ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

சிறுகதை - சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை?

சுந்தர், வயது முப்பது. பெயருக்கு ஏற்றாற்போல வசீகரமானத் தோற்றம். பொறியியல் முடித்து, வணிக மேலாண்மை பட்டம் பெற்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறான். கை நிறைய சம்பளம். வேலை நிமித்தமாக உள் நாட்டிலும்,
வெளிநாட்டிலும் வலம் வருபவன்.

சுந்தர் வேலையில் சேர்ந்தவுடனேயே அவனுக்குத் தகுந்த வாழ்க்கைத் துணைவியை பெற்றோர் தேட ஆரம்பித்தனர். கல்லூரியில் படிக்கும்போது நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த சுந்தருக்கு கனவுக் கன்னி என்று எவருமில்லை. அவனுடைய அறிவிலும், நடத்தையிலும் கவரப்பட்டு அவனிடம் பேச வரும் பெண்களிடமிருந்து அவன் ஒதுங்கியே இருந்தான்.

குடும்பம் செல்வச் செழிப்பில் மிதந்துகொண்டிருந்தது. தந்தையின் பெயர் கார்த்திக். அவருடைய பெயரைச் சொன்னாலே பலருக்கும் தெரியும். சுந்தரின் நண்பர்கள் சொல்வதுண்டு. “சுந்தர், உனக்கென்ன குறை? பார்க்க நன்றாக இருக்கிறாய். நல்ல வேலை. கை நிறைய சம்பளம். உன் தந்தையோ ஊரறிந்த மனிதர். நீ செல்வந்தரின் ஒரே மகன். உனக்குப் பெண் கொடுக்க போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.”

திருமணத் துணை தேட உதவும் பல மையங்களில் சுந்தரின் தாயார் அவனுடைய விவரங்களைப் பதிவு செய்து வைத்திருந்தாள். அதைத் தவிர நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாகவும் முயற்சி செய்துவந்தார்கள். “நம்முடைய மகனின் விவரங்களைப் பார்த்தவுடன் வரம் கேட்டு நிறைய மனிதர்கள் வருவார்கள்” என்பது தாயாரின் எதிர்பார்ப்பு. “என் பெயரும் போட்டிருக்கிறாய் அல்லவா? அதைப் பார்த்தவுடன் நம் குடும்பத்தின் சம்பந்தம் விரும்பி ஆவலுடன் வருவார்கள்” என்றார் கார்த்திக். ஆனால், பல தகவல் மையங்களில் பதிவு செய்தும் எதிர்பார்த்த அளவு வரன்கள் வரவில்லை. காரணம் தெரியவில்லை.

ஆனால், நடப்பது என்ன? மூன்று, நான்கு வருடங்களாகப் பெண் பார்க்க ஆரம்பித்தும், அவனுக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை. ஜாதகப் பொருத்தம் பார்த்து, ஆணும், பெண்ணும், பொதுவெளியில் சந்தித்து, ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சித்துப் பின்னர் நிச்சயதார்த்தம் செய்ய நாள் குறிக்க வேண்டும்... எல்லாம் அமைந்தால்தானே?

வந்த சிலவற்றில் ஜாதகப் பொருத்தம் இருக்கவில்லை. பெண்ணின் புகைப்படம் பார்த்து, வேண்டாம் என்று சிலவற்றை சுந்தர் ஒதுக்க, அவன் புகைப்படத்தைப் பார்த்து சில பெண்கள் ஒதுக்கினார்கள். ஜாதகம் பொருந்திய சில பெண்களுடன் சுந்தர் பேசினான். தன்னுடைய எண்ண ஓட்டத்திற்கும், அந்தப் பெண்களின் சிந்தனைக்கும் ஒத்துப் போகவில்லை என்று ஒதுக்கினான்.

