சிறுகதை - வைகையாத்தா!

Short story in tamil.
ஓவியம்; மருது...
Published on

-இந்திரா செளந்தர்ராஜன்

வைகையாத்தாளுக்கு இப்படி ஒரு கோபம் வரும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அவளிடம்தான் என்ன ஒரு சீற்றம்? செத்த பாம்பாய்க் கிடந்த அந்த ஆறு, எங்களால் சாக்கடையாகிப் பற்பல வருஷமாகிவிட்டது. வேலிக்காத்தானும் கோரைப் புற்களும் போட்டி போட்டு முளை விட்டெழ,  நாயும் பன்றியும் சளம்பித்திரியும் நாற்றக்காடாய் ஆகிவிட்ட அதை அவ்வப்போது மழை வந்து சுத்தம் செய்துவிட்டுப் போகும்.

அப்பொழுது மட்டும் மஞ்சளாய் நீர் ஓடப் பார்ப்போம். அப்புறம் வழக்கம்போல் கறுப்பு ஆறாய்க் கால் பரப்பி ஓடும். அதைப் பார்த்து எப்போதாவது என் பாட்டி புலம்பியழக் கேட்டிருக்கிறேன்.

வைகைக் கரையை ஒட்டி, தாழ்வான நிலப்பரப்பில்தான் எங்கள் வீடு. சரிந்த கூரையுடன் கூடிய ஓட்டு வீடு. வாசலில், நின்று பார்த்தால் எதிரே தத்தனேரியில் பிணங்கள் எரிவதிலிருந்து ஆற்றில் வண்ணான் துணி பிழிவது வரை பார்க்கலாம்.

அழுக்குத் தண்ணீரில் அழுக்கை வெளுப்பது எந்த வகை சாமர்த்தியம் என்பது எனக்கு இன்று வரை புரியாத புதிர்.

என் சினேகிதன் வெங்கடசுப்பிரமணியின் வீடு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில்தான் இருக்கிறது. சேலம்னா மாம்பழம். மணப்பாறைன்னா முறுக்கு. அதுபோல ஜெ.ஹி.புரம், சாக்கடைக்குப் பிரசித்தமான குடியிருப்புப் பகுதி. அங்கே ஒரு சாக்கடையும் ஒழுங்காகவே ஓடாது. என் மகள் அதைப் பார்த்துவிட்டு இது என்ன என்று கேட்க, சாக்கடை என்று அறிமுகப்படுத்தின நான், வைகையைக் காட்டி இது என்ன என்று கேட்டபோது, பெரிய சாக்கடை என்றிருக்கிறேன்.

அப்புறம் அவளாகவே வயது முதிர, வைகை பற்றி அறிந்து, "அப்பா ஏனப்பா வைகையாத்தாவை சாக்கடைன்னே ...?" என்று ஒருநாள் திருப்பிக் கேட்டாள்.

"ஆறுன்னா அழகு தாயி. எங்க இருக்கு, அழகு நம்ம வைகைல? ஊர்ப் பயலுகளோட கக்கூசைப் போயி வேற என்னான்னு நான் சொல்றதாம்?" - என்று திருப்பிக் கேட்டேன்.

அவள் பதில் பேசவில்லை. பேச முடியவில்லை. ஆனால் அடிக்கடி ஆற்றைப் பார்த்து ஏங்கி நிற்கக் கண்டிருக்கிறேன்.

இப்படியான ஒரு பெரிய சாக்கடை, திரும்ப ஆறாக உருமாறி, அசுர வேகம் காட்டி ஓடிவரும் என்று நான் நினைத்தேனில்லை.

பலமாக மழை பெய்தால், கல் பாலத்தின் மதகு வழியாகக் கொஞ்சம் சீற்றப் பாய்ச்சலோடு அது எப்போதாவது ஓடும். அதையே உலக அதிசயமாக எண்ணி, மதுரை ஜனம் வேடிக்கை பார்க்கும். தினசரிப் பேப்பர் எல்லாம் கூட போட்டோ எடுத்துப் போகும்.

எல்லாம் அற்பத்துக்கு வாழ்வு வந்த சமாசாரம் என்று நான் சிரித்த விஷயம்.

ஆனால் இன்று அப்படியில்லை...

