
இயற்கையான சூழலில் பறந்த நிலப்பரப்பில் நதிக்கரையோரம் அமைந்துள்ள அற்புதமான இடம்தான் ஔவை ஆசிரமம். இந்த இடம் நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார் குறிச்சி அருகே சிவசைலம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது காந்தி கிராமம் ஆசிரமத்தின் ஒரு பிரிவு பகுதியாகும். இது அனாதை குழந்தைகள் மற்றும் காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு சொர்க்க பூமியாக திகழ்கிறது.
காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்களுக்கு ஒரு சிறப்பு பள்ளியும் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஒரு சிறப்பு பிரிவும் திறம்பட செயல்பட்டு வருகிறது. இங்கே மேல்நிலைப்பள்ளி, கைத்தொழில் பயிற்சி மையம், பிசியோதெரபி மையம், குழந்தைகள் பள்ளி இப்படி எண்ணற்ற வகையில் சிறந்த நிர்வாகத்துடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரிய விஷயமாகும். இங்குள்ள பிள்ளைகளுக்கு தங்குமிடம், உணவு, உடை இருப்பிடம் அனைத்தும் இலவசம்.
1956-ல் ஜேசுதாஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. 1997இல் உயர்நிலைப் பள்ளியும் அதன் பின்னர் 2018ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு கைத்தொழில், நடனம், யோகா போன்றவை கற்றுத் தரப்படுகிறது. கஸ்தூரிபாய் குழந்தைகள் காப்பகம் இதில் ஒரு அங்கமாகும். மனநலம் குன்றிய குழந்தைகள், ஆட்டிசம் டவுன் சின்றோம், செவித்திறன் குறைபாடு போன்ற நபர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கே பிசியோதெரபி சென்டர், நர்ஸ், டாக்டர் என அனைவரும் உள்ளனர். சிம்சன் குரூப் ரெடிங்டன் அறக்கட்டளை, அஞ்சனா மென்பொருள் நிறுவனம் ஆகியவை இந்த இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகின்றன. 2018ல் சுகாதார மையம் திறக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் ஏ.பி.ஆர் அண்ணாமலை செட்டியார் என்பவர் சுமார் 40 லட்சம் செலவில் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்து உதவி புரிந்துள்ளார்.
இந்த மையத்தில் உள்ளே பல்வேறு பிரிவுகள் திறம்பட நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. கைத்தொழில், கணினி மையம், காதி தொழில், கைவினைப் பொருட்கள் போன்றவை கற்றுத் தரப்படுகிறது. இந்த மையத்திலிருந்து சுமார் 500 குழந்தைகள் மேல் படிப்புக்காகவும், வேலைக்காகவும் சென்றுள்ளனர் தற்போது இந்த மையத்தில் வெவ்வேறு பிரிவுகளில் சுமார் 800 குழந்தைகள் உள்ளனர்.
ஜீவா ஜோதி சுப்பிரமணிய சுவாமி அறக்கட்டளை மூலம் பங்குனி உத்திரம் அன்று அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெறும். தவிர வசதி படைத்தோர் தங்கள் திருமண நாள், பிறந்த நாள் போன்ற நாட்களில் இங்கு உள்ள அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வருவது சிறப்பான செயலாக கருதப்படுகிறது.
இங்கு ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் நிறைய உள்ளனர். இந்த மையம் ஏழைகளின் சொர்க்க பூமி என்றால் மிகையாகாது. அவ்வை ஆசிரமம் அனாதை குழந்தைகள், ஏழை குழந்தைகள் ஆகியோருக்கு சொர்க்க பூமியாக உள்ளது.