
இந்த ஆண்டிற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு பல வேண்டத்தகாதவைகளை அரங்கேற்றியுள்ளது. தேர்வு எழுதுவோர் நல்ல மனநிலையில் இருக்கும் படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்வு நடத்துவோரின் முழு முதற் கடமையாகும்! அந்த அடிப்படை விதியே மீறப்பட்டிருக்கிறது.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ஒரு சாதாரணத் தேர்வே இது! இதனை எழுதுபவர்கள் தீவிரவாதிகளோ, நாட்டிற்கு எதிரானவர்களோ, கடத்தல்காரர்களோ, கொலைகாரர்களோ, கொள்ளைக்காரர்களோ அல்லர்! அனைவரும் நம் வீட்டு இளம் பிள்ளைகள். டாக்டர்களாகிப் பணியாற்ற விருப்பம் உள்ள சிறு தளிர்கள். அந்தத் தளிர்களை எப்படி நடத்த வேண்டுமென்ற இங்கிதம் கூடத் தெரியாமல் இத்தேர்வை நடத்துவோர் காட்டும் கடுமை மோசமானது; அருவறுப்பானது; வெறுக்கத்தக்கது; வேதனையளிப்பது; கண்டிக்கத்தக்கது!
தேர்வை நடத்துபவர்களால், அதாவது ஹாலில் உள்ள இன்விஜிடர்களால் அவர்கள் காப்பியடிப்பதையோ, வேறு விதமான தவறுகள் செய்வதையோ கண்டு பிடிக்க முடியாதா? அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் இல்லாத ஹைப்பை இதற்குக் கொடுத்து ஏன் இளைஞர்களைச் சிரமப் படுத்துகிறீர்கள்?
இந்தத் தேர்வுக்கு மட்டும் எதற்குப் புதிதான ட்ரஸ்கோட்? காதுகளில் ஸ்டட் அணியக் கூடாதென்ற கண்டிஷன்? தாலியைக் கூடக் கழற்றச் சொல்லும் மோசமான கட்டுப்பாடு? மக்களாட்சி நடைபெறும் நாட்டில் இத்தனை கண்டிஷன்களா?
தேர்வுகளில் தவறுகள் நடைபெறக்கூடாது என்பதை எல்லோருமே ஒத்துக் கொள்வர். கண்காணிப்பை ஸ்ட்ரிக்ட் ஆக்குங்கள். ஹால் சூப்பர்வைசர்களைக் கூட்டுங்கள். தவறு செய்து பிடிபட்டால் தேர்வு எழுதத் தடை விதியுங்கள். மீண்டும் நீட் எழுத முடியாமல் கூடச் செய்யுங்கள். இவ்வளவும் உங்கள் கைவசம் உள்ளபோது, இவற்றையெல்லாம் விட்டு விட்டு, பட்டன் அதிகமாகவுள்ள சட்டை போட்டுக் கொண்டு உள்ளே வரக் கூடாது என்று சொல்வது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?
ட்ரஸ் கோட் போன்றவற்றை முன்பே கொடுத்து விட்டோம். அவர்கள்தான் பின்பற்றவில்லையென்ற சாக்குப் போக்கெல்லாம் சொல்லாதீர்கள். ஒன்று செய்யுங்கள்! நீட் தேர்வுக்கென்று பிரத்யேக ஆடை தயாரிக்கச் செய்து விடுங்களேன்! அவற்றை மட்டுமே அணிந்து வர வேண்டுமென்று ஒற்றை வரியில் சொல்லி விடலாமே!
இவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்கின்ற உங்களால் வினாத்தாள்கள் முன்பே வெளியாவதை மட்டும் தடுக்க முடியாமல் போவது எதனால்? எங்கே இருக்கிறது தப்பு? அதனைக் களைய முயற்சி மேற்கொள்ளாமல் அப்பாவி இளைஞர்களை இப்படித் துன்புறுத்துவது நியாயந்தானா?
சரி! ஹால் டிக்கட்டுகளில் தெளிவான முகவரி இல்லாமல் அனுப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? அவர்கள் சரியான முகவரி கொடுக்காத காரணத்தாலேயே பலபேர் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றனவே, அதற்கு என்ன தீர்வு?
மிக அமைதியாக நடத்தப்படவேண்டிய ஒரு நல்ல தேர்வை, இப்படிப் பயமுறுத்தியும், அலைக்கழித்தும் நடத்த வேண்டிய அவசியம் என்ன? பல இளைஞர்களின், பெற்றோர்களின் இரத்த ஓட்டத்தையே அதிகரிக்கச் செய்வது போல்தான் இதனை நடத்த வேண்டுமா?
வருங்காலங்களிலாவது கெடுபிடிகளைக் குறைத்துக் கொண்டு, இளைஞர்கள் இன்முகத்துடன் இத்தேர்வை எதிர்கொள்ள வழிவகை செய்யுங்களேன்! ப்ளீஸ்!