

'துயில்' என்றால் உறக்கம் அல்லது தூக்கம். ஸ்ரீரங்கத்துப் பெருமாள் சயனித்த கோலம் 'அறிதுயில்' எனப்படும். உறங்குவது போல் கண் மூடி இருந்தாலும் அவர் அனைத்தையும் அறிவார். அது ஒரு ஆன்மிகக் கபடத் தூக்கம்; தாயார் மகாலட்சுமியை ஏமாற்றும் வேலை!
எல்லாப் பெருமாள்களும் தூங்குவதில்லை. திருவேங்கடமுடையான், பார்த்தசாரதி, ஒப்பிலி அப்பன் ஆகியோர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். நின்றபடி தூங்க முடியாது (சிலரால் பஸ்ஸில் அதுவும் முடியும்!). குடந்தை சாரங்கபாணி, திருமயம் பெருமாள் ஆகியோர் படுத்த நிலையில் தூங்கும் கோலத்திலேயே உள்ளனர்.
எல்லா உயிர்களும் தூங்குகின்றன. இது மூளைக்கு ஓய்வு; சிந்தனைக்கு 'ஃபுல் ஸ்டாப்'. இரவில் தூங்க விடாது குலைக்கும் எங்கள் தெரு நாய்கள் நாற்பதும் கூட அதிகாலையில் உறங்குகின்றன. பொதுவாக இரவில் தூங்குவதே வழக்கம். ஆனால், நைட் ஷிஃப்ட் லோகோ பைலட்டுகள், ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் என் மகன் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு.
என் மகன் ஒரு மென்பொருள் பொறியாளர் (Software Engineer), 'ஒர்க் ஃபர்ம் ஹோம்' (Work From Home). அவனும் இரவில் தூங்க மாட்டான். அம்மா காலையில் வாசல் பெருக்கி கோலம் போட்டுவிட்டு வந்து பார்த்தால், அவன் அப்போதுதான் தூங்க ஆரம்பித்து இருப்பான். காலை உணவுக்கு எழ மாட்டான்; மதியச் சாப்பாட்டுக்கும் எழுப்புவது கடினம்.
வள்ளுவர் உறக்கத்தை இறப்புடன் ஒப்பிடுகிறார்:
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு"
உறக்கத்தில் நாம் தற்காலிகமாக மரிக்கிறோம். மீண்டும் எப்படி விழிப்பு வருகிறது? நம்மை எழுப்பியது யார்?
"இன்று புதிதாய்ப் பிறந்தோம்" என பாரதியார் இதையே சொல்கிறார்.
தூக்கத்தில் வரும் கனவுகள் ஒரு தனி உலகம். பல சிக்கல்களுக்கு விடை கனவில் கிடைத்திருக்கிறது.
தையல் இயந்திரம்: எலியாஸ் ஹோவே என்பவர் கனவில் காட்டுவாசிகள் ஈட்டியால் குத்த வருவது போல் கண்டார். அந்த ஈட்டிகளின் முனையில் துவாரங்கள் இருந்தன. உடனே விழித்துக்கொண்ட அவர், ஊசியின் காதுப் பகுதியில் ஓட்டை போடாமல், முனையில் ஓட்டை வைத்து நூலைக் கோர்த்தார். வெற்றி கிடைத்தது!
பென்சீன் (Benzene): வேதியியலில் பென்சீன் மூலக்கூறுகள் எப்படிப் பிணைந்துள்ளன என்பது புதிராக இருந்தது. ஹெக்குலே என்ற விஞ்ஞானி கனவில் ஆறு பாம்புகள் ஒன்றன் வாலை மற்றொன்று கவ்விக்கொண்டு அறுகோண வடிவில் இருப்பதைக் கண்டார். பென்சீனின் 'Hexagonal' அமைப்பு இப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
விழித்தபடி இருக்கும்போது வரும் கனவுக்குப் பெயர் 'சிந்தனை'. பகலில் வந்தால் அது 'பகற்கனவு'. அதிகாலைக் கனவு பலிக்கும் என்பார்கள். சிலர் கண் திறந்தபடியே தூங்குவார்கள்; அது ஒரு தனித் திறமை! பல ஆசிரியர்களும் அலுவலர்களும் மதிய உணவிற்குப் பின் விழித்தபடியே தூங்குவார்கள். மாணவர்களும் இதைக் கற்றுக்கொள்கிறார்கள்.
"தூங்கி வழிகிறது" என்பார்கள். சிலருக்குக் கடைவாயில் உமிழ்நீர் வடியும். அதை 'வாணி ஊத்துது' என்பார்கள். விழித்திருக்கும்போது உமிழ்நீர் சுரந்தால் அதன் பெயர் 'ஜொள்ளு'.
