சிறுகதை: சிலுவை!

Short Storyin tamil - Siluvai..
Short story
Published on

-ரிஷபன்

ரு குழந்தையை விட மோசமாக அழுது கொண்டிருந்தான், விஜய்.

என்ன சொல்லி நிறுத்துவது என்று எனக்குப் புரிபடவில்லை அழட்டும். அழுது அவனாகவே ஓயட்டும்.

எதிரே பரந்திருந்த கடல் அலைகளோடு அதன் அளவில் முரடாய்... பயங்கரமாய்த் தெரிந்தது.

"நான் முரடா... அனு?" என்றான்.

பாதி வார்த்தைகள் காற்றாக வெளிப்பட்டன.

என்ன சொல்ல இதற்கு? தோற்றத்தில் பெரும்பாலும் ஆண்கள் முரடர்களாய், தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் சுயநலமிகளாய்... பெண் மனசு புரியாதவர்களாய்... "ஐ கேர் ஃபார் யூ' என்றால் தடாலென அழுது விடுபவர்களாய்... முரண்பாடுகளின் கலவை.

இவன் மட்டும் இல்லை. இதற்கு முன் மனோகர், சந்திரன், விக்டர்..

"உன்கிட்டே பேசணும் அனு. கொஞ்சம் பர்சனலா..."

இப்படித்தான் ஆரம்பிக்கும்.

பிளஸ் டூவில் பாவாடை, தாவணியிலும் சுரிதாரிலும் சில சமயங்களில் அக்காவின் புடவைகளோடும் உலா வந்த எனக்கு இந்த மாதிரி அணுகல்கள் எந்த ஆச்சர்யமும் தரவில்லை.

"என்ன..." என்பேன் பெரிய மனுஷி போல.

"உனக்கே தெரியும் படிப்பு சுமார்னு பெல்ட்டால விறிடுவேன்னு அப்பா மிரட்டியிருக்காரு" இதே விக்டர் என்னை எப்படி கலாட்டா செய்திருக்கிறான்!

"நாங்க கறி சாப்பிடற ஆசாமிங்க. உடம்பு வலு எப்படி இருக்கும் தெரியுமா?"

முண்டா மடக்கிக் காட்டினான். நான் அதிராமல் நிற்கவும், உள்ளுக்குள் தடுமாறினான்.

"சரி... நான் போகட்டுமா?" என்று சாதாரணமாய்க் கேட்கவும் திகைப்புடன் வழி விட்டவன்.

"அவ என்ன... பெரிய ராங்கிக்காரியா..." என்றானாம். அதுவும் எனக்கு வந்துவிட்டது.

இன்று யோசனைகளை யாசிக்கிறவனாய் என் எதிரே.

"விக்டர்... நான் என்ன செய்யணும்'' என்றேன்.

''படிச்சா புரியலே... அனு..."

"வீட்டுல வேற யாரும் உதவ மாட்டாங்களா?"

"அப்பா பிசினஸ்... அம்மா மக்கு... எதனாச்சும் கேட்டா... "தேவனே, இவனைப் போய் எனக்குக் கொடுத்தீரே'ன்னு அழுவாங்க..."

"வேணாம் விக்டர். பெரியவங்களை ரொம்ப சுலபமாய் கேலி செய்து விடலாம். நாமும் பின்னாளில் கேலி செய்யப்படுவோம்" என்றேன்.

தாவணி மடிப்பை நீவிவிட்டேன். என் வயசுக்கு வளர்ச்சி கூடுதல்தான். கறுப்பு தாவணி. மஞ்சளில் பாவாடை.

"சரி. என் வீட்டுக்கு வா. நான் சொல்லித் தருகிறேன்."

அவன் எதிர்பார்த்திராத மார்க்குகளுடன் பாஸ் செய்ததும் சர்ச்சில் அவன் கல்யாணம் பார்த்ததும் வேறு கதை.

''யாருடி அது?" என்ற அம்மாவின் அதட்டலுக்கு, அப்பா பதில் சொல்லி அடக்கியதுதான் விசேஷம்.

"எம் பொண்ணை எனக்குத் தெரியும்."

அதனால்தானோ என்னவோ, பிறகு மனோகர்... சந்திரன்... என்னை வெவ்வேறு நோக்கங்களில் அணுகியபோது பதறாமல் இருக்கேன்.

அதுவும் மனோகர் சொல்லியே காட்டி விட்டான்.

"நீ பெண்ணே இல்லை, அனு!"

"என்ன சொல்கிறாய்?"

"சராசரிப் பெண்ணை விடவும் வேறுபட்டு நிற்கிறாய்... உனக்குள் தெளிவு இருக்கிறது. வீணாக வெட்கப்படுவதில்லை. பிரச்னைகளை மூன்றாம் மனுஷியாய் அலசுகிறாய். பதிலை ஏற்கிறேனோ இல்லையோ, உன் நேர்மையான அலசலை என்னால் சந்தேகிக்க முடிவதில்லை..."

"அப்படியா..." என்றேன் நிமிர்ந்து.

"ச்சீய்.. மனசு எப்போதும் முகமூடிக்குள் இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. சில நேரங்களில் உன்னை நான் காதலிக்கிறேனோ என்று கூடப் பயப்படுகிறேன்."

"காதலென்றால் பயமா?"

"ம்... ஒரு வகையில்" என்றான்.

"என்ன பயம்?"

''உன்னை எனக்கே உரியவளாய் என் மனம் தீர்மானித்துவிடும். பிறகு இன்றைய அமைதி பறிபோய் அலைக்கழிய ஆரம்பிப்பேன். ஒருநாள் உன்னைப் பார்க்காமல் போனாலும் அனாவசிய அவஸ்தைகள்."

சிரித்தேன்.

