சிறுகதை - இங்கே எல்லோருக்கும் இடமுண்டு!

aras drawing
aras drawing
Published on

-ஆர். சூடாமணி

“காவேரி!”

“ம்?”

“பாலு லெட்டர் போட்டிருக்கான்.”

“என்ன விஷயம்? லலிதா சௌக்கியந்தானே?”

“ம்,ம். அவளுக்கு உடம்பெல்லாம் தேவலையாம். ஆனா என்ன இருந்தாலும் டி.பி. வந்த 'உடம்பில்லையா?  மருந்து, ஆகாரங்களைத் தவிர இன்னும் கொஞ்ச காலம் நல்ல ஓய்வு வேணும். ஆனா அவன் அம்மா அதுக்குள்ளேயே அவளைச் சமைக்கிறது, பம்ப் அடிக்கிறது அப்படின்னு எல்லா வேலையும் செய்யச் சொல்றாளாம். இவன் தடுக்கப் போனா, பெண்டாட்டிதாசன்னு ஏசறாளாம். வீட்டில் தகராறு வேணாம்னு லலிதா வேலையெல்லாம் செய்யறாளாம். அதனால...”

“பேசாம அவளை இங்கே ஒரு மூணு மாசத்துக்கு அனுப்பி வைக்கும்படி அவ மாமனாருக்கு லெட்டர் போடுங்கோ.”

ஸ்ரீதர் மனைவியை வியப்புடன் பார்த்தான். “அப்படிப் போடும்படி என்னைக் கேட்டுத்தான் பாலு எழுதியிருக்கான். அதே யோசனை உனக்கும் எப்படி வந்தது?”

“இந்தச் சந்தர்ப்பத்தில் வேறென்ன யோசனை வர முடியும்? லலிதாவுக்கு நாதியில்லையா என்ன? பெத்தவா இல்லாட்டாலும் அண்ணனும் மன்னியும் இருக்கோமில்ல? கொஞ்ச காலம் நம்மகூட வச்சுக்க ஆசைப்படறோம்னு சொல்லி அவளை அனுப்பச் சொல்லுங்கோ.”

வீடு கலகலப்பாயிருந்தது. காவேரியும் ஸ்ரீதரும் தத்தம் அலுவலகம் சென்றபின்,  லலிதா பகலெல்லாம் ஓய்வெடுப்பாள். புத்தகம் படிப்பாள். களைப்பாயிருந்தால் தூங்குவாள்.

அவர்களுடைய ஏழு வயது மகன் பரத் 'அத்தை அத்தை' என்று ஒட்டுதலாய் இருந்தான். அவளுக்கும் அவனிடம் உயிர். மாலையில் எல்லோரும் ஒன்றாக அருகிலுள்ள பூங்காவுக்குக் காற்றாடப் போய் வருவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமா, கடற்கரை என்று போவார்கள்.

இரவு நேரங்களில் மனம் போனபடி இறுக்கமின்றி, சகோதரனிடமும் அவன் மனைவியிடமும் லலிதா பேசிக்கொண்டிருப்பாள். அதுவும் காவேரியும் அவளும் இரவில் வெகு நேரம் வரை சின்னக் குரலில் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கையில் ஸ்ரீதர் “அடடா, போதுமே பேச்சு! ரெண்டு பெண்கள் சேர்ந்தாலே பேச்சு, பேச்சு, பேச்சுத்தானா?  மீதியை நாளைக்கு வச்சுண்டு இப்போ தூங்குங்கோ சொல்றேன்!”  என்று வேடிக்கையாய் அதட்ட,  “ஏண்ணா. பொறாமையாயிருக்கா?”  என்று லலிதா உல்லாசமாய்ப் பதிலளிப்பாள்.

இங்கு வந்தபின் அவளிடம் ஏற்பட்டிருந்த உல்லாசம் இதற்கு முந்தைய அவளது சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்த்தியது.

வாரத்துக்கு ஒருமுறை கணவனுக்குக் கடிதம் எழுதிய அவள் விரல்களில் வாரத்துக்கு வாரம் செழுமை கூடி வருவதாய்த் தோன்றியதில் ஸ்ரீதருக்கும் காவேரிக்கும் இதழோரங்கள் மலர்ந்தன.

“ஸ்ரீதர்!”

“ம்?”

“அப்பா லெட்டர் போட்டிருக்கார்.”

