மகிழ்வுடன் எதிர்கொள்ள வேண்டிய போட்டித் தேர்வுகள்

வாழ்வில் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்பதை இன்றைய தலைமுறையினர் உணர்வது நல்லது.
NEET exam
NEET exam
Published on

நாட்டின் தேசியத் தேர்வு முகமை நடத்தும் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் அனைத்து மாநில பெருநகரங்களிலும் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நாடு முழுவதும் 5,453 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வினில் தமிழகத்திலிருந்து மட்டும் 1.50 லட்சம் மாணவர்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது. இவ்வாண்டு இப்போட்டித் தேர்வில் இயற்பியல் கேள்விகளில் 78% வினாக்கள் சிந்தித்து பதிலளிக்க கூடிய வகையில் இருந்ததால், நேரமின்மை சிக்கல் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடைபெறும் போதெல்லாம் நாட்டில் பெரும் சர்ச்சைகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

கடந்த 2024ல் ஜார்கண்ட், குஜராத், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற நீட் தேர்வு தொடர்பான, முறைகேடுகள் சமூக ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தன.

பீகார் மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 67 பேர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவ்விவகாரத்தில் அகில இந்திய மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இம்முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் குவிந்தன. தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்களையும் ஒரே வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், மறு தேர்வினை நடத்த அறிவுறுத்தியது, ஆனால் மத்திய அரசு 7 பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து, குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதாய் உறுதி அளித்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் அவ்வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்:
நீட் தேர்வில் நிதானத்தைக் கடைப்பிடிக்கலாமே!
NEET exam

இவ்வாண்டு தேர்வின் போதும் வழக்கம்போல் தேர்வர்களின் உடையில் இருந்த பட்டன்கள் அறுப்பு, மத நம்பிக்கையின் அடையாளங்கள், அரைஞான் கயிறு, மூக்குத்தி, தோடு, போன்றவை அவர்களின் உடலில் இருந்து அகற்றப்பட்ட பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் தேர்வெழுத வந்த மாணவியின் உடையிலிருந்த அதிக பட்டன்கள் அகற்றப்பட்டு அவர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவம் போன்ற அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வு மையங்களில் திறமை வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கத்துடன் கடும் சோதனை நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தேவையற்ற கெடுபிடிகள் தேர்வினை எழுதும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும் போது, அவை தேர்வினை எழுதும் மாணவர்களின் உளநலனையும், உடல் நலனையும் வெகுவாக பாதிக்கும். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகும் தேர்வர்கள் தேர்வினை கவனமுடன் எழுத முடியாது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட முதல் மாணவி அனிதா தொடங்கி இவ்வாண்டும் இதே போன்று ஒரு மாணவி தற்கொலை நிகழ்வு செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இதைப் போன்ற நிகழ்வுகள் நமக்கு வேதனையைத் தருகின்றன.

பல ஆண்டுகளாக மாநில பாடத்திட்ட முறையில் படிக்கும் மாணவர்களால் திடீரென தனக்கு தொடர்பில்லாத ஒரு தேர்வுமுறையை அணுக முடிவதில்லை. தற்போதுள்ள நீட் பயிற்சி மையங்கள் நிதி சார்ந்து ஏழை, எளிய, பட்டியிலின மக்கள் அணுகும் நிலையில் இல்லை.

இந்தியாவில் பள்ளிகள் இளைஞர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றத் தவறிவிட்டதாகவே தோன்றுகிறது. வாழ்வில் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்பதை இன்றைய தலைமுறையினர் உணர்வது நல்லது.

மாநில பாடத்திட்டங்களில் மருத்துவ போட்டித் தேர்வுகளின் பாடங்களை சேர்ப்பது இதற்கு தகுந்த தீர்வாக அமையும். மாணவர்களின் மருத்துவராகும் கனவு சாத்தியமாகாத நிலையில் மருத்துவம் சார்ந்த பிற படிப்புகள் இருப்பதை நினைவில் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு மருத்துவராகவும் கனவு சாத்தியமாகாத போது அதற்கு தற்கொலை ஒரு தீர்வாகாது என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு உணர்த்துவது நல்லது.

பள்ளிகளிலும், குடும்பங்களிலும் தேர்வு நேரங்களில் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். போட்டித் தேர்வு நேரங்களில் மனஉளைச்சலில் உள்ளவர்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிப்பது தவறான முயற்சிகள் முடிவுகள் எடுப்பதை குறைக்கும் அல்லது தவிர்க்கும்.

இதையும் படியுங்கள்:
நீட் தேர்வில் சாதித்திருக்கும் தமிழக மாணவர்கள்!
NEET exam

கூடுமானவரை தேர்வு மையங்களை தேர்வர்களின் வசிப்பிடங்களுக்கு அருகாமையில் அமைக்கலாம். தேர்வு முகமைபோட்டி வினாத்தாள்களில் கடினத்தன்மை சீராக இருப்பதில் கூடுதல் கவனம் செலுத்தலாம். தேசிய தேர்வு முகமை தன்னுடைய தேர்வு நடைமுறைகளை மறு ஆய்வு செய்து மாணவர்கள் மகிழ்வுடன் இவ்வாறான தேர்வுகளை எதிர்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com