

எம்.ஜி.ஆருக்கு என்ன தெரியும்..? எல்லாம் தெரியும்... பசியின் கொடுமை தெரியும்.. ஏழைகளின் கஷ்டம் தெரியும்..
டைரக்ஷன், கேமிரா ஆங்கிள், இசை, நடனம், தயாரிப்பாளரின் கஷ்டம், சக நடிகர்களுக்கு சம்பளம் வந்துதா எல்லாம் தெரியும்.
"இளமையில் வறுமை என்பது கொடிது கொடிது" என்பார் ஔவை (கொடிது கொடிது யாதெனக் கேட்பின்) பாடலில். அதை அனுபவித்தவர் அவர்.
இளமைக்காலத்தில் எட்டு வயது வாக்கில் அவர் குடந்தையில் சாரங்கபாணி கீழத்தெருவில் அம்மா, அக்கா, அண்ணனுடன் ஒரு வீட்டில் ஒண்டுக் குடித்தன ஜாகை. அம்மா வீட்டு வேலைகள் செய்து கஷ்ட ஜீவனம்.
ஒரு நாள் அம்மா அரிசி வாங்க ஒரு ரூபாய் தந்து ஐந்து படி வாங்கி வரச்சொன்னார். அப்போது ஒரு ரூபாய்க்கு ஐந்து படி அரிசி! 1925 காலகட்டம். இராமசாமி கோவில் அருகில் அரிசி கடை... ஐந்து படி அளந்து வாங்கியதும் ஒரு ரூபாய் தந்தார்.
கடைக்காரர் சிறுவனிடம் "என்ன தம்பி.. படி நாலணா... விலை ஏறிடுச்சி... இன்னும் நாலணா கொடு. மொத்தம் ஒண்ணே கால் ரூபா."
"அம்மா ஒரு ரூபா தான் தந்தாங்க."
"சரி அப்ப இந்தப் பக்கம் வந்தால் நாலணா மீதி காசு கொடுத்திட்டுப் போ."
"வேணாங்க ஐயா... நாலுபடி.... உள்ள காசுக்கு கொடுங்க.", எனத் திருப்பித் தந்து நாலு படி வாங்கிச் சென்றார் சிறுவன் எம் ஜி ஆர். நேர்மை...
காலம் உருண்டது. இப்போது அவர் முதலமைச்சர்.
குடந்தை ராமசாமி கோவில் அருகில் பொதுக்கூட்டம். அந்த அரிசிக் கடைக்காரர் எம்.ஜி.ஆர் கட்சியில் ஒரு வார்டு உறுப்பினர். பழசு எல்லாம் மறந்து விட்டது அவருக்கு.
கீழே உட்கார்ந்திருந்த அவரை மேடைக்கு வரவழைத்து சால்வை போர்த்தினார் எம்.ஜி.ஆர். அரிசிக் கடைக்காரருக்கு ஒரே வியப்பு. எதற்கு தலைவர் நம்மை மேடைக்கு அழைத்து மரியாதை செய்கிறார். பின் எம். ஜி. ஆர் மைக்கில் "இந்த தோழர் யார் தெரியுமா", என தன் சிறு வயதில் நடந்த அரிசி வாங்கின கதையைச் சொன்னார். ஒரே கர கோஷம்.
நெகிழ்ந்து போனார் அந்த முதுமை அடைந்த பழைய அரிசி கடைக்காரர்.
எம். ஜி. ஆரைப் பார்ப்பது அக்காலத்தில் ஒரு திருவிழா போல.
1977 திருவல்லிக் கேணி, மயிலை எல்லை... டாக்டர் நடேசன் சாலையில் ஒரு வீட்டில் மாடியில் ஜாகை இருந்தோம். ஓனர் மகள் ஓடி வந்து என் மனைவியிடம் "அக்கா.. அக்கா.. எம்.ஜி.ஆர் ரோடில் நடந்து வர்றார்."
என் மகன் சிறு குழந்தை. அவனையும் தூக்கியபடி மூன்றே தாவலில் கிச்சன் ஹால் தாண்டி பால்கனியில் நின்று எம்.ஜி.ஆரைப் பார்த்தாள் என் மனைவி. அப்படி கூட ஒருத்தரால் தாவ முடியுமா என இன்றும் வியக்கிறேன்.
அது இயக்குனர் ஏ. பி நாகராஜன் அவர்களின் இறுதி ஊர்வலம். எம். ஜி. ஆர் அமரர் ஊர்தி முன்னே நடந்து வந்து கொண்டிருந்தார். எட்வர்டு எலியட்ஸ் சாலையில் (டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை தற்போது) கடல் போல் மக்கள் கூட்டமில்லை. ஆரவார, கர கோஷ வாழ்த்தொலி ஓசை இல்லை. போலீசும் இல்லை. அது ஒரு துயர ஊர்வல நிகழ்வு. அஞ்சலிக்காக நடந்தே வந்தார் கிருஷ்ணாம் பேட்டை வரை.
1981 வாக்கில் எம்.ஜி.ஆர் குடந்தை விஜயம். காரில் வந்தார். நாகேஸ்வரர் கோவில் திருமஞ்சன வீதியில் எங்கள் அலுவலகம். அவர் வரும் செய்தி அறிந்து ஊழியர்கள் வெளியே எல்லோரும் வந்து நின்றனர் வேடிக்கை பார்க்க. கார் நெருங்கியது.. முன் சீட்டில் டிரைவர் அருகில் அமர்ந்து கை கூப்பி வந்தார் எம்.ஜி.ஆர்.
எங்கள் ஆபீஸில் சேட்டை பிடித்த ஒரு டிரைவர் இருந்தார். அவர் உடனே, குதித்துக் கும்மாளமிட்டு, "ஹை..! எம்.ஜி.ஆர்... ஹை..! எம். ஜி.ஆர்.", எனச் சுற்றிச் சுற்றிக் குனிந்து நிமிர்ந்து ஆடினார்.
சுற்றி சுற்றி வட்டம் போட்டு கை கொட்டிக் குதித்து ஆடினார். காணாததைக் கண்ட மாதிரி. ஆனால் எம். ஜி. ஆரைப் பார்க்காமல். எம். ஜி. ஆர் காரை ஸ்லோ பண்ணிச்சிரித்தபடி அவரைப் பார்த்து கை அசைத்து விட்டுப் போனார்.
எல்லோரும் எம். ஜி. ஆரைப் பார்த்துத்தான் கை அசைப்பார்கள். எம். ஜி. ஆர் ஒருவரைப் பார்த்து கை அசைத்தது இப்போது தான் பார்க்கிறேன். பெண் ஊழியர்கள் வாய் பொத்தி சிரித்த படி டிரைவர் ஆசாமியைப் பார்த்து "ரொம்ப சேட்டைதான்" என்றனர்.
ஒரு சின்ன சேதி சொல்றேன். மற்ற செய்திகளை எல்லோரும் படிக்கலாம். படிக்காது தள்ளலாம். ஆனால், எம். ஜி. ஆர் மறைந்து 39 வருடமாகியும் 'எம். ஜி. ஆர் செய்தி', என்றால் கண்டிப்பாய் படிக்கப்படும். சோதித்துத் தான் பாருங்களேன். அது தான் எம்.ஜி. ஆர்.
"நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும்... மக்களுக்குப் படிப்பினை தந்தாகணும்..." என்ற கொள்கை உடையவர்.