கடைசியில் ஒரு பெண்ணுடன் இரண்டு, மூன்று முறை பேசிய பிறகு, கருத்தொற்றுமை இருக்கிறது என்று அவர்களுக்குத் தோன்றியது. அந்தப் பெண் தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி, மேற்கொண்டு செய்ய வேண்டியதை முடிவு செய்யலாம் என்றாள். கடைசியில் எனக்கு ஏற்றத் துணையைக் கண்டு பிடித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் அம்மாவிடம் நல்ல செய்தி சொன்னான் சுந்தர். ஆனால், இரு நாட்களுக்குள் பெண்ணின் அம்மா கைபேசியில் கூப்பிட்டு, “பெண்ணிற்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லை” என்று கூறி விட்டாள்.

பல ஜோஸ்யர்களைச் சென்று பார்த்தார்கள். ஜாதகத்தில் தோஷம், பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதைச் செய்தார்கள். நாக தோஷம் விலக காளஹஸ்தி, குலதெயவம் கோயிலுக்குச் சென்று வழிபடுதல், திருமணப் பரிகாரத் தலங்கள் ஆன பாடி சிவன் கோவில் திருமணஞ்சேரியில் வழிபாடு என்று எந்தப் பரிகாரம் சொன்னாலும் தட்டாமல் செய்தார்கள். பலன் எதுவும் கிடைக்கவில்லை.

சுந்தரைவிட குறைவாகப் படித்த நண்பர்களுக்கு எல்லாம் மணம் முடிந்து வாழ்க்கையில் நிலைத்து விட்டார்கள். பாவம் சுந்தர். அவனுக்கும் காரணம் தெரியவில்லை. கார்த்திக் தன்னுடைய நெருங்கிய நண்பரிடம் தன் மகனின் கல்யாணம் ஏன் கை கூடி வருவதில்லை, என்று வருத்தப்பட்டார். நண்பர். “என்னுடைய நண்பர் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் ரகசியமாக இதைப் பற்றி விசாரிக்கச் சொல்கிறேன், உனக்கு விருப்பமிருந்தால்” என்றார்.

கார்த்திக் விரும்பவில்லை என்றாலும், காரணம் தெரிந்துகொள்வது, மன நிம்மதிக்கு அவசியம் என்று உணர்ந்தார். சொன்னதைப் போலவே கார்த்திக் நண்பர், துப்பறிவாளர் மூலம் விசாரித்து விவரத்தைச் சொல்ல வீட்டிற்கு வந்தார்.

இதையும் படியுங்கள்:
பூரி Tacos செய்யலாம் வாங்க! 
ஓவியம்: தமிழ்

“என்னுடைய மகனின் திருமணத் தடைக்கான காரணம் தெரிந்ததா?” என்று ஆவலுடன் கேட்டார் கார்த்திக்.

“சுருங்கச் சொன்னால், உன்னுடைய மகனின் திருமணத் தடையின் மூல காரணம் நீதான்” என்றார் நண்பர்.

“நான் எப்படிக் காரணமாக இருக்க முடியும்” என்று ஆச்சரியப்பட்டார் கார்த்திக்.

“உன்னுடைய தொழில் என்ன?” என்று கேட்டார் நண்பர்.

“தொலைக்காட்சிக்குத் தொடர்கள் எழுதி இயக்கியும் வருகிறேன்.” என்றார் கார்த்திக்.

“அதுதான் காரணம். உன்னுடைய தொலைக்காட்சித் தொடர்கள் பெரும்பாலும் குடும்பக் கதைகள். மருமகளைக் கொடுமை படுத்தும் மாமியார். தவறு செய்கிறாள் என்று தெரிந்தும் அவளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாத மாமனார். அம்மாவைக் கண்டு பயப்படும் மகன். இப்படி உன்னுடைய தொடரில் உள்ளதுபோல உன்னுடைய வீட்டிலும் நிலைமை இருக்குமோ என்று பயந்து பெண் கொடுக்கத் தயங்குகிறார்கள்.”

திகைத்து நின்றார் சுந்தரின் தந்தை கார்த்திக்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com