
முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். மனநோய் பிடித்தவர்கள்தான் பைத்தியம். அவர்கள் எது செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும். ஆனால், அது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
மனோ… அவர்தான் தனது பெயர் மனோ என்றார். ஏர்போர்ட் துவங்கி அண்ணாசாலை வரை எங்கு வேண்டுமானாலும் இருப்பார். அவர் உடையை தூக்கி எறிந்துவிட்டார். ஒரு இளைஞன் அவரிடம் நெருங்கி வர பயந்து ஒரு சாக்குத் துணியை அவர் மீது வீசினார். மனோ அதை உடுத்திக்கொண்டார். பசி... சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.
ஒரு சேரியில் நுழைந்தார். அங்கு ஒரு பெண்ணிடம் ஒரு குடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். பிறகு மெயின் ரோடு வந்தார். அவர் போருர் போக வேண்டும். அது நினைவில் இருந்தது. அப்போது 56ம் நம்பர் பஸ் வந்தது. அதில் ஏறினார். நடத்துனர் அவரை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார்.
எங்கு செல்வது என்று தெரியவில்லை. காலை அண்ணா சாலையில் மெக்ரனெட் கடை திறந்துவிட்டது. சூடாக பன் இறக்குகிறார்கள். இவர் கையை நீட்டி பன் கேட்டார். கடை சிப்பந்திகள் குச்சி வைத்து அடித்து துரத்தினார்கள்.
ஆவின் கடை முன்னே இருந்தார். ஒரு வயதானவர் வந்தார். அவரிடம் சாப்பிட ஏதாவது கேட்டார். அவர் ₹ 50 நோட்டு கொடுத்தார். மனோ வாங்க மறுத்தார். மீண்டும் தான் சாப்பிட வேண்டும் என்று சைகை செய்தார். அந்த வயதானவர் மனோவுக்கு ஒரு ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்தார். அதை வாங்கி ஒரு சல்யூட் அடித்தார்.
பிறகு ரோட்டில் இருந்த சகதியில் உட்கார்ந்து ஏதோ வரைய முயற்சி செய்தார். அவர் இந்தியா படம் வரைந்தார். நன்றாகவே வரைந்து இருந்தார். சுமார் 3 மணி நேரம் அங்கு இருந்து விட்டு கிளம்பினார்.
அண்ணா சாலையில் ஒரு ஹோட்டலில் சாப்பிட கேட்டார். ஹோட்டல் முதலாளி ₹ 5 கொடுத்தார். அதை வாங்கி தூக்கி எறிந்தார். முதலாளிக்கு கோபம். ஆனால் பைத்தியம் அதை கண்டு கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் சாப்பிட மட்டுமே கேட்டார்.
முதலாளி சர்வரிடம் மனோவுக்கு 5 இட்லி மற்றும் சாம்பார் கொண்டு வந்து கொடுத்தார். அவருக்கு ஒரு சல்யூட்.
வாங்கி சாப்பிட்டார். நல்ல பசி. இட்லி, சாம்பார் அவருக்கு அமிர்தமாக இருந்தது. போகும் முன் ஹோட்டல் முதலாளிக்கு ஒரு சல்யூட்.
விஷயத்திற்கு வருகிறேன். உங்களிடம் பைத்தியம் ஏதாவது சாப்பிட அல்ல குடிக்க கேட்டால் அதை வாங்கித் தாருங்கள். அவனுக்கு காசு வேண்டாம். காசை மதிக்காத ஒரே கூட்டம் பைத்தியக்காரர்கள் மட்டுமே.
முடிவாக… பைத்தியக்காரனும் மனிதன்தான். நீங்கள் ஏதாவது அவனுக்குச் செய்ய விரும்பினால்… துணியோ சாப்பாடோ, அல்லது குடிக்க டீ அல்லது காபி வாங்கிக் கொடுங்கள். கோடி புண்ணியம் உங்களுக்கு.
ஆம். காசு வேணாம்..! டீ அல்லது காபி. சிற்றுண்டி, சாப்பாடு வாங்கித் தாருங்கள்.!