..." என்று யோசித்துவிட்டு, "இதுக்கு நான் சம்மதிக்கலேன்னா...?" என்றான்.

"ஸோ சிம்பிள்! பெண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிடுங்க!"

விவேகானந்தன் ஒருமுறை மனசை உலுக்கிக்கொண்டான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உலகம். கற்பனைகள், ஆசைகள், லட்சியங்கள்.

"நான்தான் முதல்முறையா உங்களைப் பொண்ணு பார்க்க வந்திருக்கேன்னு நினைக்கிறேன்..."

'ஆமாம்...''

"ஓகே!" என்றான். எழுந்துகொண்டான்.

"என்ன எழுந்துட்டீங்க! பேசலை...?"

'மறந்து போச்சு!" என்று சொல்லி விட்டு வெளியே போனான். அக்கா மெதுவாய் அருகே வந்து," என்னாச்சு?" என்றாள்.

"வீட்ல பேசிக்கலாம்..."

எல்லோரும் இவர்கள் முகத்தைப் பார்க்க, அதே வழக்கமான...

''வந்து சொல்றோம்...''

ஸ்ஸில் போகும்போது அக்கா மீண்டும், ''என்னாச்சு? " என்றாள்.

"என்னை மாதிரியே நிறைய குழப்பங்கள் இருக்கு..."

''புடிச்சிருக்கா இல்லியா?"

"தெரியலை..." என்றான்.

பின்குறிப்பு:-

கல்கி 28  நவம்பர்  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com