“என்ன விஷயம்?  ஊரில் எல்லாரும் செளக்கியந்தானே?”

“அதான் இல்லே. அம்மா கொஞ்ச நாளாய் வயித்தில ஏதோ வலின்னு சொல்லிண்டிருந்தாளில்லையா? திடீர்னு ஜாஸ்தியாப் போய் டாக்டர்கிட்டே அழைச்சுண்டு போனாராம் அப்பா. டாக்டர் பார்த்துட்டுக் குடல்ல இருக்கிற ஏதோ கோளாறுக்காக ஆபரேஷன் செய்யணும்னாராம். மேஜர் ஆபரேஷன்.”

சொல்லும்போதே கண்கள் கலங்கின.  

“பயப்படாதே காவேரி. கடவுள் அருளால் எல்லாம் சரியாப்போகும். ஊருக்குப் போய் அம்மாவைப் பார்க்கணுமா உனக்கு?”

“ஆபரேஷன்போது போனாப் போதும். அது அடுத்த மாசம்தான். அப்பா இப்போ எழுதியிருக்கறது...”

“சொல்லு.”

“கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் ஆகுமாம் ஆபரேஷனுக்கு. அவர் எப்படியோ ஆறாயிரம் வரை புரட்டிட்டாராம். நீங்க... நீங்க ஒரு நாலாயிரம் கடனாத் தந்தா உபகாரமாயிருக்கும்னு கேட்டு எழுதியிருக்கார்.”

ஸ்ரீதர் மௌனமாய் நின்றான். அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “நாம ரெண்டு பேரும் சம்பாதிக்கறோமில்லையா? அதனால முடியும்னு நினைச்சுக் கேக்கறார்...”

“அதுக்கில்லே. தன் பிள்ளையாயிருந்தால் கடனாக் கேப்பாரா? ‘உங்கம்மாவுக்காகக் கொடுடா’ன்னு உரிமையோட கேக்க மாட்டார்?  என்னை அன்னியனாய்த்தானே நினைச்சுட்டார் கடைசில!”

காவேரியின் தகப்பனார் சங்கரன் வந்திருந்தார். சென்னையில் இருந்த சில சில்லறை அலுவல்களை முடித்துக்கொண்டு, மாப்பிள்ளையிடமிருந்து பணமும் வாங்கிச் செல்ல உத்தேசம்.

இந்த வீட்டில் லலிதாவைப் பார்த்தபோது, முதலில் அவருக்குத் திக்கென்றது. ஸ்ரீதரின் தங்கையும் இந்தச் சமயம் வந்திருக்கிறாளா? தன்னை இங்கே பார்த்தால் அதுவும் தான் வந்துள்ள நோக்கத்தை அறிந்தால் என்ன நினைப்பாள்? அண்ணா தன் சம்பாத்தியத்தையெல்லாம் வேட்டகத்துக்கு அள்ளி விட்டு விடுகிறான் என்றா? மன்னி அவனை அதற்குத் தூண்டுகிறாள் என்றா?

ஆனால் சீக்கிரமே அந்தப் பெண் கபடமற்றவள் என்று புரிந்தது. அவள் வந்திருந்த காரணத்தைக் காவேரி சொன்னபோது, அந்தத் தாய் தந்தையற்ற பெண்ணை இத்தனை பரிவாக அரவணைக்கும் தம் மகளை எண்ணிப் பெருமையாகவும் இருந்தது.

இதையும் படியுங்கள்:
நல்ல வருமானம் தரும் ஸ்ட்ராபெர்ரி விவசாயம்!
aras drawing

ப்போது நான்கு நாட்களாய்ப் பகலிலும் அரட்டையடிக்க லலிதாவுக்கு ஆள் கிடைத்துவிட்டது.

“சும்மா கண்ணைக் கவிச்சுப் படிச்சுண்டே இருக்கியேம்மா! கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கு,”  என்று சங்கரன் ஒரு பிற்பகலில் லலிதாவிடம் கூறினார், அவள் வெகு நேரம் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு.

“தூக்கம் வரலே மாமா. அதுவும் தவிர, நான் இங்கே இருக்கறபோது படிச்சாத்தான் உண்டு. ஊரில் எனக்கு இதுக்கெல்லாம் நேரமேது!” லலிதா புத்தகத்தை அடையாளமிட்டு மூடி மேஜை மீது வைத்தாள். “உக்காருங்களேன் மாமா... எத்தனை அருமையான புஸ்தகம்! நீங்க ஆழ்ந்த விஷயங்களிலெல்லாம் ஈடுபாடு உள்ளவராச்சே,  ஒருவேளை இதை
ஏற்கெனவே படிச்சிருக்கலாம்.”

