சிறுகதை - அப்பர் பெர்த் சித்தப்பா!

Upper Perth Sithappa...
Upper Perth Sithappa...

"சித்தப்பா! சித்தப்பா!"

"ஏண்டா, இப்படிக் கத்தறே! நான் என்ன செவிடா...?"

"எழுந்திருங்கோ எழுந்திருங்கோ, சித்தப்பா! நம்ப கம்பார்ட்மெண்ட் அதோ கடைசியிலே இருக்கு."

"டேய் மணி! சாமான்களை எண்ணிச் சரி பாருடா..."

"நாலு படுக்கை. நாலு பெட்டி. இரண்டு கூடை, இரண்டு பை, கூஜா."

"சித்தப்பா...! இதுதான் நம்ப இடம். எட்டு சீட்டுக்களும் இரண்டு பெர்த்துக்களும் நமக்குத்தான்... நீங்க செளகரியமா இப்படிக் கீழே இரண்டு பெஞ்சுக்களுக்கு நடுவிலே படுத்துக்குங்கோ! நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்கிறோம். வேறே யாரும் இங்கே வர மாட்டா."

"ஏண்டா! ராத்திரி முழுதும் கீழேயாடா முடங்கச் சொல்றே?"

"சித்தப்பா! இந்த இரண்டு பெஞ்சுகளிலும் நாங்கள் 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கணுமே. அதனாலேதான் பெஞ்சிலே படுக்க வேண்டாம்னு..."

"நான் மேல் பெர்த்திலே ஏறிப் படுத்துடறேண்டா! சௌகரியமாக இருக்கும்போல் இருக்கே?"

"சரியாய்ப்போச்சு: சித்தப்பாவுக்குத் தன் வயசு இருபதுன்னு எண்ணம் போலிருக்கு. எழுபதைத் தாண்டி எத்தனையோ நாளாச்சு.''

"சித்தப்பா! அந்த வம்பெல்லாம் வேண்டாம். காலைக் கழுத்தைச் சுளுக்கிக்கும். உங்களாலே ஏறவும் முடியாது. இறங்கவும் முடியாது.  கும்பகோணத்துக்கு வண்டி போறபோது காலம்பற முணு மணி.  நல்ல தூக்கத்திலே இருப்பீங்க."

"மாயவரத்திலேயே இறங்கிட்டாப் போச்சு. அந்த வெற்றிலைப் பையை எடுடா! வண்டி புறப்படறதுக்குள்ளே ஒரு தடவை போட்டுத் துப்பிட்டு மேலே போயிடறேன்."

"ஹூம்! அதுவும் நல்லதுதான்! ஏழுதடவை வெற்றிலை போடறேன்னு எழுந்து உட்கார்ந்து தொணதொணக்க மாட்டார்."

"உஷ்! பாலு சும்மா இருக்கமாட்டே? சித்தப்பா...! சாம்பார் சாதம், தயிர் சாதம் பொட்டலம் இருக்கு. ஒருவழியாச் சாப்பிட்டுட்டு மேல் பெர்த்துக்குப் போங்களேன்."

இதையும் படியுங்கள்:
திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே இப்படி என்பது தெரியுமா..!
Upper Perth Sithappa...

"ஒண்ணும் வேண்டாம்! ரயிலுக்குக் கிளம்பறதுக்கு முன்னாலேயே நான் சாப்பாட்டை முடிச்சுண்டுட்டேன். இனிமே காலை ஐந்தரை மணிக்குக் காப்பியைக் காண்பிச்சாப் போதும்.''

"மணி! சாமான்களையெல்லாம் தள்ளி வைடா! பதிமூணு சாமான்; பத்து நபர்கள். அத்தை! நீங்க அந்த ஓரத்துக்குப் போயிடுங்கோ...! மெதுவா! மெதுவா...! டேய் கோபு! பாலு! சித்தப்பாவைப் பிடிச்சுக்குங்கடா!...தலையைக் கீழே குனிஞ்சுக்குங்கோ சித்தப்பா... அப்பாடா! பக்கத்துக் கம்பியைப் பிடிச்சுக்குங்கோ!... இறங்கறபோது ஜாக்கிரதையா இறங்கணும்!"

"ஏண்டா, தாம்பரமா?"

''ஆமாம், சித்தப்பா!"

"ஒரு கப் காப்பி வாங்கேன். பசிக்கிறாப்போலே இருக்கு."

"கம்பார்ட்மெண்ட் பிளாட்பாரம் கோடியிலே நிற்கிறது. ஸ்டாலுக்குப் போய் வாங்கி வருகிறவரை வண்டி நிற்காது. அதனாலே செங்கல்பட்டிலே காப்பி வாங்கித் தந்துவிடுகிறேன்."

"மணி, செங்கல்பட்டு வந்துடுத்து! காப்பியோடு பூரி கிழங்கும் இருந்தால் வாங்கிண்டு வா! பசிக்கிறாற் போலிருக்கிறது."

