
தாம்பரம் ரயில்வே சந்திப்பு அதிக நடைமேடைகளுடன் (Platforms) புதுப் பொலிவு பெற்று விளங்குவதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே! அங்கிருந்து புதிய பல ரயில்கள் இயக்கப்படுவதால், விரைவாக வளர்ந்து வரும் சென்னை புற நகர்ப் பகுதி மக்கள் மிகுந்த பயன் அடைந்து வருவதும் கண்கூடு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் சந்திப்பு என்பதாலும் தாம்பரம் சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
ம்! எல்லாம் சரிதான்; ஆனால், அங்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டு, பயணிகள் தங்கள் பயணங்களைச் சிரமம் ஏதுமின்றி மேற்கொள்கிறார்களா என்று கேட்டால், இன்னும் சில வசதிகள் தேவைப்படுகின்றன என்பதே பதிலாக இருக்கிறது.
என்னென்ன தேவை என்று பார்ப்போமா?
*பழைய பயணியர் நடை மேம்பாலம் மூலமே நடைமேடைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதுவோ, பெருங்களத்தூர் பக்கம் அமைந்துள்ளது. ஆனால் நடைமேடைகளின் அமைப்பு சானடோரியம் பக்கமே நீண்டு கிடக்கிறது. நடை மேம்பாலத்திற்கு அருகில் எஞ்சின்கள்தான் நிற்கின்றன. பெரும்பாலான விரைவு ரயில்கள் 7,8,9,மற்றும் 10 ஆம் நடைமேடைகளில் இருந்தே புறப்படுகின்றன. விரைவு ரயில்கள் 17 லிருந்து 22 பெட்டிகளைக் கொண்டனவாக உள்ளன. அவற்றின் உயர் வகுப்புப் பெட்டிகள், பெரும்பாலும் ரயிலின் கடைசி நான்கைந்தாகவே உள்ளன. பயண நலன் கருதி உயர் வகுப்புப் பெட்டிகளில் பயணம் செய்யும் வயதானவர்கள், சானடோரியம் நோக்கி அதிக தூரம் நடக்க வேண்டியுள்ளது! அது மிகுந்த சிரமம் அளிக்கிறது.
‘பாட்டரி கார்கள் உண்டே!’ என்பார்கள். இலவசம் என்று அறிமுகப்படுத்தி, இப்பொழுதோ ரூ 20/-, 30/- என்கிறார்கள். அவையும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. அவற்றில் சூட்கேஸ்களை ஏற்ற, போர்ட்டர்கள் ஒத்துக் கொள்வதில்லை! மேலும் நம்மில் பெரும்பாலானோர் ‘நடைமேடையைக் கடக்கவே பணமா?’ என்ற மைன்ட் செட்டிலேயே உள்ளவர்கள்.
எனவே, நடுவிலோ அல்லது சானடோரியம் சைடிலோ, எல்லோருக்கும் நன்கு பயன்படும் இடமாகப் பார்த்து நடை மேம்பாலம் அமைத்தால் பயணியரின், குறிப்பாக வயதானோரின் இடர் குறையும்!
*கழிவறைகளும் பெருங்களத்தூர் சைடிலேயே உள்ளன. அவையும் வளர்ந்து விட்ட பயணியர் எண்ணிக்கைக்குத் தக்க அளவில் போதுமானதாக இல்லை. சானடோரியம் சைடில் சிலவற்றை அமைப்பது பயணியருக்குப் பெரும் பயன் தருபவையாக அமையும்!
*முன்பெல்லாம் ‘கோச் பொசிஷன்’, 7,8 ஆம் நடைமேடைகளின் நடுவில் இருந்த விபரப் பலகையில், வண்டிகளின் எண் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்டு தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கும். இப்பொழுதோ வண்டிகள் வரும் நடைமேடையின் எண்ணும், கோச் பொசிஷனும் மைக்கில் அறிவிக்கப்படுகின்றன. அதுவும் வண்டிகள் வருவதற்கு அரை மணி நேரம் முன்பாக மட்டுமே! அப்படி அறிவிக்கையில், வண்டிகள் வந்து விடுவதாலும், பயணியரின் இரைச்சலாலும் அவற்றைச் சரியாகக் கேட்க முடிவதில்லை.
ஓரிடத்தில் மட்டுமே உள்ள சிறிய டிஜிடல் திரையிலும் விபரங்களைக் காண்பது சிரமமாகவே உள்ளது. எனவே, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ளது போல, பெரிய டிஜிடல் போர்டை ஏழு, எட்டாம் நடைமேடைகள் ஆரம்பிக்கும் இடத்தில் பொருத்தினால் பயணியருக்கு மிக உதவியாக இருக்கும்.
*அது போலவே,கோச் பொசிஷனை ஒலி பெருக்கியில் அறிவிக்கும் போதும், பல இடையூறுகள் காரணமாகப் பலரால் சரியாகக் கேட்க முடிவதில்லை. வயதான நம்மில் பலர் கேட்கும் திறன் பாதிப்படைந்தவர்கள் என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். எனவே, முன்பு போலவே விபரப் பலகையில் வண்டி எண் மற்றும் பெயருடன் கோச் பொசிஷனைத் தெளிவாகக் குறிப்பிடுவதால் அனைத்துப் பயணியரும் பயனடைவர். வயதான பலர் ஒருமணி நேரம் முன்பாகவே கூட நடைமேடைக்கு வந்து விடுகின்றனர். அவர்கள் ஒலி பெருக்கி அறிவிப்பிற்காகக் காத்திராமல், விபரப் பலகையைப் பார்த்து, தங்கள் கோச் வருமிடத்திற்குச் சென்று அமர வசதியாக இருக்கும். அரக்கப் பரக்க ஓட வேண்டிய அவசியம் ஏற்படாது. அமைதியாக அவர்கள் தங்கள் பெட்டிகளில் ஏறிப் பயணம் செய்யலாம்.
*நடைமேடைகளில் வழவழப்பான பளிங்குக் கற்கள் (Tiles) பதிப்பதை விடுத்து, சொர சொரப்பான டைல்களைப் பதித்தால், அனைத்துப் பயணியருக்கும் பயணம் பாதுகாப்பாக அமையும்!
நமது தாம்பரம் ஜங்க்ஷனில் மேற்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டால், பயணியருக்கு வரப்பிரசாதமாக அமைந்து, அவர்கள் பயணங்களை மேலும் எளிதாக்கி இனிமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை!