பழம் தின்று கொட்டை போட்டவர் - யார்?

கொட்டு முரசே…
கொட்டு முரசே…

ழம் தின்று கொட்டை போட்டவர் - என்ற சொல்லாடலை பல இடங்களில் கேட்டிருப்போம். ஆனால் இதன் சரியான பொருள் நம்மில் பலருக்குத் தெரியாது.

பழத்தை தின்று விட்டு விதைகளை எச்சத்தின் வழி வெளித்தள்ளும் பறவைகள் - என விடுகதை விளக்கமும் இதற்கு உண்டு. ஞானம் என்னும் பழத்தை உண்டு, ருத்ராட்சக் கொட்டை அணியும் துறவி - என்கிற ஆன்மீக விளக்கமும் இதற்கு உண்டு. ஆனால் இதற்கான சரியான விளக்கம் என்ன?

தமிழ் மொழியில் 'பழம்' - என்ற சொல்லிற்கு வெற்றி என்ற பொருளும் உண்டு.

பழம் - என்றால் வினையின் வெற்றி, செயலின் வெற்றி! வெற்றிக்கனியைப் பறித்தார், வெற்றிக் கனியைச் சுவைத்தார் எனச் சொல்வதைக் கேட்டிருக்கலாம்.

ஒரு காரியம் வெற்றியா, தோல்வியா என அறிந்து கொள்ள 'நீங்க போன காரியம் காயா, பழமா?’ என கேள்வி எழுப்புவதையும் நீங்கள் கேட்டிருக்கலாம்.

அதேபோல்,  தாயம், சொக்கட்டான் போன்ற விளையாட்டுகளில் - வெற்றி நிலையை அடைந்ததைக் குறிக்க 'பழம்' என்றும் 'காயை வெட்டு' - எனத் தோற்கும் புள்ளிக்காகச் சொல்வதையும் காணலாம். (உதா : " ஒரு தாயமும் ஒரு ஆறும் விழுந்தால் பழம்") .

இதிலிருந்து நம் முன்னோர்கள் 'வெற்றி’ என்பதைப் 'பழம்’ எனவும், 'தோல்வி’யை 'காய்’ எனவும் குறிப்பிட்டனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

எனவே , அனுபவம் மிக்கவர் - என்ற பொருள்பட இவ்வழக்கு பெரும்பாலும் சொல்லப்பட்டாலும்…
'பழம் தின்று கொட்டை போட்டவர்' - என்றால் வாழ்வில் பல 'வெற்றிக் கனிகளைப் பறித்து, சுவைத்த வெற்றியாளர்' - என்று பொருள். கொட்டு முரசே… என வெற்றி முரசு கொட்டியவர் என்று பொருள் ஆகும்.

'தனது அனுபவம், திறமை மற்றும் அறிவாற்றலைக் கொண்டு பல்வேறு  இலக்குகளை அடைந்து சாதனைகள் புரிந்தவர்' - என்று பொருள்.

இதையும் படியுங்கள்:
Be Careful மக்களே..  இந்த உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்! 
கொட்டு முரசே…

கொட்டு + ஐ = கொட்டை என இங்கு குறிப்பிடுவது கொட்டு எனும் வாத்தியத்தையே தவிர  பழத்தின் விதையை அல்ல. கொட்டு என்பது ஒரு வகை முரசு வாத்தியம். கொட்டுதல் - என்றால் தாளக் கருவியைக் கையால் அல்லது குச்சியால் அடித்தல், தட்டுதல்.

மேளம் கொட்டுதல், பறை கொட்டுதல் எனவும் ஜெயபேரிகை கொட்டுதல் எனவும் வெற்றிக்கான அடையாளமாக இவ்வாறு குறிப்பிடுவது நமது வழமையாகும்.

'வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!' - என்ற பாரதியார் பாடலையும் நினைவு கூருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com