கதை - “ராமசாமி தூதன் நானடா!”

Vedha Drawing
Vedha Drawing

ள்ளியம்மாள் வெற்றிலை பாக்குத் தட்டோடு வந்து கணவர் எதிரே அமர்ந்தாள். கொழுந்து வெற்றிலையின் காம்பைக் கிள்ளி, தனது புடவைத்தலைப்பில் ஈரத்தைத் துடைத்துவிட்டு, இலையின் பின்புறம் சிறிது வாசனைச் சுண்ணாம்பைத் தடவினபடியே கணவரிடம் பேச்சுக் கொடுத்தாள். "ஐய(ர்)மாரோட சமுசாரங்க இன்னிக்கி மதியம் வந்திருந்தாங்க. பேசிக்கிட்டிருந்தோம்..." எனப் பீடிகை போட்டதும் கவிராயர் சிரித்தபடி, "என்ன பேசிக்கிட்டிருந்தீங்க?" எனக் கேட்டார். அவருக்குத் தெரியும், மனைவியின் பீடிகை ஏதோ முக்கியமான சமாச்சாரத்தைச் சொல்லத்தான் என்று. விஷயம் இதுதான்-

காசுக்கடை வைத்து நடத்தி வருபவராக இருந்தாலும் அருணாசலக் கவிராயருக்கு பெரிய கல்விமான் என்று ஊரில் நல்ல மதிப்புண்டு. நன்றாகக் கற்றுணர்ந்த அவரிடம் திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய நூல்களையும் மற்ற தமிழ் நூல்களையும் பாடம் கேட்கப் பல மாணாக்கர்கள் இருந்தனர். இவர்களுள் வேங்கடராமையர், கோதண்டராமையர் எனும் இருவரும், "கவிராயர்வாள், ராமாயணத்தை நீங்கள் ஒரு பிரபந்தமாகச் செய்யணும், உங்கள் புகழ்  உலகெங்கும் பரவும்," எனப் பலநாட்களாக வேண்டியபடி இருந்தனர்.

"ஐயரே, கம்பர் அழகாகப் பாடிட்டுப் போயிட்டார். எல்லாமே விருத்தம். பாலபாரதி அவங்க சந்தவிருத்தமாகப் பாடிவிட்டாங்க. திரும்ப நான் என்னத்தைப் பண்ணுவது?" என கவிராயரும் ஆழந்த யோசனையில் இருந்தார்.

கம்பராமாயணமெல்லாம் படிப்பறிவற்ற எளியவர்கள், பாமரர் ஆகியோரின் எளிய சிந்தைக்கு அப்பாற்பட்டது. பாமரரும், வீட்டுப் பெண்களும் (அக்காலத்தில் பெண்களைப் பெரிய படிப்பு படிக்க வைக்கவில்லை என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்) கேட்டு மகிழும் வகையில் அதனை எளிமையான இசைப்பாடல்களாக ஒருவரும், அமைக்கவில்லை. தாம் அவ்வாறு செய்தாலென்ன என்று கவிராயருக்கு எண்ணம் வந்தது.

கூடவே, ஒரு சிந்தனையும் உதித்தது: "ஐயரே! ராமாயணம் எல்லாருக்கும் போய்ச் சேரணும். கொஞ்சம் எளிமையான கீர்த்தனங்களாக ராகங்களில் அமைத்தால் எல்லாரும் பாடி மகிழலாமே அல்லவா?" என்றார். வேர்பிடித்த இந்த யோசனை, பெருத்த கிளைகளுடன் மரமாக வளர்ந்தேவிட்டது. விறுவிறுவென ராமநாடகம் அழகான தமிழில் விருத்தங்களாகவும், கீர்த்தனங்களாகவும் வளர்ந்தும் விட்டது. 'பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போலாச்சு,' 'உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கும்,' 'ஊர்க்குருவி உசரப் பறந்தாலும் கருடனுக்கு இணையாகுமா,' என வழக்கத்திலிருந்த மக்கள் கூறும் பல சொலவடைகளையும் கீர்த்தனங்களில் கலந்து எழுதினார் கவிராயர்.

