

17/08/2003 தேதி கல்கி வர இதழில்...
"திருமணம் மறுத்தது ஏன்...?" எழுத்தாளர் சிவசங்கரியிடம் மனம் திறக்கிறார் APJ அப்துல் கலாம் அவர்கள். கல்கி களஞ்சியத்திலிருந்து சுவாரசியமான எட்டிக்குப் போட்டி பேட்டி...
'அக்னிச் சிறகுகள்' விற்பனை ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டிவிட்டது. நாடறிந்த தலைவரான அப்துல் கலாம் ஓர் எழுத்தாளராகவும் முத்திரை பதித்துவிட்டார். எழுத்தாளர், தனி மனிதர் என்ற தகுதியில் அவர் சிந்தனைகள் என்ன..? இந்தப் பிரத்யேகப் பேட்டி ஆராய்கிறது...
இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
சின்ன வயதில் உங்கள் அப்பா அற்புதமான கருத்துகளைச் சொன்னதோடு, அதன்படி வாழ்ந்து காட்டி உங்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகவும் இருந்திருக்கிறார். அவரைத் தவிர உங்கள் மைத்துனர், அக்கா புருஷர், ஆசிரியர், நண்பர்கள், மேலதிகாரிகள் - என்று உங்களைப் பாதித்தவர்களைப் பற்றியெல்லாம் புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் தாய், எம்.ஐ.டி.யில் சேர பணம் தேவைப்பட்டபோது தன் வளையல்களைக் கழற்றித் தந்த சகோதரி ஜோஹரா இவ்விருவர் தவிர, வேறு எந்தப் பெண்ணையும் நீங்கள் எங்குமே குறிப்பிடாதது எனக்கு வியப்பைத் தருகிறது.
ஏன், மதர் தெரெஸாவைப் பற்றி எழுதியிருக்கிறேனே! என் அம்மா, அக்கா, அண்ணிமார் எல்லோருமே குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள்தாம்...
நான் கேட்டது நீங்கள் படித்து, வேலை பார்த்த காலத்தில் உங்களைப் பாதித்த பெண்களைப் பற்றி...
(சிரிக்கிறார்) நீங்கள் எங்கெங்கேயோ போகிறீர்கள்!
உங்களைப் பற்றிய புத்தகங்கள், நீங்கள் எழுதிய புத்தகங்கள் என்று பலவற்றைப் படித்தபோது எனக்குத் தோன்றிய எண்ணத்தைதான் கேள்வியாக உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். பல ஆண்களைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருக்கும் உங்களை, பெண்கள் அந்த அளவுக்குப் பாதிக்கவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது... உங்கள் நண்பர் குழாமில் பெண்கள், அதாவது பெண் சினேகிதிகள், இருந்தார்களா? இப்போது இருக்கிறார்களா?
ISRO, DRDO-வில் என்னோடு சிறப்பாக வேலைபார்த்த பெண்கள் பலர் உண்டு. 'அக்னி' ஏவுகணைத் தயாரிப்பில் அதற்குத் தேவையான heat-sheath தயார் செய்தது ரோகிணி என்ற ஒரு பெண்தான். அதை நாங்கள் Carbon Technology என்போம்.
'ஏன் பெண்களைப் பற்றி எழுதவில்லை' என்று நீங்கள் கேட்கும்வரை, இந்த ரீதியில் நான் சிந்தித்ததில்லை. இருப்பினும், in future I will write. (சிரிக்கிறார்)
தற்கால இந்தியாவில் பெண்களின் நிலை, அவர்களுக்குக் கிட்டியுள்ள முன்னேற்றம், உங்களுக்குத் திருப்தி தருவதாக உள்ளதா?
சில சமூகத்தைச் சார்ந்த பெண்கள் கல்வியறிவு பெற்று முன்னேறியிருக்கிறார்கள்; சில சமூகத்தில் இது இன்னமும் சாத்தியமாகவில்லை. கட்டாயக் கல்வி மூலம் அனைத்துப் பெண்களையும், குறைந்த பட்சம் எட்டாவது வகுப்பு வரையிலுமாவது படிக்க வைக்க வேண்டும். கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் படித்த, படிக்காத பெண்களிடையேயுள்ள இடைவெளி மிக அதிகம். இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும்.
சம்பிரதாயம் என்ற பெயரில் இன்னமும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றன?
நிறைய நடந்தது; இப்போதும் நடக்கிறதா என்பது கேள்விக்குறி! 1941-ல் நான் பள்ளி மாணவனாய் இருந்தபோது என் ஆசிரியர் வீட்டில், அவர் மனைவி எனக்குச் சாப்பாடு பரிமாற மறுத்தார்; பின்னர் அவரே மனம் மாறி, போட்டார். இப்படிச் சமுதாய மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்வி வளர்ந்திருக்கும் இடங்களில் பண்பாடும் வளர்ந்திருக்கிறது. இப்போது உங்களிடம் நாள் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்... பெண்களுக்கான முப்பது விழுக்காடு ஒதுக்கீடு இன்று இல்லையென்றாலும், கொஞ்ச நாளில் வந்துவிடும். சுமார் நூற்றியெழுபது பெண்களைக் கொண்ட லோக்சபையின் நடப்புகள் எப்படியிருக்கும் என்று நம்புகிறீர்கள்? தரமுள்ளதாய், அமைதியாய், அதிக அளவில் செயலாற்றுவதாய் இருக்குமா? இல்லை மாறாக இருக்குமா?
நான் பெண் என்பதற்காகக் கூறவில்லை; பொதுவாகப் பெண்களுக்குப் பொறுப்புணர்வு அதிகம். வேலைக்குப் போகும் பெண்கள் இதை நிரூபித்திருக்கிறார்கள். வீட்டிலும் அதிக பொறுப்பைச் சுமப்பவர்கள் பெண்கள்தான் என்பதால், துவக்கப் பிரச்னைகளைத் தாண்டிவிட்டால், பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் தரமாக இருக்கும் என்றுதான் நான் அழுத்தமாய் நம்புகிறேன். பெண்களைப் பற்றிப் பேசுகையில் ஒரு முக்கியமான விவரத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வம் எழுகிறது. உங்கள் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் என்கிற எண்ணத்தில்தான் திருமண பந்தம் வேண்டாம் என்று தீர்மானித்தீர்களா?
(சிரிக்கிறார்) அப்படி, எந்த எண்ணமும் இல்லை. வீட்டில் அண்ணன்மார், அக்கா என்று எல்லோரும் ஒன்றாக இருந்தோம். அவர்களுக்கெல்லாம் நிறையக் குழந்தைகள். அந்தப் பெரிய குடும்பத்தில் ஒருவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை... அவ்வளவுதான்.
(பேட்டி தொடர்கிறது... பகுதி 3)