தொலைந்துபோன தாய்ப்பத்திரம்: மாற்று ஆவணம் பெறுவதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள்!

நிலத்தின் மூலப்பத்திரம் (தாய்ப்பத்திரம்) கைநழுவிப் போனாலும் சட்டப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட நகலைப் பெறுவது எப்படி?
தாய்ப்பத்திரம் | property document recovery
தாய்ப்பத்திரம் | property document recoveryAI Image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on
Kalki strip
Kalki strip

சொத்து தாய்ப்பத்திரம் காணாமல் போனால், சட்டப்படி மாற்று ஆவணம் பெற பல கட்டங்கள் உள்ளன. காவல் நிலைய புகார், CSR, Non-Traceable Certificate, இரு மொழி செய்தித்தாள்களில் பொது அறிவிப்பு, நோட்டரி உறுதிமொழி ஆகியவை முதன்மை. பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் Certified Copy, சமீபத்திய வில்லங்கச் சான்றிதழ் எடுத்து, இத்தொகுப்பை அசல் பத்திரத்துக்கு நிகரான சட்ட ஆதாரமாக பயன்படுத்தலாம்.

ஒரு சொத்தின் உரிமைக்கு மிக முக்கியமான ஆதாரமாக விளங்குவது அதன் மூலப்பத்திரம் அல்லது தாய்ப்பத்திரம் ஆகும். ஒரு சொத்தை விற்பனை செய்யவோ, பாகப்பிரிவினை செய்யவோ அல்லது வங்கியில் கடன் பெறவோ இந்த அசல் ஆவணம் மிகவும் அத்தியாவசியமானது. இந்தத் தாய்ப்பத்திரம் தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ நில உரிமையாளர்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகிறார்கள். இருப்பினும், உரிய சட்டப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றி அரசு அமைப்புகளிடம் விண்ணப்பித்தால், அசல் பத்திரத்திற்கு இணையான சட்டப் பாதுகாப்பு கொண்ட சான்றளிக்கப்பட்ட நகலை எளிதாகப் பெற முடியும். அதற்கான படிப்படியான நடைமுறைகளை காண்போம்.

1. காவல் நிலையத்தில் புகார் அளித்தல்: பத்திரம் தொலைந்தது தெரியவந்தவுடன் முதற்கட்டமாக, சொத்து அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட அல்லது பத்திரம் தொலைந்துபோன இடத்திற்குரிய காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். புகாரில் குறிப்பிட வேண்டியவை தொலைந்துபோன பத்திரத்தின் எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு, சார்பதிவாளர் அலுவலகத்தின் பெயர், சொத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் சொத்தின் விவரங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

CSR சான்றிதழ்: புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டதற்கான ஆதாரமாக (Community Service Register) சான்றிதழை வழங்குவார்கள்.

2. காவல் துறையின் ‘கண்டறிய முடியவில்லை’ சான்றிதழ்: காவல் துறையினர் தங்கள் விசாரணையின் மூலம் பத்திரத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. எனில், அவர்கள் “கண்டறிய முடியவில்லை” (Non-Traceable Certificate) என்ற சான்றிதழை வழங்குவார்கள்.

3. செய்தித்தாளில் பொது அறிவிப்பு வெளியிடுதல்: அடுத்து, முன்னணி நாளிதழ்கள் இரண்டில் (ஒன்று தமிழ் நாளிதழ், ஒன்று ஆங்கில நாளிதழ்) பத்திரம் தொலைந்தது குறித்துப் பொது அறிவிப்பு (Public Notice) வெளியிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
புதிய மளிகைக் கடை தொடங்கப் போறீங்களா? இந்த 5 லைசென்ஸ் ரொம்ப முக்கியம்!
தாய்ப்பத்திரம் | property document recovery

விளம்பரத்தின் நோக்கம்: “குறிப்பிட்ட சொத்தின் அசல் பத்திரம் தொலைந்துவிட்டது; இது யாருக்காவது கிடைத்தால் ஒப்படைக்கவும், அல்லது இதன் மீது யாருக்கேனும் நிதிச் சார்ந்த உரிமைகளோ, ஆட்சேபனைகளோ இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்கவும்” எனப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதே இதன் நோக்கமாகும்.