வ்வாறே இந்தக் கீர்த்தனங்களை சங்கீதத்தில் தேர்ச்சிபெற்ற தனது இந்த இரு சீடர்களையே கொண்டு பல இடங்களிலும் பாடச்செய்தால் அவை விரைவில் அனைத்துத் தர ஜனங்களையும் சென்றடையும் எனக் கவிராயர் கருதினார். ஆகவே கீர்த்தனை வடிவில் அமைத்த, எளிய சொற்களால் எழுதிய பாடல்களை பாலகாண்டம் முதல் யுத்தகாண்டத்தில் ‘அங்கதன் தூது’வரை பாடினார். கண்ணிகளும் விருத்தங்களும் இடையிடையே கலந்து வரும்படிப் பாடினார்.

வேங்கடராமையரும் கோதண்டராமையரும் இவற்றை உற்சாகமாகக் கற்றுக்கொண்டு தமக்கிருந்த இசைஞானத்தால் தமிழ்நாட்டின் பெரிய நகரங்களுக்குச் சென்று பாடி வந்தனர்.

ப்போதுதான் ஒருநாள் வேங்கடராமையர் மனைவி கமலம்மாள், கவிராயரின் மனைவியிடம் சொன்னாள்: "அவா, குருகிட்டேருந்து கீர்த்தனங்களக் கத்துண்டு வந்து அகத்திலே அப்யாசம் பண்ணறப்போ ஒடம்பே சிலிர்த்துடுத்து மாமி, என்னமா வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு குரு வாயிலேர்ந்து."

கோதண்டராமையர் பார்யாளான சீதம்மா அதற்கு, "பாடித்தான் காட்டேன் கமலம், நீயும் நன்னாப் பாடுவியே." கமலம்மா பாடினாள்; சுருட்டியில்

       "காண வேணும் லக்ஷம் கண்கள் சீதாதேவிதன்

       காலுக்கு நிகரோ பெண்கள்.

       சேணுல கெங்கும்வாட்டித் திசை எங்கும் கீர்த்தி நாட்டி

       திரியும் ராவணா உன்றன் இருபது கண்போதுமோ."

என்று அவள் பாடப்பாட, வள்ளியம்மை சொக்கிப் போனாள். தன் கணவரா இப்படி ஒரு அழகான பாடலை இயற்றியிருக்கிறார் என நினைத்தபோது அவரைக் கைப்பிடித்த நாளைவிட இன்று அவர்மீது பேரன்பும் அபிமானமும் பெருமிதமும் பொங்கி வழிந்தன. முந்தானையால் கண்களில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

இதைத்தான் இப்போது வள்ளியம்மாள் கணவரிடம் சொன்னாள். "உலகமே பூரிச்சுக் கெடக்கு தெரியுமா ஒங்க கீர்த்தனங்களைக் கேட்டு," என்று கூறி, அவர் பாதங்களைக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

னால், கண்டனங்களும் எழாமல் இல்லை. "அடா, புடா," என்று என்ன பாட்டெழுதி இருக்கிறார் எனத் தமிழ்ப்புலவர்கள் சிலர் எள்ளி நகையாடினர். 'விட்டு விடடா சீதையை,' என்று ஜடாயு கூறுவதாக அமைந்த பாடல், 'அடடா வெளியே புறப்படடா,' என அங்கதன் ராவணனிடம் சொல்லும் பாடல், 'குத்துக்கு வாடா ராவணா,' என ராவணனை மல்யுத்தத்துக்கு அனுமன் அழைக்கும் பாடல் ஆகியன பலவிதமான ஏளனங்களுக்கு உள்ளாகின. அருணாசலக் கவிராயர் சோர்ந்து விடவில்லை. அவர் அதுவும் கடவுளின் சித்தம் எனப் பேசாமல் இருந்தார்.

* * * * *

வீட்டுவாசலில் அவருடைய வில்வண்டி வந்திருந்தது. ஒரு நிகழ்ச்சிக்காக (சென்னைப்)பட்டணம் சென்றுவிட்டுத் திரும்பியிருந்தார்கள் அவரது இரண்டு மாணவர்களான வேங்கடராமனும் கோதண்டமும். திண்ணையில் உட்கார்ந்து உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தவர் களைச் சுற்றி மற்ற மாணவர்களும் உள்ளூர்க் காரர்களுமாக ஒரு சிறுகூட்டமே கூடியிருந்தது. கவிராயரைக் கண்டதும், மரியாதையாக ஒதுங்கி வழிவிட்டார்கள்.

