-உதாதிபன்
"கணேஷ்..!" கல்யாணியின் குரல்.
அவன் சமையலறைக்குப் போனான். கேசரி மணத்தது.
"என்னம்மா?"
"உங்கப்பா பூ மட்டும் வாங்கிட்டு வர மறந்துட்டார். - ஒரு நடை போய் வாங்கிட்டு வந்துடேன்."
"அதுக்குச் சிந்தாமணி போகணுமேம்மா."
"என்ன பண்றது? வெறுந்தலையா ரம்யாவை நிறுத்த முடியுமா?"
கணேஷ் கிளம்பினான். சென்ற வாரம் அவனுடைய தங்கை ரம்யாவைப் பெண் பார்த்துவிட்டுப் போயிருந்தார்கள். பையனுக்கும் அவனது பெற்றோர் களுக்கும் அவளைப் பிடித்து விட பணம் நகை சீர்வரிசை எல்லாம் பேசி முடிவாயிற்று. இன்று பையனின் அக்காவும் அவளின் கணவனும் வருகிறார்கள்.
டவுன் பஸ் வந்தது. கணேஷ் ஏறிக்கொண்டான்.
டிக்கெட்டை வாங்கி பாக்கெட்டில் செருகியவனின் பார்வையில் அந்தக் காட்சி பட்டது. முன்னால் நின்றிருந்த மனிதரின் ஜிப்பாவில் துருத்திக்கொண்டிருந்த பர்ஸை ஒருவன் லாகவமாய் உருவினான். கணேஷ் முன்னேறி அவனைப் பிடித்துக் கன்னத்தில் அறைந்தான்
''பர்ஸை எடுடா!"
"எந்த பர்ஸ்?"
அதற்குள் அந்த மனிதர் ஜிப்பாவைத் தொட்டுப் பார்த்து அலறினார்.
''பெரியவரே... இவன்தான் திருடிட்டான். என்னடா முழிக்கற? எடு...''
பேருந்து நின்றது. அவன் பர்ஸை எடுத்துத் தந்தான்.
"இந்தாங்க பெரியவரே. பத்திரமா வைச்சிக்குங்க. கண்டக்டர் பஸ்ஸை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடச் சொல்லுங்க. இவனை ஹேன்ட் ஓவர் பண்ணிடலாம்" என்றான் கணேஷ். அதுவரை அமைதியாயிருந்த சக பிரயாணிகள் சலசலத்தார்கள்."
"ச்சு... அங்க போனா லேட்டாயிடும்."
"ஆமா..."
"அதான் பர்ஸை திருப்பிக் குடுத்துட்டானே. பேசாம விட்டுடலாம்."
''ம்ஹும். இவனை மாதிரி ஆளுங்களை சும்மா விட்டுடக் கூடாது. ட்ரைவர் சார், வண்டியைத் திருப்புங்க...கணேஷ் உறுதியான குரலில் சொன்னான்."
பேருந்து போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் அவனை ஒப்படைத்துவிட்டு ரிப்போர்ட்டும் எழுதிக் கொடுத்து விட்டு, கணேஷ் சிந்தாமணிக்குப் போய் பூ வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபொழுது அவர்கள் வந்திருந்தார்கள். பின் வாசல் வழியாக சமையலறைக்குச் சென்றான்.
"ஏன் இவ்வளவு நேரம்?" என்றாள் கல்யாணி.
சொன்னான்.
"நமக்கென்னன்னு சும்மா இருக்க மாட்டியே.... சரி சரி... முன்னால போய் அவங்களோட உட்கார்.''
வெளியே வந்தான்.
"இது என்னோட பையன் கணேஷ்!" என்றார் ராமச்சந்திரன்.
"நமஸ்காரம்!" கை கூப்பினான்.
சிறிது நேரத்தில் மிதமான அலங்காரத்துடன் ரம்யா வந்தாள்.- டிபன் காப்பி முடிந்ததும் "ஒரு முக்கியமான விஷயம்!" என்று ஆரம்பித்தாள் பையனின் அக்கா.
"என்னங்க?"
"என் தம்பிக்கு ஸ்கூட்டர் ஒண்ணு வேணுமாம். அதையும் லிஸ்ட்லே சேர்த்துக்கச் சொன்னான்."
