ஓவியம்; ஜெயராஜ்
ஓவியம்; ஜெயராஜ்

சிறுகதை - வலைவீச்சு!

-அருண்

ரிச்சலோடு அறையில் நுழைந்த வசந்த, தனி கழற்றிக் கட்டிலில் விசிறி எறிந்தான். இடுப்பு பெல்ட்டை அவிழ்த்து யூனிஃபார்மை உரித்துத் தூக்கியெறிந்தான். அவன் மனம் முழுவதும் ஆத்திரம் மண்டிக்கிடந்தது.

''சே! எத்தனை பெரிய அவமானம்! எத்தனை கேவலம்! யூனிஃபார்மை மாட்டிக்கொண்டு அரசியல் தலைவர்களுக்குத் தலையாட்டிக்கொண்டு.... சே! என்ன வாழ்க்கை இது..." காலையில் நடந்த நிகழ்ச்சி அவன் மனத்தை அறுத்தது.

ந்த முரட்டுத்தனமான கன்னத்தில் ஓங்கி அறைந்தான் இன்ஸ்பெக்டர் வசந்த். இரண்டு அடி தள்ளிப்போய் விழுந்தான் அந்த முரடன். கோபத்திலும் போதையில் கண்கள் சிவந்துபோய் இருந்தன.

கன்னத்தைத் தடவியவாறு நிதானமாகப் பேசினான். "இன்ஸ்பெக்டர்! ஊருக்கு நீங்க புதுசுன்னு நினைக்கிறேன். நான் யார் தெரியுமா? நான் நினைச்சா இன்னைக்கே தண்ணியில்லாத காட்டுக்கு உங்களை மாத்த முடியும்... தெரியுமா?" என்றான் கோபமாக.

"டேய்! தமிழ்நாட்டில எந்த ஊர்லடா தண்ணியிருக்கு? எந்திரிடா மேல! என்மேல உனக்கு ரொம்பக் கரிசனம்... நீட்டுடா கையை....."

அவன் தயங்கியபடி நிற்க, கன்னத்தில் அறைவிட்டான் வசந்த். முனகியவாறே கைகளை நீட்டினான்." அனுபவிக்க போற... இதுக்கு நீ அனுபவிக்கப் போற...."

"சரிதான் போடா" என்று கைவிலங்கிட்டு அவனை ஜீப்பை நோக்கித் தள்ளினான். "காச்சறது கள்ளச்சாராயம்... சவாலா விடறே?'

டுத்த முப்பதாவது நிமிடம் மேலிடத்திலிருந்து போன் வந்தது. "யோவ்! அந்தச் சாராயம் காய்ச்சறவனை ஏன்யா அரஸ்ட் பண்ணினே... அவன் ஆளும் கட்சி ஆளுயா! மினிஸ்ட்டருக்கு ரொம்ப வேண்டியவன். பெரிய தொந்தரவா இருக்கியே... அவனை முதல்ல வெளியே அனுப்பு...."

"இல்லை சார்..."

''யோவ்! சொன்னதைச் செய்!" என்றது அதிகாரியின் குரல்.

அலட்சியமாக வெளியே போனான் அந்த முரடன். "என்ன இன்ஸ்பெக்டர்! நான் வரட்டா" என்றான் கிண்டலாக.

''தூ' என்று துப்பினான் வசந்த். அவனால் முடிந்தது அதுதான்.

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு ஜில்லுன்னு கஸ்டர்ட் ஃப்ரூட் மிக்ஸர் நட்ஸ் செய்யலாம் வாங்க!
ஓவியம்; ஜெயராஜ்

ந்தக் கடிதத்தைக் கண்டதும் அதிர்ந்து போனான் சுரேஷ். "டேய்! என்னடா இது?" என்று பதறினான். சுரேஷ் வசந்த்தின் அறை நண்பன்.

"தெரியல?" என்றான் வசந்த் சாவகாசமாக. ''ராஜினாமாக் கடிதம்!"

