

சுந்தர் ஒரு கடிதம் எழுதினார். அதில் பல்வேறு விஷயங்கள் எழுதி இருந்தார்.
“போலீஸ் அதிகாரிக்கு வணக்கம்...
நான் தற்கொலை செய்ய முடிவெடுத்து உள்ளேன். என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. வாழ்க்கை வெறுத்துவிட்டது. வேலை கிடைக்கவில்லை. போதாதற்கு ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். ஆனால் அவர் வீடு சென்று பெண் கேட்கும் நிலையில் நான் இல்லவே இல்லை. எனக்கு வேலை கிடைக்கவில்லை. தண்டச்சோறு சாப்பிட்டு வருகிறேன்.
வேலை இல்லை என்றால் இந்தச் சமூகத்தில் யாரும் மதிப்பது இல்லை. பணம்தான் உறவுகளை ஏற்படுத்துகிறது. என்னிடம் பணம் இல்லை. என் அப்பாவிற்கு எந்தச் சொத்தும் இல்லை.
நான் உயிருக்கு உயிராகக் காதலிக்கும் மீனாட்சி மட்டுமே நான் தற்கொலை செய்தால் அழுவார். அவருக்கு என் மீது தீராதக் காதல்.
நான் ஒரு முதுகலை பட்டதாரி. இருந்தும் வேலை கிடைக்கவில்லை.
எனவே… நான் தற்கொலை செய்ய முடிவு எடுத்துவிட்டேன்.
சரி… கடைசியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
எனக்கு வேலை இல்லை என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன்.
நான் இறந்தபிறகு கண்களைத் தானம் செய்ய விரும்புகிறேன்.
என் உடலை அரசு ஆராய்ச்சி மருத்துவமனைக்கு தானம் செய்து விடுங்கள்.
உலகை விட்டுப் போகிறேன். ஒரே ஒரு விஷயம்தான். இந்த உலகம் சரி இல்லை. இந்த சமூகமும் சரி இல்லை.
உண்மையுடன்,
சுந்தர்.
சுந்தர் அந்தக் கடிதத்தை ஒரு கவரில் போட்டு ‘கமிஷனர் ஆஃப் போலீஸ்’ முகவரிக்கு போஸ்ட் பண்ணிவிட்டார்.
ஒரு போலி பிரிஸ்கிரிப்ஷன் வைத்து 30 தூக்க மாத்திரை வாங்கினார். அவருக்கு உண்மையில் சாக விருப்பம் இல்லை. ஆனால், வேலை கிடைக்காததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தூக்க மாத்திரைகளை சட்டை பையில் வைத்தார்.
எதிரே ஒரு டாஸ்மாக் கடை. சுந்தர் இதுவரை குடித்தது இல்லை. 'சாகத்தான் போகிறோம்… குடித்துவிட்டு, அது எப்படி இருக்கிறது? என்று பார்ப்போம்’ என்று முடிவு செய்தார். பக்கத்தில் ஒரு கடையில் கிழங்கு சிப்ஸ் மற்றும் காராபூந்தி வாங்கினார். டாஸ்மாக் கடையில் ஒரு ஹாஃப் பாட்டில் விஸ்கி வாங்கினார். டாஸ்மாக் அருகே பார் இருந்தது. சுந்தர் உள்ளே உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தார். தொட்டுக்க சிப்ஸ் மற்றும் பூந்தி.
மூன்றாவது ரவுண்டில் போதை அதிகரித்தது.
அவர் தற்கொலை செய்யும் எண்ணத்தையே மறந்து போனார்.
வீட்டிற்கு போய் படுத்துக்கொண்டார். காலைதான் நேற்று என்ன நடந்தது என்பது தெரிய வந்தது.
நான் தற்கொலை செய்யவில்லையே என்று வருத்தம் அடைந்தார். எழுந்து குளித்துவிட்டு டாஸ்மாக் சென்றார். இரண்டு நாள் போதையிலேயே கழிந்தது. மறுநாள் போலீஸ் சுந்தர் வீட்டிற்கு வந்தது.
“நீங்கள்தானே சுந்தர்…?”
“ஆம்…!”
“தற்கொலை செய்யப் போகிறேன் என்று எழுதி இருந்தீர்கள்…?”
“ஆம். உண்மைதான். நான் முடிவை மாற்றிக்கொண்டேன்…!”
“நீங்கள் செய்ய இருந்தது சட்ட விரோதம். இனி ஒரு முறை எதாவது செய்தால் கைது செய்துவிடுவோம்… ஜாக்கிரதை…!” என்று எச்சரித்துவிட்டு கிளம்பினார்கள்.
சுந்தர் அம்மா - அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரிடம் கேட்டார்கள். “அப்பா…! ஒரு ₹ 200 கொடுங்கள்… ப்ளீஸ்…!”
“எதுக்கு…?”
“இல்லை... வேணும்…!”
அப்பா கொடுத்தார். இனிதான் சுந்தருக்கு பெரிய பிரச்னை.
ஆம். சுந்தர் ‘குடி’மகன் ஆகி விட்டார்…!
இதுவும் தற்கொலையோ?