வைகையாத்தாளின் சீற்றத்தில் அநியாயக் கடூரம்.

ஆற்றை அசிங்கப்படுத்தின பாவிகளை உண்டு, இல்லை என்று பார்க்க அவள் துணிந்துவிட்டதுபோல் ஓர் உணர்வு என்னுள்...

அர்த்தராத்திரியில் அலைக்கரம் கொண்டு கதவைத் தட்டி, அவள் எங்களை எழுப்பியபோது எனக்கு உயிரே போய்விட்டது. கூரை மேல் ஏறி எல்லோரும் தப்பிக்கப் பட்டபாடு! சட்டென்று, சுத்தமாக மின்சாரம் வேறு அவுட்! 'நம்ம விலாசினியைக் காணோங்க' என்கிற குரல் என்னைச் சொரேலென்று தாக்கியது.

''என்னது? என் விலாசினியைக் காணோமா? கண்ணு விலாசம்..." கதறி விட்டேன்.

"தூங்கிட்டிருக்கறவளை நீ கூரை மேல ஏத்தலையா?''

''நீங்க ஏத்திட்டதால்ல நினைச்சேன். இருட்டில யார் யாரைப் பார்க்க முடியுது? ஆத்தா விலாசம்..." என் மனைவி கூரை மேல் நின்று கேவ, மின்னல் ஒன்று, வினாடி அவகாசத்துக்கு ஊருக்கே குழல்விளக்கு போட்ட தினுசில், மரக்கிளைகள்போல் ஒரு பார்டர் போட்டு வெட்டியதில் அக்கம் பக்கத்துக் கூரை மேலெல்லாம் எங்களைப் போல் ஜீவன்கள்.

இதையும் படியுங்கள்:
நீங்க அழகா இருக்கோணும்னா...!
Short story in tamil.

அற்பப் பூச்சியாய் உயிரைக் கையில் பிடித்தபடி உட்கார்ந்திருக்கிறோம்...

பக்கத்து வீட்டு வடிவேலுவும் என்னைப் போலத்தான் கத்திக்கொண்டிருந்தான்.

"அர்த்தநாரி! என் மகளைக் காணலப்பா. அய்யோ நான் என்ன பண்ணுவேன்..?" என்கிறான்.

சப்தம் தேய்ந்து காதில் மோத, என் மனைவி ஆவேசிக்கிறாள். "இறங்கிப் போய்ப் பாருங்க. எனக்குப் பயமா இருக்குங்க. நம்ப உசுர் நமக்கு பெரிசில்லீங்க" - பேச்சோடு பேச்சாக அவள் கூரையை விட்டு இறங்க முனைய, அந்தச் சமயமாய் விலாசினியின் குரல்!

"அப்பா நான் வீட்டு முருங்கை மரத்து மேல இருக்கேன். என் கூடவே பக்கத்து வீட்டு அம்சவேணியும் இருக்குது. வெள்ளம் தள்ளிக்கிட்டு வந்ததுல மரத்தைப் பிடிச்சு ஏறிட்டோம்...''

அந்தக் குரல் எனக்குள் ஜீவசுருதியையே பிடித்து ஒரு மீட்டு மீட்டினாற் போல் ஒரு பிரமை.

''ஆத்தா! பதறாம அங்கேயே இரு. நா வந்து மீட்டுக்கறேன்" - என்கிறேன்.

குளிர் வெடவெடக்கிறது. மழைச்சாரல் வேறு... வாழ்வின் நிலையாமை மிக நுட்பமாக எனக்குப் புரிகிறது. எங்கும் கூக்குரல். இதில் கதிரேசன் குரல் என்னை ஊடுருவும்போது எனக்குள் புதிய பரிமாணம்.

ந்தக் கதிரேசன் சரியான அராத்து பேர்வழி. ஆடு திருடியைத் தெரியும், கோழி திருடியைத் தெரியும். ஆனால் ஆற்றையே திருடியவன் இவன். லாரி லாரியாக மணலைக் கொள்ளையடித்தவன். அஞ்சு பத்தால் கார்ப்பரேஷன் கண்ணையே கட்டியவன்.

'என்னைத் திருடியவனே உன்னை விடுவேனா'  என்கிறாள் வைகையாத்தா. 'எந்த கார்ப்பரேஷன்காரன் வந்து காப்பாத்தறான் பார்க்கறேன்...'