''அது புரியுது! என்ன இது முட்டாள்தனம். ஏன் இந்தத் திடீர் முடிவு? காலேஜில படிக்கும்போதெல்லாம் 'இன்ஸ்பெக்டர் ஆகணும். அயோக்கியத்தனம் செய்யறவன் யாராயிருந்தாலும் அறைஞ்சு உள்ளே தள்ளனும்'னு அடிக்கடி சொல்லுவே... எத்தனை கஷ்டப்பட்டு இந்த இன்ஸ்பெக்டர் வேலை வாங்கின ... இதப்போய் ராஜினாமா செய்யறேன்றயே... என்ன கிறுக்குத்தனம் இது ..?"

"சுரேஷ்! நீ சொன்னதெல்லாம் உண்மை. நான் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியா வரணும்னு முயன்றது உண்மை. ஏன், என் லட்சியமே அதுதான். ஆனா நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு இங்க வேலை இல்லைடா... நேர்மையா நடக்க முடியாது...."

“ஏண்டா, அப்படிச் சொல்றே?”

சுரேஷ் அப்படிக் கேட்டதும் காலையில் நடந்த நிகழ்ச்சியை ஆத்திரமாகச் சொல்லி முடித்தான் வசந்த்.

''ஒரு சமூக விரோதிக்கு, மேலதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணை போகும்போது, நான் எங்கிருந்து நேர்மையா நடக்க முடியும்! மனச்சாட்சியை அடகு வைச்சிட்டு என்னால உத்தியோகம் பார்க்க முடியாதுடா!"

சிறிது நேரம் அவனை அமைதியாகப் பார்த்த சுரேஷ், அவனை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான்.

பின், "வசந்த்! நீ ராஜினாமா செய்திட்டா மட்டும் இந்த அயோக்கியர்கள் திருந்திடுவாங்களா?

"அவனுங்க திருந்தணும்னு நான் ராஜினாமா பண்ணல... மறுபடியும் சொல்றேன், என்னால மனச்சாட்சியை அடகு வைக்க முடியாது."

''வசந்த்! நீ பெரிய பெரிய குற்றவாளிகளைப் பிடிக்கிறது சரிதான். ஆனா அவங்க திருடங்க... எப்படியோ தப்பிச்சிடறாங்க. அதுக்காக நீ வலை வீசறதையே விட்டுட்டா எப்படி? சின்னச் சின்ன மீன்களையும் பிடியேன் . உனக்கு அதுக்கு வசதியிருக்கும்போது,ஏன் வலையை வீசி எறியறே?"

"அப்ப பெரிய திமிங்கலங்களை விட்டுட்டுச் சின்னச் சின்ன அல்ப மீன்களைப் பிடிக்கச் சொல்றயா?" ஆவேசமாகக் கேட்டான் வசந்த்.

இதையும் படியுங்கள்:
உலகின் புகழ் பெற்ற மெழுகு சிலை மியூசியம் உருவான கதை தெரியுமா?
ஓவியம்; ஜெயராஜ்

சிரித்தான் சுரேஷ். "இல்லைடா. நான் சொல்றதை நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ட. நான் உன் கடமையை மட்டும் பண்ணச் சொல்றேன். பலனை எதிர்பார்க்காதே!"

"நீ என்ன சொல்றே?"

''புரியல? உன் வலையிலிருந்து பெரிய திமிங்கலங்கள் இன்னிக்கு நழுவலாம். ஆனா என்னைக்குமே நழுவும்னு ஏன் நினைக்கறே ? காலம் ஒரு நாள் மாறும். பெரிய திமிங்கலங்களும் மாட்டும். அது வரை பொறுமையா, சின்ன மீன்களைப் பிடிச்சிட்டிரு. வலையைத் தூக்கி எறிஞ்சிடாதே. ஏன்னா இன்றைய சின்ன மீன்தான் நாளைய பெரிய திமிங்கலம்...."

அவன் சொல்லிக்கொண்டே போக, வசந்த் தன் தவறை உணர்ந்தான். தன் ராஜினாமாக் கடிதத்தை எடுத்தான். அதை நான்காய், எட்டாய்க் கிழித்துப் பறக்க விட்டான்.

பின்குறிப்பு:-

கல்கி 26  ஜூலை  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

logo
Kalki Online
kalkionline.com