"என்ன ஐயரே, என்ன சமாச்சாரம்?" என உற்சாகக்குரல் கொடுத்தார் கவிராயர். திண்ணையின் ஒருபுறமாக இருந்த பெரிய மூட்டையைக் காட்டினார் கோதண்டராமையர். பிதுங்கிய அந்த மூட்டையின் இடுக்குகளில் பட்டு வஸ்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் இன்ன பிறவும் தெரிந்தன. 

"இதெல்லாம் சன்மானம் கவிராயர்வாள், பாட்டையெல்லாம் கேட்டு பட்டணமே பிரமிச்சுப் போயிடுத்து; ஸ்ரீமான் ரத்னசபாபதிச் செட்டியார், அவாளோட கோட்டைமாதிரி வீட்டிலே இன்னொரு நிகழ்ச்சியை அடுத்தநாளே பண்ண வைச்சுட்டார். 'விட்டு விடடா சீதையை,' 'அடடா வெளியே புறப்படடா,' இதையெல்லாம் தெருவில் போறவர்களெல்லாம் முணுமுணுக்கிறார்கள்," என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார்.

வேங்கடராமன் வண்டிக்கார மாரியப்பனை அழைத்தார். "மாரியண்ணே, வந்து எங்ககிட்ட ராத்திரி சொன்னதை ஐயாகிட்ட சொல்லுங்க," எனவே, மாரியும் பவ்யமாக, "நான் பின்னாடி ஓரமா ஒண்டி நின்னுக்கிட்டு பாட்டெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தேனுங்க. என்ன மாதிரி அங்க இருந்த படிப்பறிவில்லாத சனங்ககூட ஐயாமாருங்க பாடறப்போ கையால தாளம் போட்டுக்கிட்டு திருப்பிக் கூடவே பாடினாங்க. எங்களுக்கும் ராமர் கதை புரியறமாதிரி எங்க பெரிய ஐயா பாட்டெளுதி இருக்கீங்களேன்னு அம்புட்டு சந்தோசமா இருந்துச்சுங்க; எங்க பெரிய ஐயாதான் எளுதியிருக்காருன்னு நானும் எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப்பட்டேனுங்க," என்றவர், அதிகம் பேசிவிட்டோமோ எனும் நினைப்பில், வாய்மூடி, கைகட்டி மரத்தடியில் சென்று நின்றுகொண்டார்.

கூடிநின்ற கூட்டத்தில் மகிழ்ச்சிக் கலகலப்பு அதிகரித்தது. வீட்டுக்கதவின் பின்னிருந்து கேட்டுக்கொண்டிருந்த வள்ளியம்மாள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

மேல்துண்டால் திண்ணையைத் தட்டிவிட்டு அமர்ந்த கவிராயர் முகத்தில் சிரிப்போடு, ஒரு பெருமூச்செறிந்தார். "யாரம்மா உள்ளே, எல்லாருக்கும் நீர்மோரும் பானகமும் குடுத்துவிடம்மா," என்றவர், கண்களைமூடிச் சிந்தனையிலாழ்ந்தார்.

* * * * *

ராமாயணத்துப் பாத்திரங்களில் அனுமன்மேல் கவிராயருக்கு பெருமதிப்பும் பக்தியும் உண்டு. அதுவே கொஞ்ச நாட்கள் முன்பு அனுமார் பிள்ளைத்தமிழாக வடிவெடுத்தது. இப்போது ராமநாடகக் கீர்த்தனைகளை எழுதும்போது அனுமனை மிக உயர்வாகக் காட்டிடக் கவிராயர் எண்ணியிருந்தார். இலங்கையை எரித்த அனுமனை ஒருவாறாகக் கட்டிப்பிடித்து ராவணன்முன்பு கொண்டு செல்கின்றனர். அவன், "ஆரடா குரங்கே இங்குவந்த நீ ஆரடா?" என இகழ்ச்சியாக மரியாதைக் குறைவாகக் கேட்பதாக ஒரு பாடலை எழுதியிருந்தார் கவிராயர்.

இதற்கு அனுமனின் மறுமொழி கம்பீரமாக இருக்க வேண்டும் என சிந்தித்துக்கொண்டே இருந்தார். பலமுறை பலவாறு எழுதியும் அவர் திருப்தியடையவில்லை. பாடலும் எழுதப்படவில்லை.

ஒருநாள்...