சங்கரன் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். 'கௌதம புத்தர் வாழ்க்கையும் தத்துவமும்.' ஆசிரியர் பெயரையும் பார்த்தார். "படிச்சிருக்கேன். ரொம்ப நல்ல புஸ்தகம்தான். நீ இவ்வளவு சீரியஸ் எழுத்தெல்லாம் கூடப் படிப்பியா என்ன?”

“படிக்கப் பிடிக்கும். அண்ணா இந்தத் தடவை லைப்ரெரியிலேர்ந்து கொண்டு வந்த புஸ்தகங்கள்ல இதுவும் ஒண்ணு. எனக்கு ஒரு சந்தேகம் மாமா.” “என்னம்மா?”

“புத்தர் கொள்கைகள் சிறப்பாயிருக்கு. கான்வென்ட்டில் படிச்சதால கிறித்துவக் கொள்கைகள் எனக்கு ஓரளவு தெரியும். நம் இந்து மதத் தத்துவத்தைப் பத்தியும் கொஞ்சம் படிச்சிருக்கேன். இதில் தனி மனித முக்தியைத்தான் வலியுறுத்திச் சொல்லியிருக்கே தவிர, அந்த மதங்களிலெல்லாம் சொல்லியிருக்கிற அளவு பரோபகாரத்தைச் சொல்லலே, இல்லையா?"

சங்கரன் லேசாய்ச் சிரித்தார். “மேலோட்டமாய்ப் பார்க்கறபோது அப்படித்தான் தோணும். ஆனா அது முழு உண்மையில்லை என்கிறது இந்து தர்மத்தில் விதிச்சிருக்கிற நாலு ஆசிரமங்களைக் கவனிச்சுப் பார்த்தா தெரியும்.”

“அந்த ஆசிரமங்கள் கூட மனுஷனுடைய சொந்த மேன்மைக்காகத்தான் இருக்கு? அதில் பரோபகாரம் எங்கே வந்தது?”

“மூணு ஆசிரமங்கள்ல நீ சொல்றது சரிதான் லலிதா. பிரமசரியத்தில் மனுஷன் கல்வி மூலமாய் வாழ்க்கையில் நுழையறான். வானப்ரஸ்தத்தில் வாழ்க்கையிலேர்ந்து ஒதுங்கறான். சன்னியாசத்தில் தன் முக்தியை நாடிப் போறான். ஆனா, கிருகஸ்தாசிரமம் என்கிற இல்லற நிலையில், நிச்சயம் வாழ்க்கையோடு கலந்துதானே இருக்கான்? மனுஷன் பிறருக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் அந்த ஆசிரமத்தில் சொல்லியிருக்கே! மற்ற மனிதர்களுக்கு மட்டுமில்லே, பிராணி வகைகளுக்கு முதற்கொண்டு அன்பு காட்டணும்னு சொல்லியிருக்கு. எறும்புக்குக் கூட உணவளிக்கக் கோலம் போடணும்னு சொல்ற அளவுக்குப் பரோபகாரத்தை வலியுறுத்தியில்லையா?'

லலிதா சிறிது நேரம் மௌனமாயிருந்து பிறகு சொன்னாள்: “ம்... நீங்க சொல்றதிலும் விஷயமிருக்கு.”

“பேசிண்டே இருந்துட்டேனேம்மா! நான் எழுந்து போறேன், நீ கொஞ்ச நாழி படுத்து ஓய்வெடுத்துக்கோ.”

“இங்கே நான் ஓய்வெடுக்கிறதைத் தவிர வேறென்ன மாமா செய்யறேன்? காவேரி என்னைச் சமையலறைக்குள் நுழையக் கூட விடறதில்லை!” என்று லலிதா சிரித்தாள்.

“நியாயந்தானே! நீ ரெஸ்டுக்குன்னு வந்துட்டு அப்புறம் இங்கேயும் வேலை செஞ்சால் என்ன அர்த்தம்?”

லலிதாவின் கண்கள் யோசனையுற்றன.

