தேவர்கள் உண்ணும் அமிர்தம் போல மனிதர்களுக்கு கிடைத்திருப்பது இது... எது?

ஆப்பிளை விட மூன்று மடங்கு அதிக புரதச்சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு அதிக வைட்டமின் சி யும் நெல்லிக்காயில் உள்ளது.
நெல்லிக்காய்
நெல்லிக்காய்
Published on

தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உருவானது தான் நெல்லி மரம் என ஒரு நம்பிக்கை உண்டு.

தேவர்கள் உண்ணும் அமிர்தம் போல மனிதர்களுக்கு கிடைத்திருப்பது நெல்லி. ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள் இதனை ! ஆப்பிளை விட மூன்று மடங்கு அதிக புரதச்சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு அதிக வைட்டமின் சி யும் நெல்லிக்காயில் உள்ளது.

முதுமையின் சுவடுகள் தெரியாத நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும் தரும் மகத்துவம் மிக்க இயற்கை உணவு நெல்லிக்கனி. தினசரி உணவில் நெல்லிக்காய் சேர்த்து வந்தால் உடல் பொலிவுடன் அழகும் பெறும்.

உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் சீராக செயல்பட தேவையான சத்துக்களை தரும் ஒரே கனி நெல்லிக்காய் தான்!

ஜலதோஷத்தின்போது நெல்லிக்காயை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலை பாரமும் தலைவலியும் நீங்கும்.

நெல்லிக்காயில் சில துளிகள் பன்னீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலியும் சரியாகும்.

இதையும் படியுங்கள்:
நெல்லிக்காய் பயன்படுத்தி சட்னி செய்யலாமா? புதுசா இருக்கே!
நெல்லிக்காய்

ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லில் சாறையும், அரை டேபிள் ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் எதுவும் வராது. பார்வையும் கூர்மை பெறும். முகமும் பொலிவு பெறும்.

நெல்லிக்காயை சம அளவு எலுமிச்சை இலைகளோடு சேர்த்து விழுதாக அரைத்து அந்த விழுதை பாலில் கலந்து தலையில் நன்கு ஊறும் அளவுக்கு தேய்த்து விட்டு ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வந்தால் இளநரை மறையும்.

நெல்லிக்காயை சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் கலந்து கொதிக்க விட்டு இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் தலை முடி பளபளப்பாகவும், கருமையாகவும் முடி உதிராமல் நன்கு வளரும். இளநரையும் மறையும்.

காய்ந்த நெல்லிவற்றலை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லிவற்றலை பொடி ஆக்கி தேன் கலந்து அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டு வந்தால் கண் பார்வை பலமாகும்.

ஒரு டம்ளர் கொதிக்க வைத்த பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி பொடி கலந்து சிறிது நெய் விட்டு கலந்து அருந்தி வந்தால் இருமல் பிரச்சனை குணமாகும்.

நெல்லிச் சாறில் சிறிது மஞ்சள் தூள், தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய்கட்டுப்படும்.

முகப்பரு, கரும்புள்ளி உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் இப்பிரச்சனை நாளடைவில் மறைய செய்யும்.

சிலருக்கு சிறுநீர் போகும் போது எரிச்சல் ஏற்படும். எரிச்சலை போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சரியாகும்.

நெல்லிவற்றலுடன் வில்வ இலை, சீரகம், சுக்கு சேர்த்து இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் பித்த வாந்தி நிற்கும்.

நெல்லிக்காய் மசக்கை வாந்தியை தடுப்பதோடு பசியையும் தூண்டிவிடும். கர்ப்ப காலத்துக்கு தேவையான இரும்புச்சத்தையும் இரத்த விருத்தியையும் தருகிறது.

நெல்லிக்காய் சிறிது, சிறு துண்டு இஞ்சி, இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அரைக்கவும். இந்த ஜூசை வடிகட்டி தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரக கல் கரையும்.

நெல்லிக்காயை துவையலாக அரைத்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் உணவின் சுவையின்மை நீங்கி, நன்கு பசி எடுக்கும்.

இதையும் படியுங்கள்:
அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்கும் உதவும் நெல்லிக்காய்!
நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை படிப்படியாக குறையும். ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சுவாசப் பிரச்னைகள் தீரும்.

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் காய வைத்து அரைத்த திரிபலா சூரணத்தை தினமும் இரவில் இரண்டு கிராம் அளவுக்கு வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி எப்போதும் இளமையுடன் இருக்கலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com