
அது ஒரு ஒதுக்குப்புறமான தோட்டம். தங்கள் பிள்ளைகளை ஜெர்மனியில் வேலைக்கு அனுப்பிவிட்ட நிம்மதியிலும் முதியோர் காதலை அனுபவிக்கும் இன்பத்திலும் திளைத்திருந்தார்கள் அவர்கள். பிள்ளைகள் சம்பாத்தியத்தில் காதிலும் கழுத்திலும் கனத்த நகைகள் தங்கள் வசதியையும் மேன்மையையும் பறைசாற்றிப் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன, அடுத்தவர் கண்களுக்கு!
அவற்றை எப்படியும் கொள்ளை அடித்துவிடுவது என்ற எண்ணத்தில் குறி வைத்து, திட்டம் வகுத்துக் காத்திருந்தது முதியோர்களை மட்டுமே குறிவைத்து நகை பறிக்கும் தொழிலில் ஈடுபடும் கும்பல்!
அன்று அமாவாசை..! கும்மிருட்டில் அந்த முதிய ஜோடிகள் கரும்புத் தோட்டத்துக்குத் தண்ணீர் விட்டுவிட்டுத் திரும்பி வந்த களைப்பில் படுத்து உறங்கிப் போகையில், ஞாபகம் வரவில்லை அவர்களுக்கு 'சீசர்' நாய்க்குச் சாப்பிட எதுவும் வைக்கவில்லை என்பது. அவர்கள் உண்ட களைப்பில் உறங்கிப் போக...
அந்தத் திருடர்கள் விஷம் கலந்த பிரியாணிச் சிக்கனை இலையோடு விரித்து 'சீசர்' நாய்க்கு கூண்டருகே வைத்து விட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.