தமிழரின் பெருமை சுப்பிரமணியன் சந்திரசேகர்!

ஆகஸ்ட் 21 - சுப்பிரமணியன் சந்திரசேகர் நினைவு தினம்!
தமிழரின் பெருமை சுப்பிரமணியன் சந்திரசேகர்!
Published on

ந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை விண்ணில் தெரியும் அழகு நட்சத்திரங்களும் நிலாவும் நம் சிந்தையில் பலவிதமான கற்பனைகளுக்கு காரணமாக இருந்து வருகிறது. நாம் கற்பனையில் கண்ட பால்வெளி நட்சத்திரங்களை உண்மையாகவே ஆராய்ந்தவர். நட்சத்திரங்கள் தொடர்பான ரகசியங்களை ஆராய்பவர்களுக்கு வழிகாட்டும் அரிய விண்வெளிக் கோட்பாட்டை உருவாக்கி நோபல் பரிசு பெற்றவர் என இந்தியாவின் பெருமை மிகு இயற்பியல் விஞ்ஞானியாக விளங்கியவர்தான் சுப்பிரமணியன் சந்திரசேகர்.

சுப்பிரமணியன் சந்திரசேகர் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த இந்தியாவின் லாகூரில் ஸ்ரீ சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் முதல் மகனாக 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி  பிறந்தார். இவரது தந்தை இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் அரசு பணியில் அதிகாரியாக இருந்ததால் 1918ல் சென்னைக்கு மாற்றப்பட்டார். லாகூரில் ஐந்து வருடங்களும் லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்த பின் அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. இதன் காரணமாக இவரது ஆரம்பக் கல்வி வீட்டில்தான் முதலில்  துவங்கியது.

தனது பதினோராம் வயதில் திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கத் துவங்கி சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் படிப்பை முடித்து, 1927ல் இயற்பியலுக்கான இளங்கலை படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். அப்போது அவரது உறவினரான சர் சி வி ராமன் அவர் கண்டுபிடித்த சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கான  இயற்பியல் துறையின் நோபல் பரிசைப் பெற்றது இயற்பியல் மீதான இவரின் ஆர்வத்தை மேலும் வளர்த்தது.

1928 புகழ் பெற்ற இயற்பியல் அறிஞரான அர்னால்டு சம்மர் ஃபெல்ட் இந்தியா வந்திருந்தபோது சென்னை வந்து மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தை படித்திருந்த சந்திரசேகர் அவரின் சொற்பொழிவால் மேலும் கவரப்பட்டு அவரை சந்தித்து இயற்பியலின் புதிய ஆராய்ச்சிகளை பற்றி கேட்டு அறிந்ததுடன் அவை பற்றிய புத்தகங்களை படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அடுத்தடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சி கட்டுரையையும் பதிப்பித்தார்.

அந்த வருடமே சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையைக் குறித்தான சொற்பொழிவு நிகழ்த்தி மூத்த ஆராய்ச்சியாளர்களின் பாராட்டுகளைப் பெற்றார். அன்றிலிருந்து  அவரது ஆராய்ச்சி பயணமும் வெற்றிகரமாகத் துவங்கியது. 1930-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று சந்திரசேகர் மேல் படிப்புக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு பயணித்தார்.

1929 இல் ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு (Theory Of Relativity) குவாண்டம் கோட்பாடு (Principles Of Quantum Physics) ஆகியவற்றை பயன்படுத்தி வானியல் கோட்பாடு ஒன்றை அவர் உருவாக்கியதுடன் அந்த கோட்பாட்டை நிரூபிக்க சுமார் 50 ஆண்டுகள் அவர் செய்த தொடர் ஆராய்ச்சியின் பலனாக விண்மீன்களின் இயல்பை அறிவதற்கான அரிய கோட்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் ஏன் வானம் நீல நிறமாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்தார். இதனால் பல உயரிய விருதுகளை சந்திரசேகர் பெற்றார்.

விண்வெளி இயற்பியலில் முக்கியமான கண்டு பிடிப்பாக இவர் கண்டுபிடித்து இவரின் பெயரால் விளங்கும் "சந்திரசேகர் வரையறை" கருதப்படுகிறது. விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் தோற்றம், மறைவு, கருந்துளைகளின் உருவாக்கம் ஆகியவை பற்றிய தொடர் ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டியாக விளங்குவது இக்கோட்பாடாகும். அமெரிக்க அணுவியல் விஞ்ஞானியான வில்லியம் பவுலர் (1911 - 1995) விண்மீன்களின் இயக்கத்தில் நிலவும் அணுவியல் மாற்றங்கள் குறித்த கோட்பாட்டை உருவாக்கியவர்.  ஆகவே அவருக்கும் சுப்ரமணியன் சந்திரசேகருக்கும் இணைந்து 1983ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதைக் குறிப்பிடவேண்டும்.

2010 ஆம் வருடம்  இவரது 100 வது பிறந்த நாளை முன்னிட்டு, சிகாகோ பல்கலைக்கழகம் ’சந்திரசேகர் நூற்றாண்டு கருத்தரங்கம் 2010’ எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தியது. இவரின் 107 ஆம் பிறந்த நாள் மற்றும் அவரின் ஆராய்ச்சிகளுக்கு பெருமை தரும் விதத்தில் 2017 ஆம் ஆண்டு  28 நாடுகளில் கூகுள் டூடுலை வடிவமைத்துக் காட்டியது கூகுள் நிறுவனம். இதுபோன்ற பல சிறப்புகளை இவர் மறைந்த பின்னும் பெற்று வருவது இவரது ஆராய்ச்சிகளுக்கு கிடைத்த பெருமை.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் நம் பெருமைக்குரிய இந்திய விஞ்ஞானியான சுப்ரமணியன் சந்திரசேகர் பெயரில் ஒரு ஆராய்ச்சி மையம் இயங்கி வருவது இந்தியாவுக்கு பெருமை தரும் விஷயங்களில் ஒன்றாகிறது.

பணி நிமித்தம் தனது வாழ்வின் பெரும்பகுதியை அமெரிக்கா வின்  சிகாகோவில் கழித்த இவர் தனது 84 ஆம் வயதில் ஆகஸ்ட் 21ல் (1995 ஆம் ஆண்டு)  மறைந்தார். இவர் மறைந்தாலும் இவர் உருவாக்கிய வானியல் கோட்பாடு பலருக்கும் வழிகாட்டியாக மேலும் மேலும் பல புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com