இரண்டு மாதங்கள் விடுமுறைக்கு பிறகு மேனேஜர் மூர்த்தி அன்றுதான் மறுபடியும் வங்கியில் சேர்ந்திருந்தார். முதல் மாடியில் அவர் கேபினில் அமர்ந்துக் கொண்டு, மெயில்களை பார்த்துக் கொண்டு இருந்தார்.
இன்டெர்காம் பெல் அடித்தது. வங்கியின் உதவி மேனேஜர் லைனில்.
சார், நம்ப கிளையின் கஸ்டமர் பத்மநாபன் வருகிறார். அவரது மனைவி ஒரு மாதம் முன்பு காலமாகிவிட்டாங்க. உங்களுக்கு விவரம் தெரியாது. எனவே கூறினேன். பார்த்துக் கொள்ளுங்கள், என்று கூறி இன்டெர்காம் போனை வைத்தார் சுரேஷ்.
நல்லவேளை கூறினார். எப்பொழுதும் பத்மநாபன் அவரது சகதர்மினி புஷ்பாவுடன்தான் எங்கும் செல்வார். வங்கி கிளைக்கும் விஜயம் செய்வார்.
வந்ததும், மேனேஜர் கேபினுக்கு வராமல், கவுண்டருக்கு சென்று தங்களுடைய வங்கி சேவைகளை பொறுமையாக இருந்து முடித்துக் கொண்டு செல்வார்கள்.
கிளையை விட்டு செல்லும் முன்பு இருவரும், மூர்த்தி கேபினுக்கு வந்து நலம் விசாரிப்பார்கள்.
அவர்களிடம் பல முறை கூறிவிட்டார் மூர்த்தி, நேரே இங்கே வந்து அமர்ந்துக் கொள்ளுங்கள். நான் உங்களுடைய எல்லா வங்கி சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்து தருகிறேன் என்று. அதற்கு பத்மநாபன் மறுப்பு தெரிவிப்பதுடன், என்னால் யாருக்கும் தொந்தரவு கூடாது என்பார். நீங்கள் உங்கள் வேலையில் பிசியாக இருக்கும் பொழுது, நான் என் வேலைக்காக உங்களை தொந்தரவு செய்வதும் சரி இல்லை என்பார்.
மேலும் உங்கள் கிளை ஊழியர்கள் எல்லோரும் நன்றாக வேலை செய்கிறார்கள், என்று புகழ்ந்து விட்டு செல்வார். இருவரும் காபி, டீ கூட குடிக்க மாட்டார்கள்.
அவரைப் பற்றி மூர்த்தி எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது, அவரது கேபின் உள்ளே நுழைந்தார், பத்மநாபன்.
அவரை தனியாகக் காண மூர்த்திக்கு என்னவோ போல் இருந்தது.
எழுந்து நின்று அவரை வரவேற்று அமர செய்தார்.
மூர்த்திக்கு என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை.
அவரே பேச ஆரம்பித்தார். "இன்றுதான் ரீ ஜாயின் செய்தீர்களா..!" என்றார். பிறகு மூர்த்தியின் குடும்பம் பற்றி விசாரித்தார்.
அவரே கூறினார், அவரது மனைவியின் மறைவு பற்றி. மூர்த்தி மிகுந்த வருத்தம் தெரிவித்தான்.
அவர்கள் இருவரும் ஜாயிண்ட் கணக்குகள் வைத்து இருந்ததால், அதை குறித்து ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்க எண்ணி வாயை திறக்கும் முன்பு, அவரே கூறினார், " நான் வங்கி கணக்குகள் சம்பந்தமாக வரவில்லை. உங்களிடம் மனம் திறந்து பேச வந்துள்ளேன்," என்றார்.
பேசலாமா என்று அனுமதி கேட்டு விட்டு கூறினார். "நான் கடந்த 27 வருடங்களுக்கு மேலாக பென்ஷன் வாங்குகிறேன். இப்பொழுது 87 வயதாகிவிட்டது. அவள் சுமங்கலியாக போய்விட்டாள், என்னை தனியாக விட்டு விட்டு..!"