புள்ளினங்களின் பல்வேறு ஒலிகளுடனும், கறவைமாடுகளின் அழைப்புடனும், காலைப் பொழுதிற்கே உரிய இனிய சப்தங்களுடனும் பொழுது விடிந்துகொண்டிருந்தது. வழியிலிருந்த வேப்ப மரத்திலிருந்து சிறுகுச்சியொன்றை ஒடித்து வாயில் பல்துலக்க அடக்கிக்கொண்டு கவிராயர் குளத்தங்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தார். அவர் குளத்திலிறங்கியதும் அந்தக் காலை நேரத்திலும் குளத்துநீரில் கும்மாளமிட்டுக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் பயபக்தியுடன் அடக்கமாக நீராட ஆரம்பித்தனர்.

இதையும் படியுங்கள்:
குப்பைமேனியில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்!
Vedha Drawing

'சிவோஹம், ஓம் நமச்சிவாய,' என மும்முறை கூறிக்கொண்டு குளத்துநீரில் முழுகி எழுந்தவர் அருகே, குளத்தின்மீது நீண்டிருந்த மாமரத்தின் ஒரு கிளையிலிருந்து ஒரு பெரிய மாம்பழம் 'தொப்'பென்று விழுந்து நீரை அவர்மீது வாரி இறைத்தது. தாங்கள்தாம் குறும்பு செய்ததாகப் பெரியவர் எண்ணிக்கொண்டு வையப் போகிறரோ என்று சிறுவர்கள் பயந்துவிட்டார்கள். கவிராயர் நிமிர்ந்து பார்க்க, பழத்தை எடுத்துக் கொண்டோடிய ஒரு குரங்குதான் அதை நீரில் நழுவவிட்டுவிட்டதெனப் புரிந்தது; சிரித்துக்கொண்டார்; சிந்தனை வயப்பட்டவராகவே நீரிலிருந்து வெளிவந்து, உலர்ந்த ஆடையை உடுத்திக்கொண்டு கட்டியிருந்த ஆடையை உதறிப் பிழிந்தார்.  கையோடு கொண்டு வந்திருந்த சம்புடத்திலிருந்து திருநீற்றை அள்ளியெடுத்து நீரில் இலேசாகக் குழைத்து நெற்றியிலும் மார்பு, கரங்களிலும் பூசிக்கொண்டார். மெல்ல நடந்து ஆற்றங்கரைப் பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். பிள்ளையாருக்கு தோப்புக்கரணமும் ஒரு கும்பிடும் போட்டுவிட்டு அங்கிருந்த அரசமரத்தடியில் அமர்ந்து வழக்கம்போல சிறிதுநேரம் நிட்டையிலாழ்ந்தார்.

விராயரின் தலை மறைந்ததும் சிறுவர்களின் கும்மாளம் தொடர்ந்தது. திடீரென அவர்களிடமிருந்து 'ஓ'வென்ற இரைச்சல்; கவிராயரின் நிட்டை கலைந்தது. சில குரங்குகள் மாம்பழங்களைப் பறித்துக்கொண்டும், அங்கிங்கு விட்டெறிந்து வீணடித்தபடியும், கடித்துச் சுவைத்தபடியும் இருந்தன. சிறுவர்கள் அவற்றைக் கல்லெறிந்து விரட்ட முயன்றார்கள். ஒரு சிறுவன் கூரான கல்லொன்றினை எடுத்துக் குறிபார்த்து பெரிய ஒரு குரங்கின்மீது விட்டெறிந்தான். அதுவும் குறி தவறாது அக்குரங்கின் தோள்பட்டையில் பட்டு ரத்தமே வழியலாயிற்று. சிறிய பையன்கள் பயந்துவிட்டனர். சிறிது தள்ளி நீராடிக்கொண்டிருந்த கோயில் பட்டர் வீட்டுச் சிறுவன் கணேசன், "அடே! அது அனுமானடா! ராமசாமி தூதனடா! அடிக்கக்கூடாதடா! பாவம் வந்து சேருமடா!" என்று கூவுவது கவிராயருக்குக் கேட்டது. "இனி நாம் போனால்தான் நிலைமை கட்டுக்கடங்கும்," என எண்ணிக்கொண்டு எழுந்து விடுவிடுவென்று குளத்து மாமரத்தை நோக்கி நடந்தார். கணேசன் கண்களில் வழிந்தோடும் நீரோடும் பீதியோடும் நின்றிருந்தான். உடல் நடுநடுங்கிக் கொண்டிருந்தது.

