சிறுகதை; மூணாம் நம்பர் சைக்கிள்!

Short Story in tamil
Short Story
Published on

-சிறுகதை

'வரட்டும் இந்தப் பயல்! வேலையை விட்டு நின்னுக்கடான்னு கறாராய் சொல்லிட வேண்டியதுதான்.'

புளிச்சென்று எச்சிலைத் துப்பினேன்.

''அண்ணே, காத்தடிக்கணும்."

சிறுவன் சைக்கிளுடன் வந்தான். புது சைக்கிள். பளபளத்தது.

"ரெண்டு வீலுக்குமா?"

தலையசைத்தான். கைலியை ஏத்திக் கட்டிக்கொண்டேன். பம்ப்புடன் சைக்கிளை நெருங்கினேன்.

"என்ன விலைக்கு வாங்கினே?"

"அப்பாவுக்குத்தான் தெரியும்."

முன்னைப்போல இப்போதெல்லாம் குனிந்து, நிமிர்ந்து காற்றடிக்க முடியவில்லை. தலை 'கிர்' என்கிறது. பிரஷர் என்று டாக்டர் சொன்னார்.

டயரை தட்டிப்பார்த்தேன். 'கிண்'ணென்றது. காற்று போதும்.

''அண்ணே, சைக்கிளை எடுத்துக்கவா?"

பீடியை வாயில் வைத்தபடி வந்தான் ராசு. மளிகைக்கடையில் எடுபிடியாய் இருப்பவன்.

"எங்கே? முதலாளி வீட்டுக்கா? அந்த ஆறாம் நம்பரை எடுத்துக்க.''

ஞாபகமாய் சைக்கிள் நம்பரையும் நேரத்தையும் நோட்டில் குறிக்க வேண்டும். இந்தப் பயல் இருந்திருந்தால் இவ்வளவு சிரமம் இருக்காது. உதவிக்கு என்றுதானே இவனை வேலையில் சேர்த்தேன்? அடிக்கடி லீவு போடுகிறான்.

வரட்டும் பயல்! இந்த வேலையும் போய் கஞ்சிக்கு அலைஞ்சாத்தான் புத்தி வரும்.

"தம்பி, அறுபது பைசா கொடுப்பா."

"எட்டணாதான் இருக்கு. போனவாரம்கூட அம்பதுதானே கொடுத்தேன்?"

எரிச்சலாய் சிறுவனைப் பார்த்தேன்.

இந்தக் காலத்து பசங்களுக்கே வாய் ஜாஸ்தி.

"நேத்திலிருந்து அறுபது பைசா. அப்புறம் பத்து பைசா கொண்டு வந்து கொடு.''

கொடுக்கமாட்டான்! இனி ஒரு மாதம் வேறு கடையில் போய் காற்றடிப்பான்.

தோள்பட்டை வலித்தது, காற்றடித்ததில். 'கம்ப்ரஸர்' வாங்கிப் போடலாம்தான். டூவீலர்களுக்கும் கூட காற்று பிடிக்கலாம். காசு வேண்டுமே!

ராசு, சைக்கிள் எடுத்துப் போனானே!

நோட்டை எடுத்தேன். எத்தனாவது நம்பர்? ஆறு? நேரத்தைக் குறித்தேன்.

முண்டா பனியன், வெயிலின் உக்கிரத்தில் நனைந்து போயிருந்தது.

று நாளாய் சைக்கிள்களைத் துடைக்கவில்லை.

சைக்கிள் கடை வைத்த புதிதில் தினசரி துடைத்து, எண்ணை விட்டு, பளபளக்கும் 'ரிம்'மை எட்டி நின்று ரசிப்பேன். எல்லாம் புது மோகம்.

"அண்ணன் கடை சைக்கிள் குதிரை மாதிரி பறக்கும்."

வாடகை சைக்கிள் ஒன்றுகூட மிஞ்சாது. காலையிலேயே எடுத்துப் போக கூட்டம் வந்துவிடும். இப்போதும் மோசமில்லைதான்.

இந்தப் பயலை ரெண்டு நாளாய் சைக்கிளைத் துடைக்கச் சொன்னால், டிமிக்கி கொடுக்கிறான். தொழிலில் முனைப்பு இல்லை.

இன்று வேலைக்கே வரவில்லை இதுவரை. வரட்டும் படவா!

துணியை எடுத்தேன். கறுப்பாய் கிரீஸ் பட்டு அழுக்காய் இருந்தது.

மூன்றாம் நம்பரைத் துடைக்க ஆரம்பித்தேன். இந்த சைக்கிள்மேல் எப்போதும் எனக்குத் தனி பிரியம். இதில்தான் முதன்முதலாய் பிரேமாவை சினிமாவுக்குக் கூட்டிப் போனேன். எல்லாம் கல்யாணமான புது ஷோக்கு.

இப்போது சைக்கிளும் பழசாகிவிட்டது. இரண்டு குழந்தைகளும் பிறந்து விட்டார்கள்.

ஆனாலும்,  இந்த சைக்கிளை மட்டும் சட்டென யாருக்கும் வாடகைக்குக் கொடுப்பதில்லை. என் தனிப்பட்ட உபயோகத்துக்கு மட்டும்தான் இது.

அந்த மூலைக்கடை மாரிசாமி சைக்கிளை பஞ்சர் பார்க்கணுமே . பத்துமணிக்கு வந்துடுவானே.

துடைத்தவரை போதும் போ!

மாரிசாமியின் பிலிப்ஸ் சைக்கிளின் முன்புற டயரைக் கழட்டினேன்.

டியூபில் காற்றடித்து தண்ணீரில் வைத்துப் பார்த்தேன்.

இதோ குமிழி, குமிழியாய் வருகிறதே. பேனாவால் புள்ளி வைத்தேன்.

எமரித் துண்டால் டியூபின் அந்த இடத்தை சொரசொரப்பாக்கினேன்.

"அண்ணே, வைச்சிடவா?"

ஒன்பதாம் நம்பரை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் ஐயப்பன்.

கடிகாரத்தைப் பார்த்தேன். ஐயையோ ஓடவில்லையே.

இந்த பேட்டரி டைம்பீஸ் என்றாலே இதுதான் கஷ்டம். சாவி கொடுக்கும் டைம்பீஸ் நாம் சொன்னபடி கேட்கும்.

பேட்டரி வாங்கிப்போட வேண்டுமே இதற்கு உடனே? கைக்கடிகாரம் வேறு ரிப்பேராகக் கிடக்கிறது.

என் கோபம் வேலைக்கு வராத அந்தப் பயல் மேல் திரும்பியது.

அவன் இப்போது இருந்திருந்தால் எத்தனை உதவியாயிருக்கும்?

அவனை பஞ்சர் பார்க்கச் சொல்லிவிட்டு மற்ற வேலைகளை நான் கவனிக்கலாம். இப்போது பேட்டரி செல் வாங்கக்கூட வெளியே போக முடியாதே.

"டைம் என்ன ஐயப்பா?''

"ஏண்ணே, கடிகாரம் ஓடலியா? இது ஃபாரின் வாட்ச். சிங்கப்பூரிலிருந்து எங்க மாமா அனுப்பிச்சது" - தன் மணிக்கட்டை காண்பித்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எதிர்பாராததை எதிர்பாருங்க!
Short Story in tamil

'உழைத்து சம்பாதிச்சு வாங்கினமாதிரி பெருமையைப் பார், ஓசிப் பயலுக்கு'

மனசுக்குள் திட்டியபடி, வெளியே சிரித்தேன்.

வெள்ளையும் சொள்ளையுமாய் அலையும் தண்டச்சோற்றுப் பயல். கழுதை வயசாகியும் உருப்படியாய் எந்த வேலைக்கும் போகவில்லை இவன். தினசரி இங்கு வந்து வாடகை சைக்கிள் எடுப்பதால், அவன் என்ன சொன்னாலும் அசட்டுத்தனமாய் சிரிக்க வேண்டியிருக்கிறது.

"ஐயப்பா, கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. செல் வாங்கிட்டு வந்துடறேன்."

மாரிசாமியின் சைக்கிள் கண்ணில்பட்டது. டியூபில் பஞ்சர் ஒட்ட வேண்டுமே? முதலில் பேட்டரி செல். அப்புறம் பஞ்சர் வேலை!

வசர நடையில் தெருமுனை மளிகைக் கடைக்குப் போய்த் திரும்பினேன்.