"எல்லாம் அவள்தான் பார்த்துக் கொண்டாள். கொடுமையிலும் கொடுமை முதுமையில் பிறருக்கு பாரமாக இருப்பது..!" என்று கூறியவர் திடீரென்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மூர்த்திக்கு தூக்கி வாரிப்போட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை.
கண்ணாடி மூலம் பார்த்த ஊழியர்களுக்கு அவர் ஏன் அழுகிறார் என்று புரியவில்லை. திடுக்கிட்டனர். பதட்டப்
பட்டனர். மூர்த்தி சைகை மூலம் அவர்களுக்கு கூறிவிட்டு, இவரைப் பார்த்தான்.
சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட பத்மநாபன், "ஸாரி.. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் போனதும் வாழ்க்கையே சூன்யமாகப் போய்விட்டது. கடவுள் ஏன்தான் இவ்வளவு வயதிற்கு பிறகு மனிதர்களை வாழ வைக்கின்றார். நான் முடிவு செய்து விட்டேன் ஓல்ட் ஏஜ் ஹோமில் சேர்ந்து விடுவது என்று"என்றார்.
"உங்கள் சன், மருமகள், பேரன் எல்லோரும் இருக்கிறார்களே " என்றார் மூர்த்தி.
"நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. எங்கள் காலம் வேறு. தற்பொழுதிய அத்தியாவசிய சூழ்நிலை வேறு. எதிர்பார்ப்புக்கள் வேறுபடுகின்றன. ஒவ்வொருவரின் தேவைகள் மாறுபடுகின்றன. எண்ணங்கள் வேறு. தலை முறை இடைவெளி தனது இயல்பை வெளிப்படுத்தும். தவிர்க்க முடியாது."
"நான் வாழ்க்கையின் முடிவில் இருக்கிறேன். ஓடி முடிந்து விட்டது. அவர்கள் அடுத்த தலை முறையினர். இன்னும் அதிக தூரம் வாழ்க்கையில் பயணிக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டியது அவசியம். மேலும் செலவுகள் அதிகரித்து வருகின்றன. விலை வாசி ஏற்றம் எப்பொழுதும் பயப்பட வைக்கின்றது. பேரனுக்கு பள்ளிக்கூடம், டியூஷன், விளையாட்டு என்று போக வேண்டியிருப்பதால், தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு..!"
"என் தேவைகளை கவனிக்க வேண்டியிருப்பதால், அவர்களது நேரத்தை தியாகம் செய்ய வேண்டும். இருவருக்கும் வேலையின் அழுத்தம் காரணமாக இருவரும் அவதிபடுகின்றனர். எனவே சிந்தித்து எடுத்த முடிவை அவர்களிடம் கூறிவிட்டேன்..!"
"அவர்கள் மூவரும் சம்மதிக்கவேயில்லை. குறிப்பாக என் டாட்டர் இன் லா ஒப்புக்கொள்ளவேயில்லை. தற்பொழுதிய யதார்த்த வாழ்க்கை முறையை எடுத்துக்கூறி ஒரு மாதிரி கன்வின்ஸ் செய்து சம்மதிக்க வைத்து விட்டேன்..!"
"இவ்வளவு நேரம், பொறுமையாக என்னைப் பற்றி கேட்ட உங்களுக்கு மிகவும் நன்றி, என்று கூறினார். விடை பெறும் முன் உங்கள் ஊழியர்கள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கடவுள் ஆசி எப்பொழுதும் இருக்கும்" என்று கூறி வணக்கம் செய்து விட்டு சென்றார்.
அந்த ஆதர்ஷ மனிதர் சென்ற திக்கை பார்த்துக் கொண்டு அவரது முடிவை பற்றி திங் செய்து கொண்டு இருந்த மூர்த்தியை, அவனது செல்போன் ரிங் சகஜ நிலைக்கு கொண்டு வந்தது.