சிறுகதை - ஊர் சிரிக்கும்போது...

Short Story
Short Story

-ஆரூர் தமிழ்நாடன்

வாசல் திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான் எதேச்சையாய் நிமிர... என் கண்களில் எதிர் வீட்டு ராமநாதன் பட்டான். நேற்றைய போதையிலிருந்து ஆள் தெளிந்திருந்தான்.

'இவனைக் கூப்பிட்டுப் பேசிப் பார்த்தாலென்ன?' - நினைப்பு தோன்ற, அதைச் செயலாக்கினேன்.

"ஹலோ ராமநாதன்... கொஞ்சம் வந்துட்டுப் போறீங்களா?"

நான் அழைத்ததும் மிகவும் பவ்யமாக வந்தான். நேற்றிருந்த ராமநாதனுக்கும் இன்றைய ராமநாதனுக்கும் எத்தனை வித்தியாசம்!

''உக்காருங்க..."

நான் சொல்ல... எனக்கெதிரே திண்ணையில் தயக்கமாய் உட்கார்ந்தான். அவன் முகத்தில் சங்கடம் தெரிந்தது.

இதற்கிடையே ஜன்னலில் என் மனைவியின் முகம் நொடித்துவிட்டுப் போனது. அந்த நொடிப்பில் 'இது தேவைதானா?'- இருந்தது.

"மிஸ்டர் ராமநாதன், நான் சொல்றேனேன்னு வருத்தப் படாதீங்க... நேத்து ராத்திரி நீங்க..."

நான் மேட்டரைத் தொடங்கும்முன்பு அவனே இடை வெட்டிப் பேசத் தொடங்கினான் .

"சாரி சார். அதை நெனச்சா எனக்கே ரொம்ப வெக்கமா இருக்கு. அந்தப் பாழாப்போன ‘ட்ரிங்ஸ்'சால... பாவம் சார் என் வொய்ஃப்... அவளப் போயி கண்ணு மண்ணுதெரியாம அடிச்சிட்டேன். அதோட தெருவே கூடி வேடிக்கைப் பார்க்குற அளவுக்கு நியூசென்ஸா நடந்திருக்கேன். ரியலி ஐ ஃபீல் வெரி சாரி சார். போதையோட கொடூரம் என்னன்னு விடிஞ்சப்புறம்தான் சார் தெரியுது."

அவன் குரலிலும் கவலை வழிந்தது. நான் எதையெல்லாம் சொல்லி, அவனுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என நினைத்தேனோ... அதையெல்லாம் அவனே நன்றாக உணர்ந்திருக்கிறான். இவனுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. திருந்துவான். நம்பிக்கை என்னுள் சுடர் விட்டது.

''பரவால்ல ராமநாதன். அதை நீங்களே உணர்ந்துட்டீங்க. செஞ்ச தப்ப உணர்றது பெரிய விஷயம். இனியாச்சும் ட்ரிங்ஸை விட்டுடுங்க."

சொல்லிவிட்டு அவன் கண்களைப் பார்த்தேன். அதில் ஈரம் இருந்தது. என் வார்த்தைகள் நிச்சயம் அவன் மனசைத் தொட்டிருக்கின்றன.

"இவ்வளவு அக்கறை எடுத்துக்கிட்டு எனக்கு அட்வைஸ் பண்ணின உங்களை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன் சார்!" கைகூப்பி எழுந்துகொண்டான். மனம் சந்தோஷமாயிற்று.

வன் வாசல் தாண்டும்வரை பொறுத்திருந்த என் தர்மபத்தினி, அவன் பார்வையிலிருந்து மறைந்ததும் 'பிலுபிலு'வெனப் பிடித்துக்கொண்டாள்.

"இதென்ன வேண்டாத வேலை. யார் எப்படிப் போனா உங்களுக்கென்ன? குதிக்காதன்னு சொன்னா கடலலை கேக்குமா? பெரிய புத்தர்னு நினைப்பு!"

வார்த்தை வார்த்தையாய் சவுக்கு வீசுகிறாள். அதிலும் இலக்கியத்தனமான சவுக்கு! வீச்சில் அவள் படிப்பு தெரிகிறது. வீசட்டும்.

பெண்ணென்பவள் சுயநல ஜீவன். தன் வீடு தன் குடும்பம் என்று குறுகிய வட்டத்தில் வாழும் ஜீவன். படிப்பிற்கும் இந்தப் பண்புக்கும் சம்பந்தமில்லை!

ரபரப்பாக அலுவலகம் கிளம்பி - அங்கு மொத்தி மொத்தி ஃபைல்களோடு யுத்தம் நடத்தி மேலதிகாரிகளிடம் யுத்தம் குனிந்து குனிந்தே கூனலாகி -பேருந்து நெரிசலில் சாறு வராமலேயே சக்கையாகி ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்ததில் ராமநாதனை முற்றிலுமாய் மனசு மறந்திருந்தது. இரவுச் சாப்பாடு முடிந்து 'அக்கடா' என்று படுக்கையில் விழுந்தபோது...

பால் தம்ளரைக் கையில் கொடுத்துவிட்டு உரசினாற்போல் உட்கார்ந்தாள். மனைவி. மெல்லச் சிரித்து உள்ளுக்குள் தீ வைத்தாள். எப்படித்தான் என் அத்தனை அலுப்பும் போனதோ தெரியவில்லை. அப்போதுதானா அது நடக்க வேண்டும்...? வாசல் பக்கம் அந்த சப்தம் கேட்டது. ராமநாதனின் குரல்தான் பழையபடி வேதாளம் முருங்கைமரம் ஏறி விட்டது.

"டேய்... எங்காசு நான் குடிக்கிறேன். எம் பொண்டாட்டி, நான் அடிக்கிறேன். அதை யாருடா கேக்குறது? கண்ட கண்ட பசங்க எனக்கு அட்வைஸ் பண்றானுங்க... வெளில வாங்கடா...!"

என் மனைவியை விலக்கி எழுந்துகொண்டேன். அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. நாளை தெருவே என்னை இளப்பமாய்ப் பார்க்கும். 'கிசுகிசு'த்துச் சிரிக்கும். வேடிக்கை பார்க்கும். எல்லாம் வேடிக்கைதான்! கூட்டத்திற்கு, பைத்தியக்காரனும் - அவனிடம் கல்லடி படுபவனும் ஒன்றுதான். மனசு இருண்டு போனது.

இதையும் படியுங்கள்:
செய்வோம்; சாப்பிடுவோம்... சத்துகளையும் தெரிந்து கொள்வோம்!
Short Story

வர வர அவன் சப்தம் அதிகரித்தது.

வாசல் ஜன்னலைத் திறக்க நீண்ட என் கைகளைத் தடுத்துப் பற்றிய என் மனைவி ஆறுதலாக என்னை அணைத்துக்கொண்டாள்.

"கவலைப்படாதீங்க... என்னிக்காச்சும் ஒருநாள் உங்க அட்வைஸ் அவனை மாத்தும். நிச்சயம் அவனிடம் மாறுதல் வரும்."

கிசுகிசுப்பாய், மிருதுவாய், ஆழமாய் அவளின் குரல் காதோரத்தில் ஒலித்தது - வார்த்தை சவுக்கை வீசிய வாயிலிருந்து இதமான ஆறுதல் சொற்கள்!

பின்குறிப்பு:-

கல்கி 25 ஜூலை 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com