கடிகாரத்தை பின்புறம் திருப்பி, செல்லைப் போட்டேன். உயிர் வந்துவிட்டது.

"அண்ணே, ஒரு ஆளு வந்து சைக்கிளை எடுத்துட்டுப் போயிருக்கான்."

"யாருடா?"

"கட்டையாய், கருப்பாயிருப்பானே!"

அவனை அறைந்து விடலாம் போலிருந்தது. ஊரில் பாதிப்பேர் கட்டையாய், கருப்பாய்த்தானிருக்கிறான்.

"உங்களைத் தெரியும்னான்."

'திக்'கென்றது. கலிகாலம்! திருட்டுப் பயல்கள் அதிகம் அலைகிறார்களே.

“எந்த சைக்கிளை எடுத்துட்டுப் போனான்?"

"பார்க்கலேண்ணே. அந்த மூலையிலே இருந்ததே. அதைத்தான்."

சைக்கிள் திரும்பி வரும்வரை 'பக், பக்' தான். சைக்கிளே இப்போது யானை விலை விற்கிறதே.

"நான் வந்துடுவேன்னு சொல்லியிருக்கலாம்ல?"

குரலில் எரிச்சல் தானாகவே வந்துவிட்டது.

''தெரிஞ்சவர்னு சொன்னதுனாலேதான்... என் கணக்கு எவ்வளவு?  ஒரு மணி நேரம், ஒரு ரூபாய்தானே!"

அவசரமாய் நகர்ந்துவிட்டான். என் கோபத்தைக் காண்பிக்க இடமில்லாமல் தவித்தேன்.

எல்லாம் அந்த தடிப்பயல் வேலைக்கு வராததால்தான். வேறு புதுப் பையனைப் பிடிக்க வேண்டியதுதான் வேலைக்கு.

மாரிசாமி சைக்கிள் டியூபில் என் கோபத்தைக் காட்டினேன். சொல்யூஷன் தடவி,  டியூபை ஒட்டி, டயரில் நுழைத்து, வேக, வேகமாய் காற்றடித்தேன்.கொஞ்சம் கோபம் குறைந்தது.

முருகா, சைக்கிளைக் கொண்டு வந்து சேர்த்துடப்பா!

வேண்டிக் கொண்டேன். எனது பிரிய மூன்றாம் நம்பரைத்தான் எடுத்துப் போயிருக்கிறான் அவன். யார் அந்த ஆள்?

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!
Short Story in tamil

பானையிலிருந்து நீர் எடுத்துக் குடித்தேன். நாலு சைக்கிள் மட்டுமே கடையில் இருக்கிறது. துடைத்துவிட்டால் என்ன அழுக்குப் போக?

'ரிம்'மைத் துடைக்கும்போது, அருகில் யாரோ வந்து நிற்பது தெரிந்தது.

அவனேதான்! தடிப்பயல்! அரை நாள் மட்டம்! பேசக்கூடாது அவனுடன்

தலையைத் திருப்பாமல் காரியத்திலேயே கண்ணாய் இருந்தேன்.

அவனும் மௌனமாய் நின்றபடி இருந்தான்.

''நம் மூணாம் நம்பர் சைக்கிளை செல்வ ராசு எடுத்துட்டுப் போயிருக்காரா? வழியிலே பார்த்தேன்."

அட, செல்வராசா எடுத்துப் போயிருக்கிறான்? என் சித்தப்பா பையன்! மனசுக்குள் தடக், தடக் மறைந்து போன நிம்மதி.

"நான் துடைக்கறேண்ணே."

"வேணாம், போ."

"அட, கொடுங்கண்ணே. சைக்கிள் திரும்புது பாருங்க. நோட்டுல எழுதி, காசை வாங்குங்க.''

பரபரவென்று சைக்கிளைத் துடைக்க ஆரம்பித்தான் அவன்.

பீடி குடிக்கும் ஆசை வந்தது, கை வேலை குறைந்ததும். டாக்டர் பீடியைத் தொடவே கூடாது என்று சொல்லியிருக்கிறார். என்ன செய்வது?

நல்லதோ, கெட்டதோ. பழகியபிறகு சட்டென்று உதற முடியவில்லை. எதையும், யாரையும்!

பின்குறிப்பு:-

கல்கி 14 ஏப்ரல்  1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com