பட்டி மன்றத்தின் முகவரியான தமிழறிஞர் சாலமன் பாப்பையா கடந்துவந்த பாதை!

கடினமான இலக்கியங்களை எளிய நகைச்சுவையுடன் பாமர மக்களின் இல்லங்களுக்குக் கொண்டு சேர்த்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்.
சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on
Kalki Strip
Kalki Strip

பட்டிமன்றத்தின் முகவராக விளங்கிய தமிழறிஞர் சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியராக இருந்து, 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் பங்கேற்று, கடினமான இலக்கியக் கருத்துகளை எளிய நகைச்சுவைத் தமிழில் மக்களிடம் கொண்டு சென்றவர். திருக்குறள், சங்க இலக்கியம், கம்பன் ஆகியவற்றை பாமரர்களுக்கான தமிழில் உரை எழுதி, பட்டிமன்றத்தை சமூக சிந்தனை மேடையாக மாற்றிய அவரது மறைவு தமிழுலகை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பட்டிமன்றம் என்பதன் அடையாளமாகவே மக்களிடம் அறியப்பட்டவர் என்றால் அது என்றும் சாலமன் பாப்பையா மட்டுமே. பட்டிமன்ற நடுவராக இருந்து மக்களை மகிழ்வித்து மகிழ்ந்தவர் இவர்.

பட்டி மன்றம் மட்டும் அல்ல தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் ஏன் நடிகராகவும் பல தளங்களில் தனி முத்திரை பதித்தவர். 90 வயதான அவர் மதுரையில் இன்று மறைந்தார் என்ற செய்தி அவரது ரசிகர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டின் மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை திருமங்கலம் அருகே சாத்தங்குடி இவரது பிறந்த ஊர்.

(22 பிப்ரவரி 1936) அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை மற்றும் தியாகராஜர் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டம் பெற்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்தவர்.

தமிழின் மீதான ஆர்வத்தில் காரைக்குடி கம்பன் கழகம் ஏற்பாடு செய்த பட்டிமன்றங்களில் அவர் 1961 முதல் பங்கேற்றதாக குறிப்புகள் கூறுகிறது. அங்கிருந்தே அவர் பட்டிமன்றப் பேச்சாளராகப் பரவலாக அறிமுகமானதாக தெரிகிறது.

அதே காலகட்டத்தில், புதுக்கோட்டையில் “பாரதி வேதாந்தக் கவிஞனா? புதுமைக் கவிஞனா?” என்ற தலைப்பில் இதில் “புதுமைக் கவிஞனே” என்ற அணியில் அவர் தனது முதல் பொது மேடைப் பேச்சை நிகழ்த்தியதாக மற்றொரு ஆதாரம் குறிப்பிடுகிறது. .

இவரது பேச்சுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே அதன்பிறகு அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகப் பங்கேற்று, பின்னர் நடுவராக உயர்ந்து, பட்டிமன்றத்தின் மிகப் பிரபலமான முகங்களில் ஒருவரானது குறிப்பிடத்தக்கது.

கடினமான இலக்கியக் கருத்துகளையும் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவை, பழமொழி, நாட்டுப்புறச் சொற்கள், வாழ்க்கை அனுபவங்களுடன் விளக்கியது அவரது மிகப்பெரிய பலம்.

இடையிடையே தனது அனுபவங்களை சொல்லி மக்களுக்கு அலுப்பு தட்டாமல் பட்டிமன்றங்களை கொண்டு சென்றதில் அவருக்கு நிகர் அவரே.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொலைக்காட்சி மற்றும் மேடைகளில் பட்டிமன்ற நடுவராக இருந்து, சமூகக் கருத்துகளை எளிய தமிழிலும் நகைச்சுவையுடனும் மக்களிடம் கொண்டு சென்றார். சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் புரியாத சொற்களில் பண்டிதர் மட்டுமே அறிந்த தமிழ் இலக்கியத்தைப் பட்டிமன்றம் வாயிலாக சாதாரண மக்களின் வீடு வரை கொண்டு சென்றவர்களில் சாலமன் பாப்பையாவுக்கு முக்கிய இடம் உண்டு.