"சாமி, இந்த முருகப்பன்தான் கொரங்குமேல கல்லடிச்சான்," பல குரல்கள் ஒன்றாக ஒலித்தன. "குரங்கெல்லாம் ராமனுக்குத் தொண்டனடா, இனிமே இந்த அட்டூழியம் செய்யாதீங்க, ஓடுங்க, வீட்டுக்கு," என்று அவர்களை அதட்டி விரட்டி அனுப்பினார் கவிராயர். விசித்துக்கொண்டிருந்த கணேசனின் தலையை ஆதுரத்துடன் வருடியவர், "நீங்களும் வீட்டுக்குப் போங்கய்யா," என்றுவிட்டுச் சில நொடிகள் நின்று கைகூப்பியபடி அந்தக் குரங்குகளை ஸ்ரீராமனின் வானர சேனையைப் பார்ப்பதுபோல அன்போடும் பயபக்தியோடும் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தார். மனதில் எண்ண ஓட்டங்கள்; இந்த நிகழ்ச்சி அவருக்கு எதையோ உணர்த்தியது, உற்சாகமாக உணர்ந்தார். நடையை எட்டிப் போட்டார்.

சிறுவன் கணேசனின் சொற்கள் உள்ளத்தில் எதிரொலிக்க, வழியிலேயே மனதில் பாடல் உருவாயிற்று. இலங்கைக்குத் தீ வைத்த அனுமன் இராவணனால் பிடிக்கப்பட்டு, "யாரடா நீ குரங்கே?" எனக்கேட்டதற்கு அனுமன் விடை கூறுவதாக அமைந்த பாடல் உருவாயிற்று. சிறுவன் கணேசனே அதற்கு வித்திட்டான். கவிராயர் இதுவும் கடவுள் செயலே என மனத்தில் எண்ணி மகிழ்ச்சிகொண்டார்.

முதல் சொல் கிடைத்துவிட்டது; பாடல் பிரவாகமாகப் பொங்கிவந்தது. மோஹன ராகத்தில் அதைப் பாடிக்கொண்டே வீடுவந்து சேர்ந்தார் அருணாசலக் கவிராயர்.

                           *****

மோஹன ராகத்திலமைந்த அப்பாடல்:

பல்லவி:

*ராமசாமி தூதன் நானடா - அடடா ராவணா

              நானடா என்பேர் அனுமானடா  (ராம)

             

அனுபல்லவி:

              மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும்

              மறைந்து நின்று தந்த நான் அல்லடா

              புறம்பே நின்று வந்த நான் அல்லடா  (ராம)

             

சரணம்-3

              கீதம் தெரிந்தும் வேதம் தெரிந்தும்

                     பாதகங்களை சூழ்கிறாய்

              கெடுமதி கண்ணுக்குத் தோன்றாமல்

                     படுநரகத்தில் மூழ்குகிறாய்

              மாதர் மோகத்தாலே துவண்டு

                     தாழாதவரைத் தாழ்கிறாய்

              மயக்கமோ கைவிளக்கைப் பிடித்து

                     கிணற்றில் ஏன் விழுகிறாய்

              ஆதிமூர்த்தி தானே உத்தண்டம்

                     ஆகவந்தான் அரக்கரை மண்ட

              சீதையைவிட்டுப் பிழையடா

                     சேதியைச் சொன்னேன் வீரகோதண்ட (ராம)

                           _______________

இன்றும் இந்த ராமநாடகப் பாடல்கள் இசைநிகழ்ச்சிகளில் மிகுந்த உற்சாகத்துடன் பாடப்படுகின்றன என்பதே அவற்றின் அழகுக்கும், எளிமைக்கும், காலத்தைக் கடந்து நிற்கும் கவிநயத்திற்கும் சாட்சி.

பி.கு:

*இதனை இயற்றியபோது மோஹன ராகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. பாடல் புத்தகத்தில் அவ்வாறே காணப்படுகிறது. தற்காலத்தில் இதனை மோஹனம் அல்லது பஹுதாரி ராகத்தில் பாடி வருகின்றனர். இரண்டுமே நன்றாக உள்ளது.

       தமிழ் மூவர் காலத்தில் ஒரு கீர்த்தனத்திற்கு மூன்று சரணங்களை அமைத்துப் பாடினார்கள். தற்காலத்தில் ஏதேனும் ஒரு சரணத்தைப் பாடுவதே வழக்கமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com