ஏனோ எனக்குள் பயமில்லை இப்போது. பதற்றமில்லை இப்போது... ஒரு அர்த்தபூர்வ செயல் நடப்பதாக ஓர் உணர்வு எனக்குள்.

'இப்போதாவது உனக்கு ரோஷம் வந்ததே...' - வைகையை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

"பக்கத்து வீட்டு ஒச்சாயி போயிட்டாளாம். ஏங்க, நாம என்ன பாவங்க பண்ணோம்...?"

"என்ன புண்ணியம் பண்ணோமோ இன்னும் போகாம இருக்கோமோ...!"

"உங்க பேச்சே சரியில்லை. இது இப்படி எல்லாம் பேசற நேரமில்லீங்க...''

"வேற எப்படிப் பேச?''

"நாசமாப் போன ஆத்துக்கு ஏழை பாழை நாமதானா கிடைச்சோம்? ஆத்தோரமா வீடுன்னப்பவே எனக்கு பக்குன்னு இருந்திச்சு. இப்ப நினைச்சா மாதிரியே..."

'“ஏய், சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி பேசாதே. ஒரு நாளாவது இந்த ஆத்தை ஆறா நினைச்சிருப்பியா? மோளவும் கால் கழுவவும் தானடி இதை உபயோகிச்சீங்க. உங்க சாக்கடைக்கு இந்த ஆறுதானே வடிகால்?

சாக்கடை என்னா செஞ்சிப்பிடும்னு வீடு வாசல் கட்டி குடி வந்துட்டு, இப்போ புலம்பலா?"

''பாவி மனுஷா... நீயும்தானே மாட்டிக்கிட்டிருக்கே. இப்படியா எனக்கென்னன்னு பேசுவே... ''

"ஆமா நானும் மாட்டியிருக்கிறவன்தான். நானே போனாலும் சரி; ஆறு ஆறா ஓடினா போதும். தண்ணிக்குக் குழாயடியில போடுற சண்டைக்குக் கதிமோட்சம் வரணும். கொசுவும் பன்னியும் ஒழியணும். அதுக்கு ஆறு, ஆறா ஓடணும். ஆத்தைத் திருடறவன், அழகைக் கெடுக்கறவன் அம்புட்டு பயலும் அழியணும்.

நான் இப்போ ஆத்தா கோபத்தை ரசிக்கிறேன். இது தர்மதேவதையோட கோபம். இயற்கைன்னா கொக்காடி உங்களுக்கு... ?

"சீறி வந்தா புலம்ப வேண்டியது. சிறுத்துக் கிடந்தா ஏறி மிதிக்க வேண்டியது. இப்படித்தானே இது நா வரை பொழைச்சிருக்கோம்.

"அதுக்குத் தண்டனை வேண்டாமா...? மறுபடி நாளைக்கு வத்தத்தான் போவுது. நாமும் பழைய சாக்கடையாக் கத்தான் போறோம். இந்த நிமிஷம் அனுபவிக்கணும். இந்த தண்டனை கொஞ்சமாவது மறக்காம இருக்கணும்டி!" - என் பேச்சை சகிக்காமல் என் மனைவி பதிலுக்குப் புலம்புகிறாள்

"வெள்ளத்தை விடக் கொடுமைய்யா உன் பேச்சு!" - என்கிறாள்.

நடுவில் விலாசத்தின் கூக்குரல்.

"அப்பா சீக்கிரம் வாங்க. மரக்கிளையைத் தட்டிடிச்சு வெள்ளம்."

"ஐயோ போங்களேன்..."

இதையும் படியுங்கள்:
கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!
Short story in tamil.

"இருடி போறேன்" - என்று சொல்லும்போது அம்சவேணி அலறுகிறாள். என் மகளைப்போல் நம்பிக்கைக் குரலாக இல்லாமல், உயிர் போய்விட்டவளைப் போலவே புலம்புகிறாள். எனக்குள் மிளகாய் வறுபடுவதுபோல் ஒரு காரல். பக்கத்து வீட்டுக்காரன் என் வரையில் அத்தனை நல்லவனில்லை. ஆனால் இப்போது அதெல்லாம் அனாவசியம். மனுஷத்தனம் வேண்டாமா? முதல் காரியமாக நான் முருங்கை மரத்தை நெருங்கி, பக்கத்து வீட்டுக்காரன் மகளைத்தான் தாங்கிச் சுமந்து வந்தேன்.