"அன்னைக்கே எல்லாம் பேசி முடிவாயிடுச்சே. இப்ப திடீர்னு..."சற்று வேகமாகப் பேசத் தொடங்கிய கணேஷை கையமர்த்திவிட்டு ராமசந்திரன் "சரி... வாங்கிக் கொடுத்துடறோம்!" என்றார்.
"உங்க பையன் என்னவோ சொல்ல வந்தாரே..."
''ஒண்ணுமில்ல. அவன் கிடக்கறான்."
"நீங்க சும்மாயிருங்க. ஏற்கெனவே நிறைய கடன் வாங்கித்தான் செய்யற நிலையிலிருக்கோம். இதுல நீங்க பாட்டுக்கு நினைச்சு நினைச்சுக் கேட்டா என்ன பண்றது?"
''ஊர் உலகத்தில யாரும் கேட்காததையா கேட்கறோம்! என் தம்பிக்கு இன்னும் அதிகமா சீர் வரிசை செய்து பொண்ணு கொடுக்கத் தயாரா இருக்காங்க.''
"அப்ப அங்கயே போய் பொண்ணை எடுத்துக்குங்க."
"கணேஷ்...!" என்றார் ராமசந்திரன் பதறி.
"இனிமே கார் வாங்கித் தந்தாலும்கூட உங்க பொண்ணு வேண்டாம் எங்களுக்கு!'' என்று விருட்டென எழுந்தார்கள்.
ராமசந்திரனும், கல்யாணியும் மன்னிப்புக் கேட்டும், சமாதானம் சொல்லியும் பயனில்லை.
"போதுமாடா... உனக்கு இப்ப திருப்தியா? உன் கோபத்தை எந்தெந்த விஷயத்தில காட்டணுங்கிற விவஸ்தையேயில்லையா?"
"பின்னே என்னப்பா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்னா ஏதோ கொம்பு முளைச்சவங்க மாதிரி இஷ்டத்துக்கு டிமாண்ட் பண்ணணுமா?"
"இதெல்லாம் சகஜம், நாமதான் தாழ்ந்து போகணும் என்ஜினியர் மாப்பிள்ளை. நல்ல இடம்.''
"இப்படிச் சொல்லியேதான் சீரழியறோம். கொஞ்சமாவது தன்மானத்தோட இருக்கணும்பா."
"இனிமே இவளுக்கு வர்ற ஒவ்வொரு வரனையும் இந்த மாதிரி விரட்டிரு."
"சந்தோஷமா இருக்கும்!" என்றாள் கல்யாணி கண்ணீருடன்.
''ரம்யாவுக்குக் கல்யாணம் முடியறவரைக்கும் நீ எதிலேயும் தலையிட வேண்டாம்."
கணேஷிற்கு வெறுப்பாயிருந்தது.
செருப்பை மாட்டிக்கொண்டு வெளியேறிக் கால்போன போக்கில் நடந்தான். மனம் அலை பாய்ந்தது.
'அவசரப்பட்டு விட்டேனோ? சற்றுப் பொறுமையா இருந்திருந்தால் ரம்யாவிற்கு இந்த இடமே அமைந்திருக்கும்.'
"நோ. இது இல்லாவிட்டால் இன்னொரு இடம். அதற்காக அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டுமா என்ன?" யோசித்துப் பார்த்ததில், தான் நடந்துகொண்ட விதம் சரியானதாகவே பட்டது அவனுக்கு.
அப்பொழுது கணேஷ் அவனைப் பார்த்தான். சற்று முன்னால் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டவன். அவன் கணேஷை நெருங்கி எகத்தாளமாகச் சிரித்தான்.
"என்னவோ போலீஸ்ல விட்டுட்டா என்னை உள்ள தள்ளிடுவாங்கன்னு நீ நினைச்சியா? இன்ஸ்பெக்டரை கவனிக்க வேண்டிய விதத்தில கவனிச்சேன். வெளிய வந்துட்டேன்.'"
அதே சிரிப்புடன் சொல்லிவிட்டு அவன் அகல, கணேஷிற்குள் உணர்ச்சிகள் வெடித்தன. திரும்பவும் போலீஸ் ஸ்டேஷன் சென்றான்.