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா

பட்டிமன்றத்தை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இல்லாமல் தமிழ், சமூக சிந்தனை, நகைச்சுவை ஆகியவற்றை இணைக்கும் உணர்வுபூர்வமான மக்கள் மேடையாக மாற்றியதே அவரது மிகப்பெரிய சாதனையாக தமிழின் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.

பட்டிமன்ற பேச்சை அவர் எந்தளவுக்கு நேசித்தார் என்பதற்கு இந்த சுவாரஸ்யமான சம்பவம் உதாரணம். அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது, அதை தனக்கான விருதாக மட்டும் பார்க்காமல் “தமிழக பட்டிமன்றங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” என்று குறிப்பிட்டதாக வந்த தகவல்கள் இவரது பெருமை.

பட்டிமன்றத்தை ரசித்த பொதுமக்களுக்கும், தன்னுடன் பயணித்த பேச்சாளர்களுக்கும் இந்த அங்கீகாரம் சென்றடைய வேண்டும் என்ற அவரது எண்ணம் மற்றும் கர்வமற்ற எளிமை அவருக்கு மேலும் சிறப்பு.

சாலமன் பாப்பையா பட்டிமன்றப் பேச்சாளராக மட்டுமல்லாமல், திருக்குறள், சங்க இலக்கியம், கம்பன், நவீன இலக்கியம் ஆகியவற்றை எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்ற எழுத்தாளரும் தமிழாய்வாளரும் ஆவார். அவரது முக்கிய நூல்களைப் பார்த்தால், “பண்டிதர்களுக்கான தமிழை மக்களுக்கான தமிழாக மாற்ற வேண்டும்” என்ற அவரது அணுகுமுறை தெளிவாக புரியும். அதனால்தான் பாமரர்களுக்கான தமிழாகவே அவர் சிறப்பு பெற்றார்.

தமிழ் மீதான அதீத ஆர்வத்தால் இவர் பேராசிரியர் பணி மற்றும் பட்டிமன்றங்களின் பரபரப்பிலும் இலக்கிய தாகத்துடன் திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.

குறிப்பாக திருக்குறள் உரை:

இது அவரது முக்கியமான இலக்கியப் பணிகளில் ஒன்று. 1330 குறள்களுக்கும். பழந்தமிழ் கருத்துகளை இன்றைய வாழ்க்கைச் சூழலோடு தொடர்புபடுத்தி எளிமையாக விளக்குவது அவரது உரையின் சிறப்பு. திருக்குறளை வெறும் மனப்பாட நூலாக அல்லாமல், நடைமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக புரிந்துகொள்ள உதவும் வகையில் விளக்கியுள்ளார்.

சாலமன் பாப்பையா கம்பனைப் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில்:

கம்பனில் உலகியல், இவர்கள் நோக்கில் கம்பன், கம்பன் அமுதில் சில துளிகள், கம்ப வனத்தில் ஓர் உலா, கம்பனைத் தேடி... ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேலும் புறநானூற்றுப் பாடல்களை புதிய வரிசையில் அமைத்து, அவற்றின் கருத்துகளை விளக்கிய முக்கியமான ஆய்வு நூல். பழந்தமிழர்களின் அரசியல், வீரம், கொடை, அறம், மனிதநேயம் போன்ற பல்வேறு வாழ்க்கைக் கூறுகளை வாசகர்கள் எளிதில் அணுகும் வகையில் எடுத்துச் செல்கிறது.

அகநானூற்றுக்கு சாலமன் பாப்பையா எழுதிய உரை மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது சங்க இலக்கியத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
"கல்கி தனக்கென்று ஏற்படுத்திய ஞாபகச் சின்னம்..." - ஐயா காமராஜர் சொன்ன அந்த நெகிழ்ச்சியான விஷயம்!
சாலமன் பாப்பையா

அவரது பல்வேறு இலக்கிய மற்றும் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான உரைமலர்கள் எனும் நூல் பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன

மேலும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள், சிந்தனைகள் மற்றும் சமூகப் பார்வையை ஆராயும் திறனாய்வு நூலான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை,

ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து தமிழ் அறிஞராகவும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவராகவும் அவர் வளர்ந்த பயணத்தைப் பதிவு செய்து, பட்டிமன்றம் எவ்வாறு காலத்துக்கு ஏற்ப வளர்ந்தது என்பதையும் அவர் அனுபவங்களுடன் பதிவு செய்துள்ள பட்டிமன்றமும் பாப்பையாவும் எனும் தன்வரலாற்று நூல் இப்படி இவரது நூல்களின் பட்டியல் நீளம்.

