மனித மூக்கு சுவாச மண்டலத்தின் முதல் உறுப்பு ஆகும். இது வாசனை அமைப்பிலும் முக்கிய உறுப்பாகும். மனித மூக்கு சுமார் ஒரு ட்ரில்லியன் (லட்சம் கோடி) எண்ணிக்கையிலான வாசனைகளை நுகர்ந்து அறிந்து கொள்ளும் திறன் படைத்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை!
1920ம் ஆண்டு முதல் முறையாக மனித மூக்கு சுமார் 10,000 வாசனைகளை நுகர்ந்து பிரித்தறியும் திறன் கொண்டது என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டனர். ஆனால் சமீபத்தில் அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் மனிதர்களால் சுமார் ஒரு டிரில்லியன் எண்ணிக்கையிலான வாசனைகளை பிரித்தறிய முடியும் என்று தெரிய வந்துள்ளது.
மனிதனுடைய கண்களால் பல்லாயிரக்கணக்கான நிறங்களை பிரித்தறிய முடியும் என்றும், காதுகளால் சுமார் 3,40,000 ஒலிகளை பிரித்தறிய முடியும் என்றும் ஆய்வாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். ஆனால் மனிதனுடைய நுகர்வு திறன் பற்றி இது வரை ஆய்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது ராக்பெல்லர் பல்கலைக்கழக ஆய்வில் மூக்கு பற்றிய பல விஷயங்கள் வெளிவந்துள்ளது.
நம் ஒவ்வொருவருடைய மூக்கிலும் வாசனைகளை பிரித்தறிய 60 லட்சம் சென்சார்கள் எனும் உணர்விகள் உள்ளன. வாசனைகளை ஏற்று உணர்பவை இவை. எண்ணிலடங்கா வாசனைகளை நாம் நுகர்ந்து கொண்டே இருக்கிறோம். எவ்விதமான குறிப்பிட்ட வாசமும் இல்லாதபோதும் கூட, நம்முடைய மூக்கு ஏதோ ஒன்றை நுகர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
ஒரு நபரின் வாசனை, புலன் உணர்வு, வேறு ஒரு நபரிடம் காணப்படாது. இது , ஒவ்வொருவருக்கும் தனித்தனியானது. கைரேகை எத்தனை தனித்துவமானதோ அந்த அளவுக்கு இந்த வாசனை புலன் உணர்வும் தனித்துவமானது.
உங்கள் மூக்கின் மீது நிலவும் வெப்ப நிலையை பொறுத்து உங்கள் மூளையின் வேலைத் திறனை கண்டு கொள்ளலாம் என்கிறார்கள் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். உங்கள் மூக்கு குளிர்ந்த நிலையில் இருக்கிறதா? உங்கள் மூளை கடினமாக உழைக்கின்றது என்று அர்த்தம் என்கிறார்கள்.
நமது மூக்கினுள் தானகவே பாக்டீரியாக்களை உருவாக்கிக் கொள்ளும் அமைப்பு உள்ளதாம். இது பல வைரஸ்களை கொல்லும் நோய் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது என்பதை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது பற்றிய ஆய்வு பற்றி கூறும் போது "நமது முன்னோர்கள் தங்களின் நுகர்வு திறன் மூலமாகவே பல விஷயங்களை சாதித்தார்கள். ஆனால் காலம் மாற மாற அத்திறன் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து விலகி வருகிறது. இதற்கு காரணம், பார்வைத்திறன் மற்றும் கேட்கும் திறனை விட நுகர்வு திறன் அவ்வளவு முக்கியமில்லை என்று நாம் நினைப்பது தான்" என்கிறார்கள். நுகர்வு திறன் என்பது மனித குணாதிசயங்களுடன் இணைந்த ஒன்றாகும். ஒவ்வொரு வாசனையும் மனித இயல்பை அதற்கேற்ப மாற்றுகின்றன என்கிறார்கள்.
நாம் 10 வயதை அடையும் போது மூக்கின் வடிவம் தீர்மானிக்கப்படுகிறது. பெண்களில் 17 வயது வரையிலும், ஆண்களுக்கு 19 வயது வரையிலும் மூக்கு வளரும்.
மூக்கு நமது குரலின் ஒலியை வடிவமைப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது, அதாவது நாம் பேசும்போதும் பாடும்போதும் நமது மூக்கு ஒரு அதிர்வு மண்டலமாக செயல்படுகிறது.
மனிதர்களின் வாசனை நுகரும் சக்திக்கும் அவர்களின் வாழ்நாளுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவின் சிகாக்கோ யுனிவர்சிட்டி ஆஃப் மெடிக்கல் டிபார்ட்மெண்ட் விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 57 முதல் 85 வயதுள்ள 3000 க்கும் மேற்பட்டவர்களை வாசனை நுகரும் ஆய்வுக்கு உட்படுத்தியதில் வாசனையை நுகரும் தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் அடுத்த 5 வருடங்களுக்குள் 39 சதவீதம் பேர் இறந்து போவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. (பொதுவாக வாசனை நுகரும் டெஸ்டில் ரோஜா, பெப்பர் மின்ட், ஆரஞ்சு மற்றும் மீன் வாசனைகளை நுகரும்படி செய்வார்கள்.)