''வாங்க!" என்றார் இன்ஸ்பெக்டர்.
"பிக்பாக்கெட் அடிச்ச ஒருத்தனக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் கொண்டு வந்து ஒப்படைச்சேனே. என்ன சார் ஆக்ஷன் எடுத்தீங்க?'' என்றான் நேரடியாய்.
''ரிப்போர்ட் எழுதிக் கொடுத்தீங்க, இல்ல அதோட விட்டுடுங்க. என்ன ஆக்ஷன் எடுக்கணும்னு எங்களுக்குத் தெரியும்."
"ஸ்டாப் இட்! அவன்கிட்டயிருந்து லஞ்சப் பணம் வாங்கிக்கிட்டு சும்மா விட்டுட்டீங்க. நீங்களே இப்படிப் பண்ணினா சமுதாயம் எப்படி உருப்படும்?"
''மிஸ்டர்...மைண்ட் யுவர் வேர்ட்ஸ். மேல ஏதாவது பேசினீங்கன்னா உங்களைப் பிடிச்சி உள்ளே தள்ளிடுவேன்.''
''தள்ளுங்க பார்க்கலாம்...!" கணேஷ் கை நீட்டி ஆவேசமாகப் பேசினான்.
இன்ஸ்பெக்டர் எழுந்து அவனது சட்டையைப் பற்றினார். "போர் நாட் டூ. இங்கே வாய்யா. இந்தாளை லாக் அப்புல தள்ளு. அப்பதான் புத்தி வரும்."
கணேஷிற்கு கோபம் கொப்பளித்தது.
"காரணமில்லாம ஒருத்தரை அரெஸ்ட் பண்ண முடியாது."
"ஸ்டேஷன் வந்து என்கிட்ட சட்டத்துக்குப் புறம்பா பேசினதா கேஸ் புக் பண்ணிடறேன்" என்றார் இன்ஸ்பெக்டர்.
வீடு மகா அமைதியாயிருந்தது. கவலை முகத்துடன் கல்யாணி, ரம்யா. கணேஷ் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். எதிரே ராமசந்திரன். அப்பொழுதுதான் அவனை ஜாமீனில் அழைத்து வந்திருந்தார்.
"வீட்லதான் உன் குணத்தைக் காட்டறேன்னு நினைச்சா...வெளியிலேயுமா? ஸ்டேஷன் வரைக்கும் வந்து.... எத்தனை அவமானம் உன்னால்?"
''லஞ்சம் வாங்கிக்கிட்டு அந்த இன்ஸ்பெக்டர் தப்பு செஞ்சவனைத் தண்டிக்காம விட்டுட்டார். அதைக் கேட்கப் போனேன். அவ்வளவுதான்..."
"உலகத்தில் தினம் எவ்வளவோ அநியாயம் நடக்குது. நீ ஒருத்தன் எதிர்த்து நின்று சாதிக்கப் போறியா?"
மௌனமாய் நின்றான்.
"என்னதான் உன் தேவை? இந்தச் சமுதாயத்தைத் திருத்தணுமா?''
அவன் திடீரென உடைந்தான்.
"இல்லேப்பா. இப்ப என்னோட தேவையெல்லாம் அக்கிரமத்தைக் கண்டு சீறியெழாத மனசு, மத்தவங்கபோல எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு குட்டக் குட்ட குனிஞ்சு தாங்கிக்கிற பொறுமை, யாரு எக்கேடு கெட்டுப் போனா என்ன நம்ம வரைக்கும் நாம சந்தோஷமா வாழ்ந்தா போதுங்கிற சுய நலம்... இதுதான் இந்தக் கணம் எனக்கு வேணும். அதை ஆண்டவன் கொடுத்தாப் போதும்..." சொல்லிவிட்டு மடியில் முகம் புதைத்து கணேஷ் அழத் தொடங்க, அவனைப் பார்த்து ஆத்திரப்படுவதா இல்லை பரிதாபப் படுவதா எனப் புரியாமல் நின்றார் ராமசந்திரன்.
பின்குறிப்பு:-
கல்கி 05 ஜீன் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்