"நீயுமா மனோ?"

"இல்லை அனு. இது சகஜம். இயல்பு. இனிப்பைப் பார்த்ததும் எச்சில் ஊறாவிட்டால் அவன் வியாதியஸ்தன். அந்தந்த உணர்வுகளை அடக்குவது வேறு. வராமலே போவது என்பது வேறு."

அவனும் ஒருநாள் கல்யாணப் பத்திரிகை கொடுத்தான்.

"என்னோட அக்கா பொண்ணு. என் கலர்தான். கோலம் போடும். நோட்டு பூரா போட்டு வச்சிருக்கு. தையல் தெரியும். லேசா சினிமா பாட்டு. நல்லா அழும். விஷயம் சொன்னா புரிஞ்சா மாதிரி தலையசைக்கும். மொத்தத்துல் எனக்கு விருப்பமான வடிவம்."

"ஆல் த பெஸ்ட்" என்றேன்.

ன்று எதிரே விஜய்.

என் மெமரியில் பதிந்துபோன அதே முதல் வரியுடன்.

''உன்னோட பேசணும் அனு..பர்சனலா." பீச்சுக்குப் போய்விடலாம் என்றான். தனிமை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், பிறர் கவனம் பதியாத தொலைவு. இன்றும் காட்டன் புடைவைதான். இதன் வசதி வேறு புடைவைகளில் இல்லை என்று முன்பெல்லாம் வாதம் செய்வேன். சண்டை வரும். இப்போது என் மனசோடு சரி. சந்திரன்தான் அடிக்கடி சொல்வான், இனிப்பான பஞ்சுப் பொதி போல இருக்கிறேனாம். காட்டனில்!

"நான் முரடா... அனு?"

"ஏன் கேட்கறே?"

"சொல்லேன். நான் முரடா?"

''எதைச் சொன்னால் நீ திருப்திப்படுவாய்?" என்றேன் சிரிப்புடன்.

"என்னைப் போய் முரடு, புரிந்து கொள்ளாதவன் என்று வனஜா தினம் சண்டை போடுகிறாள்."

அவன் மனைவி. மணமாகி மூன்றே மாதம். மனிதர்கள் எதைச் சுலபமாய்க் கற்றுக் கொள்கிறார்களோ என்னவோ, நேசிப்பு மட்டும் கை வருவதில்லை. சண்டையிடுதல் அதைவிடச் சுலபம்.

வர வர நான் என் வாழ்வில் நிறைய பேருக்குப் பாவமன்னிப்பு வழங்கி விட்ட பிரமை இப்போதெல்லாம் தட்டுகிறது.

இனி அவனை எதுவும் கேட்க வேண்டாம். நேராய்ப் பார்க்கக்கூட வேண்டாம். குமுறி விட்டுத்தான் ஓய்வான்.

ஒவ்வொரு அலையாய் மேலெழும்பி, பாதி கரைக்கு வருமுன்பே கரைந்து போக, ஒரு சில மட்டும் துணிச்சலாய் வந்து கரையைத் தொட்டன. திமிறி எழும்பின. 'ஜெயித்து விட்டதாய்' காற்றில் செய்தி அறிவித்து, பெருமிதமாய்க் கடலோடு இணைந்தன.

"சொல்லு, அனு. நான் என்னதான் செய்யறது?'' என்றான்.

திடுக்கிடலுடன் அவனைப் பார்த்தேன். அவனுக்குப் புரியவில்லை. சமாளித்துச் சொன்னேன்.

''பேசினாக் கூட புரியலியா... விஜய்... இப்ப என்னோட பேசற மாதிரி பேசேன்?"

"இல்லே அனு... புரிஞ்சுக்க மாட்டேங்கிறா!'

"பேசியிருக்கியா? முயற்சி பண்ணியா?"

"பயம்மா இருக்கு அனு... ரொம்ப வற்புறுத்தி உட்கார வச்சுப் பேசினா... வம்பு வருமோன்னு."

பயம். எனக்குச் சிரிப்பு வந்தது. "என்னோட தைரியமா பேசறே?''

இதையும் படியுங்கள்:
சிறுகதை; மேரேஜ் டே!
Short Storyin tamil - Siluvai..

"இல்லே அனு. சில சமயம் உன்கிட்டேகூட எனக்குப் பயம்தான், நீ ஏதாவது சொல்லி விடுவியோன்னு. நீ ஒரு தராசு மாதிரி அனு. பாரபட்சம் இல்லாம, தட்டுல நிக்க வச்சு, சட்டுனு பேசிருவே! ஆனா, எனக்கு இப்ப அது வேணும்... அதனாலதான்.. தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு..." என்றான் படபடப்பாய்.

என் புத்திசாலித்தனம்.. நேர்மை... அணுகு முறை... எனக்கொரு கம்பீரம் கொடுத்திருப்பதாய் இதுவரை உணர்ந்தாலும் இன்று வேறு ஒரு பரிமாணம் எனக்கும்!

"போ விஜய், அடிப்படையில் நாம் நேசத்திற்கு ஏங்குபவர்கள். சார்ந்தே பழகியவர்கள்.சாதித்து விட்டவர்களுக்குக்கூட மடி தேவைப்படுகிறது... அட்லீஸ்ட் வாழ்வில் ஒரு முறையாவது... கதறி அழ, ஆசுவாசப்படுத்திக் கொள்ள... மீண்டும் மீண்டும் முயற்சி செய். புரிய வை."

பக்தன் போலப் பிரசாதப் பொட்டலம் ஏந்தி எழுந்து போனான்.

எதிரே கடலுடன் என் விம்மலும் இணைந்துகொண்டது.

பின்குறிப்பு:-

கல்கி 28 ஏப்ரல் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com