சாலமன் பாப்பையாவின் எழுத்துப் பணி ஆழமான இலக்கியம், எளிய மொழி, வாழ்க்கையோடு தொடர்பு என்று பிணைக்கும். சங்க இலக்கியத்தில் பொதிந்துள்ள புதிய செய்திகளை ஒருமைப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியவராகவே அறியப்படுகிறார்.

இவர் பல பாராட்டுகளையும் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். அவற்றில் தமிழக அரசின் கலைமாமணி (2000) மற்றும் இந்திய அரசின் பத்மஸ்ரீ (2021) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவர் பட்டிமன்றம் மட்டுமின்றி சினிமாவிலும் தனது தடத்தைப் பதித்துள்ளார். சிறிய அளவில் என்றாலும் இன்றளவும் மக்கள் ரசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர். சாலமன் பாப்பையா இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன், பாய்ஸ் மற்றும் சிவாஜி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக பாய்ஸ் மற்றும் சிவாஜி போன்ற படங்களில் அவரது தோற்றம் குறிப்பிடத்தக்கது. சிறு பாத்திரம் என்றாலும் அவரது இயல்பான பேச்சு, நகைச்சுவை உணர்வு, மக்கள் மொழி மற்றும் பட்டிமன்றப் புகழ் ஆகியவை திரையிலும் அவரை எளிதில் அடையாளம் காணக்கூடியவராக மாற்றின.

இதையும் படியுங்கள்:
தேசமும் தமிழுமே தெய்வம் – பாரதியின் மூன்றடுக்கு வழிபாடு!
சாலமன் பாப்பையா

குறிப்பாக சிவாஜி திரைப்படத்தில் அவரது தோற்றம், பட்டிமன்ற நடுவராக மக்கள் மனதில் ஏற்கெனவே இருந்த அவரது பிரபலத்தையும் பயன்படுத்திய ஒன்று. அவர் திரையில் தோன்றும்போது, நடிகர் என்ற உணர்வை விட சாலமன் பாப்பையா என்ற பேச்சாளரையே மக்கள் பார்த்து ரசித்தனர் என்பதே அவரது சினிமா பங்களிப்பின் தனிச்சிறப்பு எனலாம்.

சாலமன் பாப்பையா கம்பனிடம் இருந்து இலக்கியத்தை மக்களிடம் கொண்டு வந்தார். எப்படித் தெரியுமா? கம்பனின் கடினமான செய்யுள் நடையை மட்டும் விளக்காமல், “கம்பன் சொல்வது இன்றைய மனித வாழ்க்கைக்கு என்ன பொருள்?” என்ற கோணத்திலும் அவர் அணுகினார். இதுவே அவரது பட்டிமன்றப் பேச்சு பாணியுடனும் ஒத்துப்போகிறது.

தீபாவளி பொங்கல் போன்ற சிறப்பு தினங்களை தனது நகைச்சுவை பேச்சால் சந்தோஷ தினங்கள் ஆக்கி, பட்டிமன்றம் மூலம் பல சமூகக்கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்த சாலமன் பாப்பையா வின் புகழ் அவரது இலக்கிய நூல்கள் மற்றும் பட்டிமன்றம் இருக்கும் வரை நிலைக்கும்.

வாசகர்கள் தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும், பொங்கல்-தீபாவளி பட்டிமன்றங்களின் வழி தங்களின் இல்லங்களைச் சிரிப்பால் நிரப்பிய ஒரு மாபெரும் தமிழறிஞரின் வாழ்வையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com