குழந்தைகள்: சில குழந்தைகள் இரவு முழுதும் அழுதுவிட்டு விடிந்ததும் தூங்கும். அவன் எதிர்கால மென்பொருள் பொறியாளன்!
கணவன் - மனைவி: குப்புசாமியின் மனைவி கமலா ஓயாத பேச்சுக்காரி. கல்யாணமாகி நாற்பது வருடத்தில், மனைவி பேசும்போது தன் காதுகளை 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யும் கலையை அவர் கற்றுக்கொண்டார். ஒரு உறுப்பை மட்டும் தூங்க வைக்க முடியும் என்பது அவர் கண்டுபிடிப்பு!
தலைவர்கள்: இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குவார்களாம். "வித்தை உள்ளவர்களுக்கும் விசாரம் (கவலை) உள்ளவர்களுக்கும் தூக்கம் வராது" என்பது கிருஷ்ணர் கூற்று.
இயற்கை: கும்பகர்ணன் ஆறு மாதம் தூங்குவான். மரங்களும் தூங்கும்; குறிப்பாகத் 'தூங்குமூஞ்சி மரம்' இரவில் இலைகளை மூடிக்கொள்ளும்.
மருத்துவர்கள் தூக்கத்தையே பல வியாதிகளுக்கு மருந்தாகச் சொல்கிறார்கள். நன்கு உழைப்பவர்களுக்கும் நடப்பவர்களுக்கும் தூக்கம் தானாக வரும். மெத்தையை வாங்கலாம், ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது.
தூக்கத்தை வரவழைக்க "10-3-2-1" என்றொரு விதி உண்டு:
10 மணி நேரத்திற்கு முன்: காபி, டீ தவிர்க்கவும்.
3 மணி நேரத்திற்கு முன்: உணவை முடிக்கவும்.
2 மணி நேரத்திற்கு முன்: வேலைகளை நிறுத்தி ஓய்வெடுக்கவும்.
1 மணி நேரத்திற்கு முன்: டிவி, மொபைல் திரைகளைப் பார்க்க வேண்டாம்.
கடைசியாக, எஸ். ஜானகி அம்மாவின் "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே" அல்லது பி. சுசீலாவின் "தூங்காத கண்ணென்று ஒன்று" ஆகிய பாடல்கள் சிறந்த தூக்க மாத்திரைகள்.
அமெரிக்க ராணுவத்தின் 'நேவி சீல்' (Navy SEALs) வீரர்கள் பின்பற்றும் ஒரு தூக்க முறை உண்டு. கால்களைச் சற்று உயரத்தில் வைத்துக்கொண்டு, ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டால் உடனே தூக்கம் வருமாம். வெறும் எட்டு நிமிடங்கள் மட்டும் தூங்கிவிட்டு, புத்துணர்ச்சியுடன் எழுந்துவிடுவார்கள்.
பொதுவாக அதிகாலை 4 அல்லது 4:30 மணிக்கு அலாரம் வைப்பது எதற்காக? ரயிலைப் பிடிக்கவோ அல்லது பயணத்திற்குத் தயாராகவோதான். ஆனால், அலாரம் அடித்தும் எழாவிட்டால் அது 'ரிஸ்க்' என்பதால், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை எனத் தொடர்ச்சியாக (Snooze) அலாரம் வைப்பார்கள். மென்பொருள் பொறியாளர்களும் அலாரம் வைப்பார்கள்; ஆனால் அது காலை 11 மணிக்காக இருக்கும்!
நான் 'கண்ணே தூங்கு' என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதினேன். அச்சிடப்பட்ட பத்தாயிரம் பிரதிகளில் நூறு பிரதிகள் மட்டுமே விற்றன. பிறகு அதனை இணையத்தில் PDF வடிவில் வெளியிட்டேன். அதைப் படித்த பலரும் பாராட்டிப் பரிந்துரை செய்கிறார்கள்.
வேடிக்கை என்னவென்றால், தூக்கமில்லாமல் தவிப்பவர்கள் அந்தப் புத்தகத்தைப் பத்து நிமிடம் படித்தாலே நல்ல தூக்கம் வந்துவிடுகிறதாம்! புத்தகம் திறந்திருக்க, அவர்கள் உறங்கிவிடுகிறார்கள். "இதுவரை இந்தப் புத்தகத்தை யாராவது முழுமையாகப் படித்து முடித்திருக்கிறீர்களா?" என்று ஒருவர் கிண்டலாக 'வில்லங்க' விமர்சனம் வேறு செய்திருக்கிறார்.