

திருச்சி நகரம், நேற்று இரவு பெய்த மழையில் நனைந்த தனது வீதிகளை மெல்ல மெல்ல உலர்த்திக் கொண்டிருந்தது.
"சே! பறக்கறாங்க... பாவிப்பசங்க!" உடை முழுவதும் சேற்றை அள்ளித் தெளித்துவிட்டுப் போகும் டவுன் பஸ் டிரைவர்களைச் சபித்தவாறு புத்தூர் ரோட்டில் பொதுஜனம்.
வழியில் அந்த 'சாலை விநாயகர்' வழக்கம்போல் போவோர் வருவோர்களின் 'சல்யூட்'களுக்கு ஒரே போஸில் அமர்ந்து ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். வாசலில் அவருக்குத் துணையாய்ப் பிச்சைக்காரப் பாண்டி. அவனோடு எப்போதும் வாலாட்டி நிற்கும் அவன் 'மணி'. அவன் சொத்து, அந்தச் சொறி நாய்.
உடம்பெல்லாம் மொய்த்த ஈக்களை விரட்டியவன்,
"ஐயா... சாமி... தர்மம் போடுங்க..." என்றான்.
இன்று இதுவரை 'தர்ம' ஆசாமிகள் யாரும் கோயிலுக்கு வராதது அவன் குற்றமா என்ன? பாண்டிக்கு ஒரே ஆத்திரமாய் வந்தது. எல்லாம் அந்தச் சாலை விநாயகர் மேல்தான்!
"என்னை எதுக்கு இப்படி கஷ்டப்படுத்துறே? பேசாம அழைச்சிகிட்டுப் போகாம? உடம்புல கொஞ்ச நஞ்சம் தெம்பு இருந்த போதாவது அங்கே இங்கேன்னு அலைஞ்சு காய்கறி வித்தேன். ம்... இப்ப?"
சூரியன் மெதுவாய் உச்சிக்கு வந்து சற்று உக்கிரமானான். பாண்டியின் வயிறு அதிலும் உக்கிரமாய் இரைய, மீண்டும் அதே பல்லவி:
"ஐயா... சாமி... தர்மம் போடுங்க!"
'இன்னிக்கு இதுவரை ஐம்பது ரூபா கூட தேறலை. பக்கத்து டீக்கடைக்காரன் தினமும் ஒரு தடவை தரும் டீயும் குடிச்சாச்சு.'
புலம்பியவாறு உள்ளே பார்த்த பாண்டியின் பார்வையில், பாதி இருட்டில் என்றோ போட்ட வாடிய மாலையுடன், முகம் மட்டும் மலர்ச்சியாய் விநாயகர் தெரிந்தார். சட்டென அவனுக்கும் இரக்கம் வந்தது.
'நமக்காவது தினமும் ஏதாவது கிடைக்குது. விநாயகருக்கு? ஆனா, ஏதாவது பண்டிகைன்னா மட்டும் எள்ளுப் போட்டா எள்ளு விழாத மாதிரி கூட்டம். ஜனங்க ஏன் இப்படி? மாசத்துக்கு ஒரு நாள்... ஒரே நாள் கோயிலுக்கு வந்து தலையில் குட்டிக்கிட்டா ஆச்சா? மாசம் பூரா பண்ற பாவத்துக்கு எங்கே போறதாம்?' எனச் சலித்துக் கொண்டான்.
"ஹ! இப்படிப் புலம்பினா தினமும் நிறைய பேர் வருவாங்க... உனக்குக் காசு கிடைக்கும், இல்ல?" என அர்த்தபுஷ்டியாய் விநாயகர் (Lord Vinayaka) பார்ப்பது போலத் தோன்ற,
"இ... இல்லை... நான்... எனக்கு வேண்டியது எல்லாம்..." என்று அவன் முடிக்குமுன்...
"ப்ளிச்!"
அவன் உடம்பெல்லாம் சேறு வாரி அடித்தவாறு வந்து நின்ற அம்பாஸிடர் காரைப் பார்த்துக் கடுப்பானான் பாண்டி. கதவு திறந்து இறங்கிய ஒரு பெரியவரின் ஜிப்பாவைப் பார்த்து முறைக்க,
"இந்தா நூறு ரூபா. நாளைக்கு வருஷப் பிறப்புக்கு..." என அவர் கொடுத்த ரூபாயை வாங்கியவுடன் வாழ்த்திக் கும்பிட்டான்.
மறுநாள், வருஷப் பிறப்புக்கு வரும் கும்பல் அலையலையாய்க் கோயிலில் கூடியது. கோயில் வாசலில் ஏற்கனவே பெரும் கூட்டம்.
"சே! நல்ல நாளும் கிழமையுமா இப்படியா? சனியன்! இப்ப என்ன பண்றது? கோயிலைத் திறக்க முடியாம போச்சே..." கூட்டத்தினிடையே புலம்பல்கள்.
"நேரத்தை வீணாக்க வேண்டாம். நான் பண்றேன். செலவை எல்லாரும் ஏத்துப்போம்..." என்றவாறு ஒருவர் 'சேவை' மனப்பான்மையுடன் சட்டையைக் கழற்றி காரியத்தில் இறங்க...
"அனாதை பாண்டிக்கு" அமோகமாய்த் தொடங்கியது அந்திம யாத்திரை!
அதை அடைக்கப்பட்ட கிரில் கதவு வழியே அதே முகமலர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சாலை விநாயகர். ஒருவேளை அவனது 'அந்த' ஒரே ஆசையை (இறைவனிடம் சேருவது) நிறைவேற்றிய திருப்தியோ அவர் முகத்தில்?