

ஸ்ரீவில்லிபுத்தூரில் 1875ல் கலெக்டர் ஜே.பி. பென்னிங்டன் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இந்த தனியார் பொது நூலகம், தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான நூலகமாக திகழ்கிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில நூல்கள், அரசிதழ்கள், போட்டித் தேர்வு புத்தகங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தனி வாசிப்பு இடங்கள், 150 கடைகளைக் கொண்ட சந்தை மூலம் நிதி ஆதரவு என பல சிறப்புகள் கொண்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தமிழக அரசின் முத்திரையாக இடம் பெற்றுள்ள ஆண்டாள் கோயில் கோபுரமும், பால்கோவாவும்தான். ஆனால் அதையும் தாண்டி புகழ்பெற்ற பென்னிங்டன் நூலகம் இங்கே இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. தமிழ்நாட்டின் பழைமையான நூலகத்தில் ஒன்றான இது, 1875-ம் ஆண்டு அன்றைய மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் என்பவரால் தொடங்கப்பட்டது. இன்று பென்னிங்டன் என்ற அவரது பெயராலேயே இந்த நூலகம் அழைக்கப்பட்டு வருகிறது.
வாசிப்புத் திறன் குறைந்து வருகிறது என நாம் ஆதங்கப்பட்டாலும் கூட, 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நூலகத்துக்குத் தினந்தோறும் சராசரியாக 400 வாசகர்கள் வருகை தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 3500 க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்த நூலகம்தான் தமிழ்நாட்டில் தனியார் நூலகங்களிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமான நூல்களை வைத்திருக்கும் நூலகம்.
1860 ம் ஆண்டு இந்தியாவில் சங்கப் பதிவுச் சட்டம் அமலானது. இது சங்கங்களை அமைத்து உள்ளூர் நிர்வாகத்தில் பங்கேற்க மக்களுக்கு உரிமையை வழங்கியது. 1875 ஆம் ஆண்டில், பொதுநல ஆர்வமுள்ள குடிமக்களான ஏ. ராமச்சந்திர ராவ், டி. ராமசாமி ஐயர், டி. கிருஷ்ணா ராவ், முத்து ஐயங்கார், டி. சரவண முத்து பிள்ளை மற்றும் பி. முத்துசாமி பிள்ளை ஆகியோர் திருநெல்வேலி கலெக்டர் ஜே.பி. பென்னிங்டன் (1880-1883) ஆதரவுடன் ஒரு நூலகத்தை அமைக்க இந்த சட்டத்தை பயன்படுத்தினர்.
அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பென்னிங்டனை அணுகினர். பென்னிங்டன் பேரார்வம் கொண்டு நூலகம் கட்டுவதற்கும் நூல்கள் சேகரிப்பதற்கும் பேருதவி புரிந்துள்ளார்.
அது மட்டுமல்லாது நூலகம் முறையாக செயல்படுவதற்கு நிலம் வாங்கி நிதி சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக, பென்னிங்டன் நூலகத்திற்கு அருகிலுள்ள நிலத்தையும் கையகப்படுத்தி அதை ஒரு சந்தை வளாகமாக மேம்படுத்தினார். இன்று, ராஜாஜி சாலையின் இருபுறமும் 150 கடைகளைக் கொண்ட பென்னிங்டன் சந்தை, நூலகத்தை ஆதரிக்கிறது.
சுமார், 1,344 சதுர அடியில், தரை மற்றும் முதல் தளத்தை கொண்டுள்ளது, இந்நுாலகம். இங்கு, ஆண்கள், பெண்கள், மாணவர்கள், சிறுவர்களுக்கு என்று தனித்தனியாக படிக்கும் இடங்கள் உள்ளன. எந்த ஊரிலும் இல்லாத சிறப்பாக, இந்த நுாலகத்திற்கு பெருமளவில் பெண்கள் வருகை புரிகின்றனர். இங்குள்ள ஊழியர்களில் பெருமளவு பெண்கள் தான்.
அதேபோல், சிறுவர்கள் பகுதியில், அவர்கள் கைக்கு எட்டும் உயரத்திற்கு புத்தக அலமாரி செய்யப்பட்டு, புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளில் தமிழில், 35 ஆயிரத்து 936 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 30 ஆயிரத்து 988 புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.
அரசு ஆவணங்கள் மற்றும் பொக்கிஷம் போன்ற பழமையான புத்தகங்களும் இங்கு இடம்பிடித்துள்ளன. நவீன யுகத்திற்கு ஏற்றார் போல, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன. புதிய புத்தகங்களை வாங்க ஆண்டுதோறும் சுமார் ₹2 லட்சம் ஒதுக்கப்படுகிறது.
தமிழகத்தின் பழமையான நூலகங்களில் சரஸ்வதி மஹால் நூலகம், 16 ஆம் நூற்றாண்டு நிறுவப்பட்டது. இதற்கு அடுத்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் பழமையான புத்தகங்கள் இருக்கின்றன. 1952 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட அரசிதழ்கள் இங்கு உள்ளது. இது 1896 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. பென்னிங்டன் பொது நூலகம் மாநிலத்தின் பழமையான 'தனியார்' பொது நூலகமாகும். தமிழகத்தின் பழமையான நூலகங்களில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது..
இந்த நூலகத்தைப் பார்வையிட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முக்கியமானவர். ராமன் விளைவை தந்த இணைக் கண்டுபிடிப்பாளரான கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணனின் வளர்ச்சியில் இந்த நூலகம் முக்கிய பங்காற்றியுள்ளது. அபூர்வமான தமிழ் நூல்கள் பல இங்கே உள்ளன.
பென்னிங்டன் நூலகத்தில் ரசாயன பூச்சி கொல்லிகளுக்குப் பதிலாக வாசனைத்திரவியங்கள் அடங்கிய பொடி ஒன்றைத் தயாரிக்கிறார்கள். பச்சை கற்பூரம், மிளகு, வசம்பு, கருஞ்சீரகம், ஓமம், லவங்கப்பட்டை, கிராம்பு உரிய அளவில் கலந்து பொடி தயாரித்துத் துணியில் பொட்டலம் கட்டி நூல்களுக்கு மத்தியில் வைக்கிறார்கள். இதனால் புத்தகங்களில் பூச்சிகள் வந்து தின்று அழிப்பதில்லை.
நூலகத்துக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 17 நாளிதழ்களும், மாத மற்றும் வார இதழ்கள் தமிழில் மற்றும் ஆங்கிலத்திலும் , ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்புடைய இதழ்களும் வருகின்றன. நாளிதழ்களை ஆர்வமாக படிப்பவர்கள் தினமும் படிக்க வசதியாக அந்த பகுதி மட்டும் விடுமுறை இல்லாமல் இயங்கி வருகிறது. இது வேறு எங்கும் இல்லாதது. நூலகத்தைப் பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த நூலக குழு 1 முதல் 5 ம் வகுப்பு வரை பென்னிங்டன் பொதுப் பள்ளியையும் நடத்துகிறது.
இந்தத் தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய நூலகங்களின் வரலாறு, அவற்றைப் பாதுகாக்கும் பாரம்பரிய முறைகள் மற்றும் சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.