4. நோட்டரி வழக்கறிஞரின் உறுதிமொழிப் பத்திரம் (Affidavit): செய்தித்தாள் விளம்பரம் வெளியாகி குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் எந்தவித ஆட்சேபனையும் வரவில்லை என்றால், ஒரு நோட்டரி வழக்கறிஞர் (Notary Public) முன்னிலையில் உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) தயார் செய்ய வேண்டும். அதில், “இந்தச் சொத்தின் பத்திரம் உண்மையிலேயே தொலைந்துவிட்டது; இதை வேறு எங்கும் அடமானம் வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ இல்லை” என்று சொத்து உரிமையாளர் முறைப்படி உறுதி அளிக்க வேண்டும்.

தாய்ப்பத்திரம் | property document recovery
தாய்ப்பத்திரம் | property document recoveryAI Image

5. சார்பதிவாளர் அலுவலகத்தில் சான்றளிக்கப்பட்ட நகல் (Certified Copy) பெறுதல்: மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்ட பிறகு, பத்திரம் பதிவு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று ‘சான்றளிக்கப்பட்ட நகல்’ (Certified Copy – CC) பெற விண்ணப்பிக்க வேண்டும். (இதனை TNreginet இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்).

இதையும் படியுங்கள்:
உங்கள் ஃபில்டர் காஃபி உண்மையிலேயே சுத்தமானதா? 1 நிமிடத்தில் கண்டுபிடியுங்கள்!
தாய்ப்பத்திரம் | property document recovery

இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

  • காவல் துறை வழங்கிய CSR மற்றும் Non-Traceable Certificate,

  • செய்தித்தாளில் வெளியான விளம்பரத்தின் அசல் நகல்கள்,

  • நோட்டரி உறுதிமொழிப் பத்திரம்,

  • சொத்து உரிமையாளரின் அடையாளச் சான்று (Aadhaar / Smart Card).

சார்பதிவாளர் இந்த ஆவணங்களைச் சரிபார்த்து, தங்கள் அலுவலகப் பதிவேட்டில் (பங்காவில்) இருக்கும் நகலைச் சான்றளித்து (Certified Copy) வழங்குவார்.

6. வில்லங்கச் சான்றிதழ் எடுத்தல்: இறுதிச் செயல்பாடாக, அந்தச் சொத்திற்குச் சமீபத்திய தேதியிட்ட வில்லங்கச் சான்றிதழ் (EC) எடுக்க வேண்டும். பத்திரம் தொலைந்த கால இடைவெளியில் அந்தச்சொத்தின் மீது வேறு எந்த முறையற்ற பதிவுகளோ அல்லது வில்லங்கங்களோ ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த இது உதவும்.

இதையும் படியுங்கள்:
குடல்வால் அழற்சி: திடீர் வயிற்று வலிக்கு இதுதான் காரணமா? தப்புவிக்க எளிய வழிகள்!
தாய்ப்பத்திரம் | property document recovery

அசல் தாய்ப்பத்திரம் தொலைந்துவிட்டாலும், இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து வைத்துக்கொண்டால், அது அசல் பத்திரத்திற்கு நிகரான சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மையைப் பெறும். பிற்காலத்தில் சொத்தை விற்கவோ அல்லது வங்கியில் கடன் பெறவோ இந்த ஆவணத் தொகுப்பே போதுமானதாகும்.

சொத்தின் அசல் ஆவணம் கைநழுவிப் போன அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, எவ்வித சட்டச் சிக்கல்களும் இல்லாமல் உங்களது சொத்திற்கான முறையான சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற்று, எதிர்காலப் பண பரிவர்த்தனைகளையும் வங்கிக் கடன்களையும் முழுமையான மன நிம்மதியுடன் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்லலாம்.

logo
Kalki Online
kalkionline.com