''யப்பா வடிவேலு... உன் மக என் வீட்டுக் கூரை மேல பத்ரமா இருக்கா. கவலைப்படாதே ..." - என்று உரக்கக் கத்துகிறேன்.

என் மனைவி பிளிறி வெடிக்கிறாள்.

ஆத்திரம் தாளாமல் அவளே கூரைச் சரிவில் இறங்கி, முருங்கை மரம் நோக்கிச் சரிய...

"வேண்டாம் தனம்... வேண்டாம்" - நான் கத்தியதற்குப் பலனே இல்லை. "ப்ளக்..." என்று நீர்க் குமிழ் சப்தம் பெரிதாகக் கேட்க, முருங்கை மரம் ஓடிவதுகூட காதில் விழுகிறது.

"ஐயோ தனம்..." - அலறுகிறேன். பதிலுக்குச் சப்தமே இல்லை. "ஐயோ இருவரையும் வெள்ளம் இழுத்துவிட்டதா?" இதுவரை இல்லாத பதற்றம்,கோபம் என்னுள் வெடிக்க, அழுகை முட்டுகிறது .

விடிந்து விட்டது!

வெள்ளத்தின் வீச்சல் நன்றாகத் தெரிகிறது.

கூரை மேல் நானும் வடிவேலுவின் மகள் அம்சவேணியும்! அரசாங்க எந்திரங்கள் முடுக்கி விடப்பட்டு ரப்பர் படகு, டியூப் வளையம், மூங்கில் மிதவை என்று சகலமும் வந்து எங்களை மீட்கின்றன. தனமும் விலாசினியும் என்ன ஆனார்களோ? நான் செயல்பட்ட மனிதத்துக்கு வைகையாத்தாள் ஏதாவது பரிகரிப்பாள் என்றும் ஒரு நம்பிக்கை.

ஜடஸ்வரூபி என்று அவளை சாக்கடை யாக்கினவர் கூட்டம் நோக்கிக் கோபம் கொண்டு வந்தவள் ஆயிற்றே? கோபம் இருக்கும் இடம் குணம் இருக்காதா என்ன?

அது இருப்பது நிரூபிக்கப்பட்ட மாதிரி நான் வந்து ஒடுங்கிய பள்ளிக்கூடத்தில் என் தனத்தையும் விலாசினியையும் உயிருடன் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட எண்ண நெகிழ்ச்சியை எப்படி விவரிப்பேன்? ஆனால் தனம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

"போக்கத்த மனுஷா... கதை பேசிக் காரியத்தைக் கெடுக்கப் பாத்தியே. ஆத்தோடு போகாம திரும்பிட்டோமேன்னு பாக்குரியா...?"

"இல்லை தனம். அப்படி நடக்காதுன்னு எனக்குத் தெரியும்!"

"என்னா தெரியும்... ஊரே மூழ்கிக்கிட்டு இருக்கச்சே உபன்யாசம் பண்ணுனியே.. மனுஷனா நீ? எப்படியோ யாராலையோ கரை சேர்ந்தோம். போ... போய் உன் ஆத்தா கோபத்தை உக்காந்து ரசி..." எனக்குள் தனத்தின் பேச்சால் சிரிப்பு.

"சிரிப்பு வேற வருதாக்கும்!"

மேலும் சிரிக்கிறேன்.

"உசுரு போயிருந்ததுன்னா தெரிஞ்சிருக்கும்!"

"அது எப்படி போயிடும்? ஆத்தாவை எனக்குத் தெரியாதா?"

என்னைப் பைத்தியம்போல் பார்ப்பது புரிந்தது. எனக்கென்ன கவலை?

வைகையின் சீற்றமும் சப்தமும் பிரும்மாண்டமாய் பொங்கிப் பிரவகித்தது.

எனக்குள்ளும் அதே பிரவாகம்.

யாருக்குப் புரியப் போகிறது?

பின்குறிப்பு:-

கல்கி 02 ஜனவரி  1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com