சிறுகதை – தத்து!

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

-ரிஷபன்

ஸ்ஸார் ஸபா வாசலில் வந்து சொல்லிவைத்த மாதிரி செருப்பு அறுந்தது.

கையில் 'பளப்பளா' அழைப்பிதழ். இன்னும் அரை மணியில் நிகழ்ச்சி. இடம் தேடி வசதியாய் அமர வேண்டும். குரு இங்கே எனக்காகக் காத்திருப்பதாய் நேற்றே ஃபோன் செய்தான்.

நிறைய நிகழ்ச்சிகளுக்காக வந்த இடம்தான். சபா வாசலில் சற்று தள்ளி செருப்பு தைப்பவர் இருக்கிறார். வயசானவர். என் தோஸ்த். 'இவரைப் பற்றி' என்று ஒரு முறை 'மதுரத்'தில் புகைப்படத்துடன் கட்டுரை எழுதியிருக்கிறேன்.

இருந்தார். பல் டாக்டரிடம் போனால் கூடச் சொல்ல வேண்டும்.'கடவாப் பல்லில்... வலி என்று. இங்குதான் கேள்வி, பதில் இல்லாத இடம். மௌன பாஷை. தேவை சுலபமாய்ப் புரிபடும்.

கழற்றி விட்டு, தள்ளி நின்றேன்.

பெரிய பெரிய போஸ்டர்கள். சபா வாசலில் மின்னுகிற எழுத்துக்கள். எல்லாப் பிரமுகர்களும் வருகிறார்கள். சினிமா உலகமே வரப் போகிறது. சங்கீத ரிஷி வருகிறார். டைரக்டர் காண்டீபன் வருகிறார். எத்தனை கிசுகிசுக்கள் கிடைக்குமோ...

என் அவசரம் புரிந்த மாதிரி செருப்பு நொடியில் தயார். 'அய்யாகிட்டே கொடுரா' என்றதும் ஒரு சிறுவன் என்னருகில் கொண்டு வந்தான்.

பர்ஸைத் துழாவுமுன் குரு வந்துவிட்டான்.

"உனக்காக எத்தனை நேரம் காத்துக்கிட்டு இருக்கறது?"

என் நிலை அவனுக்குப் புரிபடுவதற்குள் பாதி தூரம் இழுத்துப் போய் விட்டான். சரி, திரும்பும்போது தரலாம் என்று போனேன்.

'கல்யாணம் ஆகலேன்னு மறுப்பு விட்டாங்கதானே. உள்ளே வந்து பாரு. ஜோடியா வந்து உட்கார்ந்திருக்காங்க.''

முதல் கிசுகிசு சுவாரசியமாய் ஆரம்பித்தது.

ஹால் நிரம்பி வழிந்தது. வெளியில் பாஸ் இல்லாமல் எங்களைப் பொறாமையுடன் பார்த்த நபர்களைக் கடந்து 'பிரஸ்' என்று ஒதுக்கியிருந்த இருக்கைகளைச் சமீபித்தோம்.

இதர நிருபர்களில் பலர் அறிமுக முகங்கள். சம்பிரதாயப் புன்முறுவல்கள். கையாட்டல்கள். சங்கேதப் பேச்சுக்கள்.

"ஃபங்ஷன் எப்ப ஆரம்பிக்கும்."

"ரொம்ப அவசரப்படாதே அங்கே பாரு மூணாவது 'ரோ'வில் நாலாவது சீட்... அஞ்சாவது சீட் அடுத்த கிசுகிசு புரியுதா?"

மிக நெருக்கமாய் இரண்டாவது விவாகரத்து செய்த நாயகனும், அவனுடன் நடித்த புதுப்பட நாயகியும்.

"கீழே மேலே' படம் சக்கைப் போடு போட்டிருச்சே. ஏகப்பட்ட வசூலாமே?" என்றேன்.

"வசூலாகி என்ன புண்ணியம்? பாட்டைப் பார்த்தீல்ல? படம் பூரா வசனம் காதால கேட்க முடியாது. பேரு ரிப்பேரு ஆயிருச்சு."

"பைசா வந்தா போறாதா. பேரைப் பத்தி எவன் கவலைப்படறான்?"

"ஓரளவுக்கு அந்தப் பயமும் இருக்கு. இல்லாமியா இப்ப இந்த விழா?"

"இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

இது ஒண்ணும் வெற்றிவிழா இல்லியே?"

"பொறுத்திருந்து கவனி.''

இதையும் படியுங்கள்:
சருமத்தைப் பாதுகாக்கும் எண்ணெய் வகைகள்!
ஓவியம்: அரஸ்

மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டாவது ஹீரோயினாய் பரிமளிக்கிற நடிகை, நிகழ்ச்சி நிரலைத் தொகுத்தார். இடையிடையே உச்சி குளிர வைக்கும் அறிமுக வசனங்கள். நிச்சயம் அடுத்த பட சான்ஸை இந்த மேடையிலேயே நிர்ணயித்து விடுகிற மாதிரி.

"எத்தனையோ விழாக்களை நாம சந்திச்சு இருக்கோம். இது வெற்றிப் பட விழா இல்லே. ஒரு தனிப்பட்ட மனிதன் தன் துறையில் தொடர்ந்து ஏன் வெற்றிகளையே சந்திக்கிறான்னு புரிய வைக்கிற விழா. மனசு நல்லா இருந்தா சக்ஸஸ் தானா வரும். அந்த அடையாளமா, இதோ உங்க முன்னிலையில்...உங்கள் இயக்குனர் காண்டீபன்.''