"இரண்டு செட்டா வாங்கிண்டு வந்துடறேன். பாதி ராத்திரியிலே விழுப்புரத்திலே பூரி கீரி கிடைக்குமோ, என்னவோ? சித்தப்பாவுக்குத் திடீர்னு பசித்தால்......"

"பேசாமல் இருக்கமாட்டே? வயசானவா அப்படித்தான் இருப்பா! சீக்கிரம் போ!"

"என்னடா இது! படுக்கைகளை எல்லாம் அவுத்துப் போட்டுட்டீங்களே. அப்படியே வைச்சுச் சாய்ந்துகொள்ளக் கூடாது. பதிமூணு சாமான்! பத்துப் பேர். மொத்தம் இருபத்தி மூணு அயிட்டம். கும்பகோணத்திலே இறங்கறபோது எல்லாம் செக் பண்ணிட்டு மடமடன்னு இறங்கணும். முதலாவது தூக்கக் கலக்கவேளை! இரண்டாவது வண்டி நாலு நிமிஷங்கள்தான் நிற்கும்.

"டேய்...! வண்டி நிற்கிறதே...! விழுப்புரமாடா?"

"ஆமாம், சித்தப்பா! நீங்க தூங்கலியா?"

"கொஞ்சம் கண்ணை அசந்தேன்! வெற்றிலை போட்டுத் துப்பினால் தேவலை."

"கீழே இறங்கி வந்துடறேனா? கோபு! சித்தப்பா இறங்கி வந்தால் நீ ஒரு பத்து நிமிஷம் பெர்த்திலே காலை நீட்டிப் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ!"

"வேண்டாண்டா...! புகையிலைப் பொட்டலத்தை எங்கேயோ வைச்சுட்டேன்! சூடாப் பால் வந்தா வாங்கு...!"

"டேய் மணி!"

"கோபு!"

"என்னடா, எல்லாரும் ஓரே கும்பகர்ணனா தூங்கிட்டீங்க? வண்டி ஆடுதுறை ஸ்டேஷன் தாண்டிடுத்துடா...! எழுத்திருங்கடா!"

இதையும் படியுங்கள்:
அணிவதற்கு சுகமான மொடால் ரக ஆடைகள் பற்றித் தெரியுமா?
Upper Perth Sithappa...

"ஐயையோ! மாயவரம் ஜங்க்ஷன் வந்தது போனதுகூடத் தெரியலேடா!"

"மொத்தம் இருபத்தி மூணு. இருபத்தி மூனு! சாமான்களையெல்லாம் இப்படி ஓரமாய் இழுத்து வையுங்கோ?...."

"திருவிடைமருதூர் ஸ்டேஷனும் போயாச்சு!"

"இருபத்து மூணு. இருபத்தி மூணு! இறங்கினதும் 'செக்' பண்ணணும்"

"அத்தை! இறங்கு...! மணி இந்தப் பெட்டியைப் பிடிடா!"

"அப்பாடா!... இருபத்தி மூணு! கரெக்ட்! கார்ட் சார்! டாட்டா!"

"சம்பந்தி ஆத்துப்பேரெல்லாம் தயாரா வந்திருக்கா."

"சித்தப்பா! சித்தப்பா! அவரைத்தாண்டா பெரிய மனிதரா லட்சணமா அறிமுகப்படுத்தி வைக்கணும் முதலில்."

"சித்தப்பா...! பெஞ்சிலிலே போய் உட்கார்ந்துட்டாரா...?

"ஐயையோ! சித்தப்பா வண்டியிலிருந்தே இறங்கலே...! அப்பர்பெர்த்திலேயே இருக்கிறார்..."  

"அட ராமச்சந்திரா!... 'நான் அப்பவே சொன்னேன்! இருபத்தி மூணு இருபத்தி முணுன்னு முட்டிண்டேனே! "

"இருபத்து மூணு நான் எண்ணினேனே?"

"பாவிப் பயல் கோபு படுக்கையைப் பிரிச்சு ஐந்தாகக் கட்டிட்டான்! அதுதான் கோளாறு!"

"ஒரு டாக்ஸி பிடிச்சிண்டு தஞ்சாவூருக்கு ஓடுங்கடா! அதுதான் நெக்ஸ்ட் ஸ்டாப்!... கோபு, நடராஜா! நீங்களும் போங்கோ. பத்திரமா இறக்கணும், கீழே! தஞ்சாவூரை விட்டா அப்புறம் திருச்சி."

"என்ன மனுஷன்! கும்பகோணத்திலும் முழிச்சுண்டு ஒரு பூரி கிழங்கு கேட்டிருக்கக் கூடாதோ? இறக்கியிருப்போமே!"

பின்குறிப்பு:-

கல்கி 14  ஜுன்  1970 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com