

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் திருவிழா (election campaign), நமது தமிழ்நாட்டிலும் களைகட்டியுள்ளது! பிற மாநிலங்களான கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகியவற்றில் வாக்களித்தோர் சதவீதம் உயர்ந்திருப்பது, நமது ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. அவற்றையும் மிஞ்சும் வண்ணம், நமது பழம்பெரும் தமிழ்நாடு 100 சதவீத வாக்களிப்பை எட்ட வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, நாமினேஷன்அளிக்கும்போது, ஆட்சி புரிந்தவர்களில் இருந்து புதிதாகப் போட்டியிடுவோர் வரை, ஐந்து பேர் அடங்கிய குழுவினர் நின்று கொண்டு மனுக்களை அளிக்கின்றனர். ஆனால், அதனைப் பெறுபவர் உட்கார்ந்து கொண்டு வாங்குவது நமது பண்பாட்டிற்கு உகந்ததாகத் தெரியவில்லை. நான் தேடிப் பார்த்த வரை, "உட்கார்ந்து கொண்டுதான் வாங்க வேண்டும்" என்ற குறிப்பு எங்கும் இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.
ஒன்றைக் கொடுக்கும்போதும் வாங்கும்போதும், கைகளைக் குலுக்கும்போதும் ஈடுபடும் இருவரும் நிற்றலே முறையென்று நமது பாரம்பரியம் விளம்புகின்றது. மக்களாட்சியின் முதுகெலும்பே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர் மதிக்கப்படுவதுதான்! ஆரம்பத்திலேயே அந்த மதிப்புக்குச் சமாதி கட்டுவது எவ்வகையில் நியாயம்? ஒருவேளை நமது அரசியல் சாசனம், வாங்குபவர் அமர்ந்துதான் வாங்க வேண்டுமென்று சுட்டிக் காட்டியுள்ளதா? விபரம் அறிந்தோர் விளக்கினால் நாமும் விளங்கிக் கொள்ளலாம்.
இவ்வருடக் கோடை, ஆரம்பம் முதலே அனலைக் கக்குவதாக உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியிற் செல்வதைத் தவிர்க்குமாறும், குறிப்பாக வயதானவர்கள் இந்த நேரத்தில் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுரைகள் வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில், இதுவரை எப்பொழுதும் இல்லாத மாற்றமாக, நமது இருசக்கர வாகனங்கள் அனைத்திலுமே எஞ்சினை ஆன் (On) செய்ததும் முகப்பு விளக்குகள் பளிச்சென்று எரிகின்றன.
இரவு, பகல் என்ற பேதமெல்லாம் அவை பார்ப்பதில்லை. கண்களைக் கூசச்செய்யும் வெளிச்சத்துடன் அவை ஒளிர்ந்து, சுற்றுச் சூழலை மேலும் வெப்பமாக்குகின்றன. குளிர்ப் பிரதேச நாடுகளில் பகலிலும் முகப்பு விளக்குகள் பயன்படலாம்; நமக்கு அவை தேவையே இல்லையே! தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கு ஒரு தனி சுவிட்ச் (Switch) வைக்க எதற்காக யோசிக்கின்றன என்று தெரியவில்லை. அரசும் இதில் தலையிடுவதாகத் தெரியவில்லை. நாட்டுச் சுற்றுச் சூழலில் அக்கறை கொண்ட மெக்கானிக்குகளாவது, இதற்கு விடை காணும் விதமாகப் புதிய சுவிட்ச்களைப் பொருத்த முன்வர வேண்டும்.
தாம்பரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் இடையே பல கோடி ரூபாய்களைச் செலவு செய்து, கூடுவாஞ்சேரி போன்ற நகரங்களில் இருந்த சர்வீஸ் சாலைகளையும் அகற்றிச் சாலை விரிவாக்கம் செய்தார்கள். ஆனாலும், ட்ராக் சிஸ்டம் (Track System) கொண்டு வந்து, "இந்தந்தப் பாதைகளில் இவ்வகை வாகனங்கள்தான் செல்ல வேண்டும்" என்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருந்தால் வேகம் அதிகரித்திருக்கும்; வாகன ஓட்டிகளும் பயனடைந்திருப்பார்கள்.
சாலைகள் போட வேண்டிய இடங்களில் கோடுகளைப் போடுவதும், சாலைகள் அமைந்த இடங்களில் முறையான கோடுகளைப் போடாமல் விடுவதும் நம் ஊர் வழக்கமே. பல இடங்களில் 'ரைட் டர்ன்' (Right Turn) செய்யும் பகுதிகளில் கோடுகள் இல்லாத காரணத்தினாலேயே போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அந்த இடங்களில் வலதுபுறம் திரும்பும் அம்புக்குறிகள் இருந்தாலே போக்குவரத்து ஓரளவு சீராகிவிடும். உரியவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.
அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள், ஒவ்வோர் ஆண்டும் தாங்கள் பிறந்த மாதத்தில், தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை (Life Certificate) ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருந்தாலும் இதனைச் சமர்ப்பித்துவிட வேண்டும்.
இம்முறை ‘களஞ்சியம்’ ஆப் மூலம் இதனை எளிதாகச் செய்யலாம் என்று ஓய்வூதிய அலுவலகத் தலைவரும் உதவியாளரும் நேரில் கேட்டபோது அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள். நானும் அதனை நம்பி, மொபைலில் பதிவிறக்கம் செய்து இயக்கப் பார்த்தேன். விபரங்கள் சரியாகக் காட்டினாலும், தரவேற்றம் செய்ய முயலும்போது 'சர்வர் பழுது' (Server Error) என்றே வருகிறது. ஆனால், 'Rail One' போன்ற மற்ற செயலிகள் நன்றாகவே வேலை செய்கின்றன. உரியவர்கள் இப் பழுதை நீக்க முயன்றால், என்போன்ற முதியவர்கள் பலர் பயனடையக் கூடும்.
மாற்றக் கூடிய சில நல்லவற்றை மாற்றினால் அனைவருக்கும் உயர் பலன் கிடைக்குமே என்ற உயரிய நோக்கமே இக்கட்டுரையின் அடிப்படை. மற்றபடி யாரையும் குறை கூற வேண்டுமென்பது நமது எண்ணமல்ல. செய்யும் எதனையும் திருந்தச் செய்தால் எப்பொழுதுமே சிறப்பு கூடும்!