
வெளியே சுழன்றடிக்கும் சூறாவளியின் உக்கிரத்தை வீட்டுக்குள் இருந்தபடியே உணர முடிந்தது. மழையின் இரைச்சலும் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருந்தது. வீட்டின் மாடி ஜன்னலின் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தான் மாறன். மாலை ஆறு மணிக்கே வெளியே இருள் படரத் தொடங்கிவிட்டது. பக்கத்து வீடுகள் எல்லாம் மங்கலாக தெரிந்தன. காற்றின் வேகத்தை மீறிக்கொண்டு அடர்த்தியாக விழும் மழையின் இரைச்சல் காதை வந்து அடைத்தது. மழையின் கோடுகள் வெள்ளியாய் மின்னின.
இரண்டு வாரமாகவே ஆஸ்திரேலிய அரசு புயல்பற்றிய எச்சரிக்கையைத் தந்து கொண்டுதான் இருந்தது. தொலைக்காட்சியில் பிரதான செய்தியாகவே ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள். பிரிஸ்பேன் நகரில் எந்த எந்த இடங்கள் புயலால் தாக்கப்படக்கூடும் என்ற விபரங்களும் மாறி மாறி சொல்லியபடி இருந்தார்கள். கடற்கரையோரப் பிரதேசங்களுக்கு அதிக எச்சரிக்கை தரப்பட்டது. மழை அங்கிகளை அணிந்து கொண்டு மழைக்குள் நனைந்தபடி ஒலிவாங்கியை கையில் வைத்துக் கொண்டு செய்தியாளர்கள் நிகழ்வுகளைக் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தார்கள். பாடசாலைகள், அலுவலகங்கள் அத்தனைக்கும் அரசு விடுமுறை அறிவித்திருந்தது.