ஐந்து ரூபாய்க்கு தாகூர் தரிசனம்! கல்கிக்கு ஏற்பட்ட அனுபவம்!

ரவீந்திரநாத் தாகூர்
ரவீந்திரநாத் தாகூர்

மது வாழ்க்கையில் ஏற்பட்ட சில அதிசய சந்திப்புகளைப் பற்றி கல்கி, சொன்னதுண்டு. ராஜாஜியின் தொடர்பும் அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்று என்று கூறலாம். அந்தத் தொடர்பின் பயனாக எத்தனை அரிய நிகழ்ச்சிகள்!அவற்றில், "முற்பிறப்பில் செய்த புண்ணியத்தின் பயனாகும் இந்தப் புனித யாத்திரை" என்று கல்கி குறிப்பிட்டது, அவர் ராஜாஜியின் அன்புச் சைகை ஒன்றின் காரணமாக, கவி தாகூரின் சாந்திநிகேதனுக்குத் தமிழ் நூல்களைப் பரிசளிப்பதற்காக, 1947ல் மேற்கொண்ட பயணம்.

கீதாஞ்சலிக் கவிஞரை முதன்முதலாகக் கல்கி தரிசித்த விவரத்தை இங்கு காண்போம்.

அபூர்வமாய் இசைந்ததொரு செயலாய், ராஜாஜியை முதன் முதலாகக் கண்ட அதே திருச்சி நகரில், சுமாராய் அதே காலத்தில், வங்கக் கவிக் கொண்டலையும் பள்ளி மாணாக்கன் கிருஷ்ணமூர்த்தி கண்டான்.

ஒரு நாள் மாலை அவன் பள்ளிக்கு வெளியே சென்றபோது, கவி ரவீந்திரநாத் தாகூர் நகருக்கு வருகை புரியப் போவது பற்றிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தான். நோபல் பரிசுபெற்று உலகப் புகழ் சூடிய கவிஞர்! மகாத்மா காந்தியே "குருதேவ்" என்று வணங்கிய உத்தமர்! அப்பேர்ப்பட்டவர் தன் ஊருக்கு வருகிறார் என்றால்! இளைஞனின் உள்ளத்தில் வியப்பும் ஆவலும் பொங்கி எழுந்தன. ஆனால் அந்த விளம்பரத்தின் அடிப் பாகத்தில் இருந்த ஒரு விவரத்தைப் பார்த்ததும் சோர்ந்தது அவன் மனம். கவிஞரின் உரையைக் கேட்பதற்குக் கட்டணம் உண்டு என்பதே அந்த விவரம். அதுவும் எவ்வளவு? ஐந்து ரூபாய்! சாந்திநிகேதன் நிதிக்காக அந்தக் கட்டணமாம்.

இதையும் படியுங்கள்:
ஜம்மு-காஷ்மீர் போறீங்களா? இந்த 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
ரவீந்திரநாத் தாகூர்

அந்தக் காலத்தில் ஐந்து ரூபாய் என்பது பண வசதி உள்ளவர்களுக்கே பெரிய தொகை. ஓர் ஏழை மாணவனுக்கோ அசாத்தியமானது. எவ்வளவு அசாத்தியமாயிருந்தாலும், எப்படியாவது அந்த வண்ணக் கவிக் கொண்டலைப் பார்த்துவிட வேண்டும். அந்தக் கொண்டலின் சொற்பொழிவைக் கேட்டுவிட வேண்டும் என்று துடித்தான் இளைஞன் கிருஷ்ணமூர்த்தி. கைச்செலவுக்காகக் கிராமத்திலிருந்து அண்ணா அனுப்பியிருந்த சிறு தொகையில் ஐந்து ரூபாய் மீதம் இருந்தது. இன்னும் பல நாட்களுக்குக் கையில் காசில்லாமல் திண்டாடினாலும் பாதகம் இல்லை என்று எண்ணி, தன் கையிருப்பு முழுவதையும் கொடுத்து ஒரு நுழைவுச் சீட்டை வாங்கிக்கொண்டான். ஓர் ஆங்கிலச் சொலவடையையொட்டிக் கல்கியே பின்னர் சொன்னதுபோல், தன்னைத் தானே திருடிக்கொண்டான்!

பல நாட்களுக்கான சுக சௌகரியங்களைத் துறந்து அன்றைய தினம் கவி தாகூரைத் தரிசனம் செய்ததைப் பற்றி, சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1947 கல்கி தீபாவளி மலரில் கல்கி எழுதினார்:

அமரர் கல்கி...
அமரர் கல்கி...

“ரவீந்திரர் எந்த வழியாக அந்த மண்டபத்தில் பிரவேசித்துப் பிரசங்க மேடைக்குச் செல்வார் என்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அந்த வழியை ஒட்டினாற்போல் இருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டேன்.

நான் ஏமாந்து போகவில்லை. அந்த வழியாகவே சற்று நேரத்துக்கெல்லாம் டாக்டர் தாகூர் முன்னும் பின்னும் உள்ளூர்ப் பிரமுகர்கள் புடைசூழ மேடைக்குச் சென்றார். தாகூர் என் பக்கமாய்ச் சென்றபோது, அவர் உடுத்தியிருந்த வெண்பட்டு வஸ்திரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டேன்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com