படபடவென்று கைத்தட்டல்கள். ஏகப்பட்ட ஃபிளாஷ்கள். வீடியோ விளக்குகள். ஆளுயர மொத்த மாலை. ரோஜா இதழ்கள் சிதறின. டைரக்டர் புகழின் கனம் தாங்காமல் தள்ளாடினார்.

வரிசையாய்ப் பாராட்டுதல்கள் தொடர்வதற்கு முன் விழாவின் நோக்கம் தெரிவிக்கப்பட்டது.

"எத்தனை பேருக்குங்க இந்த மனசு வரும்! ஒரு அனாதைக் குழந்தைய தத்து எடுத்துக்க நீங்க முன் வருவீங்களா? பல தடவை யோசிப்போம். பின் வாங்கிருவோம். இதோ நம்ம முன்னால செயற்கரிய செயலைச் செஞ்சுட்டு சாதுவா நிக்கிறாரே இவரைப் பார்த்து பொறாமையா இல்லே!"

டைரக்டர் மைக்கைப் பற்றி இடைமறித்தார்.

"நீங்க எல்லாரும் செய்யணும். நான் வழிகாட்டி. அவ்வளவுதான். சினிமாக்காரன்னு சொன்னாலே... ச்சீன்னு பேசறவங்க மத்தியில அவங்களும் மனுஷங்கதான். நல்ல இதயம் அவங்ககிட்டேயும் இருக்குன்னு காட்டத்தான் இந்த விழா. இனி இதுபோல செயல்கள் தொடரணும்."

படபடவென கைத்தட்டல்கள் மீண்டும்.

"பார்த்தியா. எதுக்கு இந்த தத்து விழான்னு புரியுதா?"

நான் பேசவில்லை. பரபரப்பான இந்த விழா. இந்த நேருக்கு நேர் புகழுரைகள். சரிந்து போனால் உதறவும் நிமிர்ந்து நின்றால் ஜால்ராவுமாக காக்கைக் கூட்டம். பணத்தை வீசினால் எதையும் நிகழ்த்திக் காட்டலாம்.

இதுவரை தோன்றாத ஒரு ரிப்போர்ட்டரின் மனசுக்குள் அலுப்பு. எழ முயன்றேன்.

"என்ன?" என்றான் குரு. தொடர்ந்து,

 "முட்டாள். இனிமேதான் களை கட்டப் போவுது. சங்கீத ரிஷி கையால அந்தக் குழந்தையை தத்து எடுக்கப் போறாரு. பார்க்க வேணாமா?"

''நீ பார்த்துட்டு வா. காலைல ஃபோன் பண்றேன். அரைப்பக்க நியூஸுக்கு இதுவரை நான் பார்த்ததே போதும்."

இதையும் படியுங்கள்:
வெப்பம் நம்மை மட்டுமா சுடும்? ஐந்தறிவு ஜீவன்கள் என்ன செய்யும்?
ஓவியம்: அரஸ்

கூட்டத்தில் நீந்தி வெளியே வர மிகவும் சிரமப்பட்டேன். எத்தனை எரிச்சல் குரல்கள்.

வெளியில் கிழவன் இன்னமும் காத்திருந்தான். ஏதோ பழைய செருப்பின் அறுந்த வாரைத் தைத்துக் கொண்டிருந்தவனின் பக்கத்தில் ஒரு அரை டிராயர் சிறுவன். இன்றுதான் பார்க்கிறேன்.

''ஸாரி. பணம் கொடுக்காம போயிட்டேன்" என்றேன் ரூபாய் நோட்டை நீட்டியபடி.

''ஐயாவைத்தான் தெரியுமே. இன்னைக்கு தரலேன்னா நாளைக்கு... ஏமாத்தவா போறீங்க?''

''யாரு இது?'' உன் பேரனா?"

சிறுவன் கையிலும் தோல் செருப்பு. ஊசி .

"இல்லீங்க. பக்கத்து வூடு. அப்பன், ஆயி ரெண்டு பேருமே செத்துட்டாங்க. குடிசை தீப்பத்திக்கிச்சு. இவன் மட்டும் வெளியே இருந்ததாலே பொழைச்சுக்கிட்டான். அப்படியே வுட்டா... சோறு தண்ணி இல்லாம் அலைவான். பிச்சை எடுப்பான். சரி, நம்ம தொழிலைக் கத்துக் கொடுக்கலாம்னு வச்சுக்கிட்டேன். எனக்கும் வேற நாதி இல்லியே."

கிழவன் விரல்கள் துரிதமாய் இயங்க, வாய் மட்டும் பேசியது.

பசி தெரியாத, ஆதரவு கிடைத்துவிட்ட அனாதை முகம். மிகச் சுலபமாய் எந்த விழாவுமின்றி தத்து.

திரும்பிப் பார்த்தவன் பார்வையில் எதிர் சபா மின்விளக்குகளின் அலங்காரம்.

ரிப்போர்ட்டைவிட மனசுக்கு இதமாய்க் கிடைத்த விஷயத்தில் உள்ளூர நெகிழ்ந்தேன்.

பின்குறிப்பு:-

கல்கி 13  நவம்பர் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com