“வேலைங்கறது எவ்வளவு செய்யறோம்கிறது முக்கியமில்லை மாமா,  எந்த மனநிலையில் செய்யறோம்னுதான் பார்க்கணும்னு எனக்குத் தோண்றது. பிரியமில்லாத மாமியார் வேலை வாங்கறபோது, அது தண்டனை. அன்பு நிறைஞ்ச சூழ்நிலையில் வேலை செஞ்சா அது பகிர்தல்.”

சங்கரன் எழுந்து சென்றபிறகு லலிதா படுக்கையில் சாய்ந்துகொண்டே எண்ணமிட்டாள். அன்பு நிறைந்த சூழ்நிலைதான். என்ன சந்தேகம்? சங்கரன் ஊரிலிருந்து வருவதற்கு முன் அவள் காவேரியிடம். “உங்கப்பா வந்தால் இங்கேதான் தங்குவார் இல்லையா காவேரி?  நானும் இருந்தா நெருக்கடியாயிருக்குமே? நான் வேணும்னா இப்பவே ஊருக்குக் கிளம்பிப் போயிடட்டுமா? என் உடம்பும் நன்னாத் தேறிடித்து”  என்றபோது காவேரி சொன்ன பதிலை மறக்க முடியுமா?

“ரொம்ப அழகுதான் லலி! எங்கப்பா வந்தால் அதுக்காக நீ ஏன் போகணும்? இங்கே எல்லாருக்கும் இடமிருக்கு. கவலைப்படாதே. நீ இங்கே ரெஸ்டுக்கு வந்திருக்கே. குறைஞ்சது மூணு மாசமாவது ஆகறதுக்கு முந்தி ஊருக்குப் போறதைப் பத்திப் பேசக் கூடாது, ஆமாம்.”

aras drawing
aras drawing

ந்தாம் நாள் காலை மாமனாரிடம் அவன் பணத்தை ரொக்கமாய்க் கொடுத்தான். உதடு துடித்துக் கண்கலங்க, பேசத் தெரியாமல் அவன் முகத்தைப் பார்த்தவாறே அவர் நடுங்கும் கைகளால் வாங்கிக்கொண்டார்.

“ஆபரேஷனுக்கு முந்தி காவேரி அங்கே வருவா மாமா. இன்னும் ஏதானும் நான் செய்யக்கூடிய உதவி இருந்தாலும் தயங்காம கேளுங்கோ. ஆபரேஷனை மெட்ராஸ்ல இன்னும் பெரிய டாக்டர் யாராவது பண்ணால் நல்லதுன்னு தோணினால் மாமியை இங்கே அழைச்சுண்டு வந்துடுங்கோ. யோசனையே வேணாம்.”

“ஸ்ரீதர்... ஸ்ரீதர்... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலேப்பா...”

“எதுவும் சொல்ல வேணாம். தைரியமாயிருங்கோ. சாயங்காலம் நான் வந்து ஸ்டேஷனுக்கு அழைச்சுண்டு போறேன்.”

 “நானும் ஆபீசுக்குக் கிளம்பறேம்ப்பா. நீ குளிச்சதும் அப்பாவும் நீயுமாய்ச் சாப்ட்டுடுங்கோ.”

வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் மகளையும் மருமகனையும் உமிழ்நீரை விழுங்கியபடி பார்த்துக்கொண்டு நின்றார் சங்கரன். லலிதாவுடன் இந்து மதத்தில் பரோபகாரம் பற்றிப் பேசியிருந்தது நினைவில் எழுந்தது.

உலகத் தொண்டு முழுமையும் ஏற்றுச் செய்வது அனைவருக்கும் சாத்தியமில்லைதான். ஆனால் இல்லறத்தில் இணையும் இருவர், அந்த ஆசிரமத்துக்கு விதித்துள்ள நியதிப்படி, தம் குறுகலைச் சற்றே விரிவு படுத்தினால்,  குறைந்தபட்சம்,  இந்த வீட்டிலுள்ளதுபோல், கணவனின் மனிதர்களை மனைவியும், மனைவியின் மனிதர்களைக் கணவனும் தன் மனிதர்களாய் நினைத்துச் செயல்பட்டால் - குடும்பம் என்னும் இவ்வமைப்பு உலகளாவிய பரோபகாரத்தின் ஒரு சிறு வித்தாய், அறிகுறியாய், விளங்க முடியாதா...?

மனம் நிறைந்து பொங்கியது.

பின்குறிப்பு:-

கல்கி 21 ஏப்ரல் 1991 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com