ஏதோ பிறந்தோம் எப்படியோ வாழ்ந்தோம் என்று வாழ்க்கையைக் கழிப்பதை மாற்றி உயிருடன் இருப்பதற்கான காரணத்தை அறிவது தான் 'இகிகை'.
இகிகை - வாழ்க்கையை நன்கு வாழ்வதற்கான ஒரு ஜப்பானிய வழி!
இகிகை என்பதை அப்படியே மொழி பெயர்ப்பது என்றால் “நீ காலையில் விழித்தெழுவதற்கான காரணம்” என்று சொல்லலாம்.
எதற்காக வாழ்கிறோம் என்ற நம்பிக்கையும் வாழ்க்கை என்பதற்கு நாம் தரும் மதிப்புகளுமே இகிகை.
ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவில் தான் இகிகை தோன்றியது. அங்கு தான் உலகில் நூறு வயதை எட்டிய ஏராளமானோர் இருக்கின்றனர்.
நூறு வயது வாழ்வை அடைய இகிகை தான் காரணமா? கான்ஸர், மாரடைப்பு, மனச்சோர்வு, இதர பயங்கர வியாதிகள் எதுவும் ஒகினாவா மக்களுக்கு ஏற்படுவதில்லை.
காரணம் - இகிகை.
இகிகை என்பது மூன்று விஷயங்களைக் கொண்டது.
1) நீங்கள், உங்கள் வாழ்க்கை என்பதற்குத் தரும் ஆதாரமான மதிப்புகள்
2) நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்கள்
3) நீங்கள் சிறந்து விளங்கும் விஷயங்கள்.
இவை இணைவது தான் உங்களின் இகிகை.
உங்கள் குறிக்கோளை நீங்கள் வாழ்க்கையில் இழந்து விட்டால் அது மிகவும் மோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் முடிவுகள். உங்களுக்கு இயல்பாக அமைந்த திறமைகள் தான் உங்களுக்கு (இறைவனால் ) அளிக்கப்பட்ட வரங்கள்!
உங்களுக்கு உங்களின் இகிகை- ஐக் கண்டுபிடிக்க ஆவலாக இருக்கிறதா?
அதற்கு நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன:
1) நீங்கள் எதை மிக மிக அதிகமாக விரும்புகிறீர்கள்? (வெறித்தனமான ஆசை என்கிறோமே அது தான்)
2) உலகத்தின் தேவை என்ன? (அதற்கான உங்களது பணி)
3) நீங்கள் எதில் மிகவும் சிறந்து விளங்குகிறீர்கள்? (உங்களது திறமை)
4) எந்தப் பணியில் நீங்கள் சம்பாதிக்க முடியும்? (உங்கள் தொழில்)
இந்த நான்கும் இணைந்தது தான் உங்களது இகிகை!
இதை மட்டும் நீங்கள் கண்டுபிடித்து விட்டால் சந்தோஷமாக நீண்ட காலம் நீங்கள் வாழலாம்.
உங்கள் இகிகை-ஐ கண்டுபிடிப்பது உங்களின் முதல் காரியமாக இருக்க வேண்டும்!
அதை எப்படிக் கண்டுபிடிப்பது?
நான்கு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்:
1) எதை நான் விரும்புகிறேன்?
2) எதில் நான் சிறந்து விளங்குகிறேன்?
3) இப்போது எந்த வேலையில் எனக்குப் பணம் கிடைக்கிறது?
4) உலகத்தின் இன்றைய தேவை என்ன?
இந்த நான்கையும் இணைத்து உங்களின் இகிகை எது என்பதைக் கண்டுபிடியுங்கள். அதன் வழியில் உங்களின் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். நீண்டகாலம் அமைதியாக சந்தோஷமாக வாழலாம்.
இது தான் ஜப்பானிய ரகசியம்!
இகிகையால் வெற்றி பெற்றோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு காண்போம். குட் ஆல் (Goodall) என்ற பெண்மணிக்கு விலங்குகள் என்றால் ஒரு பிரியம். அதிலும் குறிப்பாக குரங்குகளின் மீது அவருக்கு ஒரு அபார ஈடுபாடு உண்டு. குரங்களைப் பற்றி ஆராய ஆரம்பித்த அவர் ஏராளமான அபூர்வ ரகசியங்களைக் கண்டுபிடித்தார். அவற்றைப் புத்தகங்களாக எழுதினார். உலக பிரசித்தி பெற்றார். அவரது உரைகளைக் கேட்க ஏராளமானோர் கூடினர். பணமும் புகழும் அவருக்குப் பெருகியது.
ஆக இந்த இகிகையை கடைப்பிடித்து நமது வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதோடு செல்வமும் புகழும் பெற்று நீடித்த ஆயுளைக் கொண்டு திருப்திகரமான வாழ்க்கையை வாழலாம்.